லக்கிம்பூர் கேரி தலித் சிறுமிகளின் மரணம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சொல்வது என்ன - கள நிலவரம்

லக்கிம்பூர் கேரி
    • எழுதியவர், பிரசாந்த் பாண்டே
    • பதவி, லக்கிம்பூர் கேரியிலிருந்து பிபிசி செய்திகளுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: இந்த களநிலவர அறிக்கையில் உள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடும்.

"என் மகள்களை ஏன் கொன்றார்கள், என் மகள்கள் எங்கே போனார்கள்?" உறவினர்கள் ஆறுதல் கூறினாலும், தன் மகள்கள் இப்படி இறந்ததை நம்ப அந்தத்தாயின் இதயம் தயாராக இல்லை.

"இருவரின் உயிரையும் ஏன் பறித்தார்கள்", "எல்லோரையும் தூக்கிலிட வேண்டும்", "காவல்துறையினரும் கூட்டு சேர்ந்துள்ளனர்" இப்படிச் சொல்லிக்கொண்டே மயங்கிக் கீழே சரிகிறார் தன் இரண்டு மகள்களையும் பறிகொடுத்த தாய்.

வியாழக்கிழமை முழுவதும் இந்தக் குடும்பத்தின் நிலை இதுதான். கூலிவேலை செய்யும் தந்தை பிரேத பரிசோதனைக்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தார், தாய் அழுது அழுது மோசமான நிலையில் இருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்புணர்வு மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Banner

லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட தலித் சிறுமிகள்

- இரண்டு சிறுமிகளும் சகோதரிகள்

- சிறுமிகளின் வயது 15 மற்றும் 17.

- மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

- பிரேத பரிசோதனை அறிக்கையில் வன்புணர்வு மற்றும் கழுத்தை நெரித்தது உறுதி

-இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்

Banner

பிரேத பரிசோதனைக்கு பின் வந்துசேர்ந்த உடல்கள்

வியாழக்கிழமை மாலை மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு இரு சிறுமிகளின் உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்தது. வீடியோவும் எடுக்கப்பட்டது. இதன் பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உடல்கள் லக்கிம்பூர் கேரியில் இருந்து அவர்களது கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்குகளை நடத்தத்தயாராக இல்லை.

உள்ளூர் நிர்வாகத்திற்கும் குடும்பத்தினருக்கும் இடையே எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் ஏற்படும் வரை இரு சகோதரிகளின் (15 மற்றும் 17 வயது) உடல்களும் தகனம் செய்யப்படவில்லை.

நிகாசன் துணைக்கோட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் லக்கிம்பூர் கேரி ஏஎஸ்பி அருண் குமார் சிங் ஆகியோர் இறந்த சிறுமிகளின் தந்தையிடம் எழுத்துப்பூர்வ உத்தரவாதக் கடிதத்தை வழங்கினர்.

(எஸ்சிஎஸ்டி சட்டத்தின் கீழ்) இரு சிறுமிகளுக்கும் செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் அதாவது நாளை (வெள்ளிக்கிழமை)க்குள் தலா எட்டு லட்சம் ரூபாய் அதாவது மொத்தம் 16 லட்சம் ரூபாயை வங்கியில் பரிமாற்றம் செய்ய இந்த ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ராணி லக்ஷ்மிபாய் யோஜனா திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கவும், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு வீடு மற்றும் ஒரு குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை அளிப்பது தொடர்பாகவும் அரசுக்கு கடிதம் எழுதப்படும். இது தவிர, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு மற்றும் விரைவான தண்டனை வழங்குவதற்காக விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு வாதிடப்படும்.

இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் குடும்பத்தினருடன் மூடிய அறையில் பேசினார். பின்னர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன.

கிராம நிலை
படக்குறிப்பு, கிராமத்தின் நிலை

வீட்டின் சூழல்

லோஹியா வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள இந்த சிறுமிகளின் இல்லத்தில் உறவினர்கள், போலீசார் மற்றும் ஊடகவியலாளர்கள் கூட்டம் கூடியிருந்தது.

லக்கிம்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில், சிறுமிகளின் வீட்டின் வெளியே அலறல்கள் மற்றும் அழுகை ஒலியுடன் இருண்ட சூழல் நிலவியது. அவ்வப்போது கார் மற்றும் சைரன் ஒலிகள் இந்த ஓசைகளை சற்று அமைதிப்படுத்தின..

கிராமத்தின் வடக்கே கரும்பு தோட்டங்களுக்கு அருகில் இந்தக்குடும்பத்தின் வீடு உள்ளது. இந்த கரும்பு தோட்டத்தின் ஒரு மரத்தில் இந்த இரண்டு மைனர் சிறுமிகளும் தூக்கில் தொங்கிய நிலையில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர். கரும்பு தோட்டத்தில் உள்ள மரத்தில் ஒரே துப்பட்டாவில் இரு சகோதரிகளின் உடல்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

"மாலை 4.30 மணி முதல் சிறுமிகளை தேடினர். முதலில் கிராமத்தை சேர்ந்த நாலைந்து பேர் தேடினர். சிறுமிகள் கிடைக்காததால் 15-20 பேர் தேடுவதில் ஈடுபட்டனர். கரும்பு தோட்டத்தில் உள்ள மரத்தில். சகோதரிகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்,"என்று அந்த கிராமத்தைச்சேர்ந்த ராஜு கூறினார்.

தாயின் புகாரின் பேரில் போலீசார், கொலை, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தது மற்றும் POCSO சட்டம் ஆகியவற்றின் கீழ் நிகாசன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

"பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள் தன் மகள்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்" என்று சிறுமிகளின் தாய் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாருக்குப் பிறகு, அந்தப் பகுதியின் ஐ.ஜி. லக்ஷ்மி சிங், லக்கிம்பூருக்கு வந்து விசாரணையைத் தொடங்கினார். சம்பவ இடத்திற்கும் அவர் சென்றார்.

"கிராமத்திற்கு அருகிலுள்ள லால்பூர் கிராமத்தில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் இதைச்செய்துள்ளனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனும் அவர்களுக்கு உதவி செய்துள்ளான்," என்று லக்கிம்பூர் கேரியின் எஸ்பி சஞ்சீவ் சுமன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள்
படக்குறிப்பு, சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள்

காவல்துறையின் கருத்து குறித்து சகோதரர்கள் கேள்வி

சிறுமிகளின் குடும்பம் சாதாரண தொழிலாளர் குடும்பம். தந்தையிடம் நிலம் இல்லை. லோஹியா விட்டுவசதி திட்டத்தின் கீழ், அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது இந்தக் குடும்பத்திற்கு இரண்டு அறைகள் கொண்ட உறுதியான வீடு கிடைத்தது.

கிராமத்தின் மக்கள் தொகை சுமார் இரண்டாயிரம் ஆகும். இதில் தலித்துகளின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் பெரும்பாலான குடும்பங்கள் நிலமற்ற கூலித் தொழிலாளிகள் மற்றும் அன்றாட கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்துகின்றவர்கள்.

சிறுமிகளின் இரண்டு சகோதரர்கள் டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். மூத்த சகோதரிக்கு திருமணமாகி அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கிறார். புதன்கிழமை இரு சகோதரர்களும் டெல்லியில் இருந்தனர். தந்தை கூலிவேலைக்கு சென்றிருந்தார். தாய் தனியாக இருந்தார். பைக்கில் வந்த சிறுவர்கள் சிறுமிகளை பைக்கில் ஏற்றிச்சென்றனர் என்று தாய் கூறினார்.

சிறிது நேரம் கழித்து சிறுமிகளை தேடும் பணி தொடங்கியது. லால்பூர் கிராமத்தை நோக்கிய பிரதான அத்பனி சாலையில் உள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

லால்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து குற்றம் சாட்டப்பட்டவர்களையும், சிறுமிகளின் கிராமத்தைச் சேர்ந்த ஒருரையும் லக்கிம்பூர் கேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

"ஜூனைத் மற்றும் அவரது நண்பர்களுடன் சிறுமிகளுக்கு சமீப காலமாக நட்பு இருந்தது. அவர்கள் பேசி ஏமாற்றி சிறுமிகளை அழைத்துச்சென்றுவிட்டனர். முதலில் பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை நெரித்து கொன்று, துப்பட்டாவால் தூக்கிலிட்டனர். அதன் பிறகு மேலும் இரண்டு கூட்டாளிகள் அழைக்கப்பட்டனர். இந்த உண்மைகள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆடைகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது,"என்று எஸ்பி சஞ்சீவ் சுமன் கூறினார்.

டெல்லியில் இருந்து இரவு முழுவதும் பயணம் செய்து காலை ஒன்பது மணிக்கு கிராமத்தை அடைந்த சிறுமிகளின் சகோதரர்கள், போலீஸாரின் கூற்றை நிராகரித்தனர். " சகோதரிகள் இருவரும் சம்மதத்துடன் அவர்களுடன் சென்றதாக காவல்துறை சொல்கிறது. அப்படியிருக்கும்போது அந்த சிறுவர்கள் அவர்களை ஏன் கொன்றார்கள்? எங்களுக்கு விளங்கவில்லை," என்று இரு சகோதரர்களும் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கைக்கூப்பி "தயவுசெய்து எங்களை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் சொல்வது என்ன ?

லால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் இந்தக் கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்த சகோதரிகளின் கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் லால்பூர் கிராமம் உள்ளது.

முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜுனைத்தின் (காவல்துறையினரின் கூற்றுப்படி) 65 வயதான தாத்தா, வீட்டில் போர்வையை போர்த்தியபடி அமைதியாக அமர்ந்திருந்தார்.

"என் பேரன் ஹைதராபாத்தில் கிரில் மேக்கராக வேலை பார்க்கிறான். ஆறு மாதங்களுக்கு முன் அங்கு சென்றான். முஹர்ரம் பண்டிகைக்காக இங்கே வந்தான். நேற்று பை வாங்க தமோலிபுர்வா சென்று நான்கு மணிக்கு திரும்பி வந்தான். ஜுனைத் டெல்லி செல்ல டிக்கெட் வாங்கியிருந்தான். பின்னர் கிளம்பிவிட்டான். இரவு 11 மணியளவில் போலீசார் வந்து ஜுனைத்தின் தந்தை இஸ்ரேய்லை அழைத்துச் சென்றனர். இஸ்ரேய்லை போன்செய்ய வைத்து ஜுனைத்தை வரவழைத்தனர். அதன் பிறகு இந்த சம்பவம் நடந்ததை அறிந்தோம்," என்று அவர் கூறினார்.

தனது பேரனின் ஆதார் அட்டையைக் காட்டி, "இந்தச் சிறுவர்களை போலீஸார் சிக்க வைக்கிறார்கள். அனைவரும் மைனர்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு சற்று தூரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களின் வீடுகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கூலிவேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குஜராத் மற்றும் ஐதராபாத்தில் பணிபுரிகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இருவரின் பாட்டி தனது துப்பட்டாவால் கண்ணீரைத் துடைத்தபடி,"இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் போலீஸ் வந்து அழைத்துச் சென்றது," என்று கூறுகிறார்.

குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரின் தாய், "என் மகன் நேற்று சாமான் வாங்கச்சென்றிருந்தான். உடனே திரும்ப வந்துவிட்டான். அவனுக்கு காய்ச்சல் இருந்தது. என் மகன் இப்படி செய்திருக்கமாட்டான். போலீஸ் மாட்டிவிடுகிறது," என்றார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, லால்பூர் கிராமத்தில் ஒருவிதமான அமைதி நிலவுகிறது. சைரன் ஒலியுடன் வரும் போலீஸ் ஜீப்புகள் இந்த அமைதியை குலைக்கின்றன. கிராமத்தின் தெற்கில் வசிக்கும் ஜமீல் என்ற முதியவர், " நேற்று போலீஸ் ஜீப்கள் வரத் தொடங்கியபோதுதான் எங்களுக்கும் விஷயம் தெரிந்தது,"என்றார்.

"இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இரண்டு கிராமங்களுக்கிடையிலான உறவுகள் நிச்சயமாக மோசமடையும். நடந்தது தவறுதான். எல்லோரும் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம்" என்று ஜமீல் கூறுகிறார்.

கிராமத்தில் கூடும் அரசியல் கட்சியினர்

சகோதரிகளின் கொலை சம்பவத்தை தொடர்ந்து உத்திரபிரதேச அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் யோகி அரசை குறிவைத்து ட்வீட் செய்துள்ளார். அதே நேரத்தில், பிரியங்கா காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் , மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜூஹி சிங் தலைமையில் ஒரு குழு கிராமத்தை அடைந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் கொண்ட குழுவும் குடும்பத்தினரை சந்தித்தது.

இருப்பினும் அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளது.

காணொளிக் குறிப்பு, கண்ணெதிரே மயங்கிய நோயாளியை ஓடிவந்து காப்பாற்றிய மருத்துவர் - சிசிடிவி காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: