சென்ட்ரல் விஸ்டா: நரேந்திர மோதி திறந்து வைத்த நேதாஜி சிலை, கடமை பாதை - 10 தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புதிய சென்ட்ரல் விஸ்டா அவென்யூவின் அங்கமாக 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான புதுப்பிக்கப்பட்ட கர்தவ்ய பாதையை (ராஜ பாதை) இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "இன்று இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஆங்கிலேயர்களின் பிரதிநிதி ஒருவரின் சிலை இங்கு இருந்தது. நேதாஜியின் சிலை நிறுவப்பட்டதன் மூலம், அதிகாரம் பெற்ற இந்தியாவுக்கான புதிய பாதையை நிறுவியுள்ளோம்," என்று தெரிவித்தார்.

காலனித்துவத்தின் சின்னமான 'கிங்ஸ்வே' ஒரு வரலாறாக இருக்கும். அது நிரந்தரமாக அழிக்கப்பட்டு விட்டது. கர்தவ்யபத் வடிவத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. காலனித்துவத்தின் மற்றுமொரு அடையாளத்திலிருந்து நாம் வெளிவரும்போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறுகிறேன் என்றும் நரேந்திர மோதி கூறினார்.

'கர்தவ்ய பாதை' என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ உள்ள பாதையை பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை இரவு திறந்து வைத்தார். சென்ட்ரல் விஸ்டா அவென்யூ - குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பு உட்பட பல முக்கிய நிகழ்வுகள் இந்த இரு முக்கிய கட்டடங்களை இணைக்கும் பாதையில்தான் நடக்கும்.

வியாழக்கிழமை நிகழ்வின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவின் அங்கமாக புதுப்பிக்கப்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு கலாசார விழாவை நடத்த இந்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கிறது. நேதாஜி சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து ட்ரோன்கள் வானில் பறந்து ஒளிரூட்டும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சென்ட்ரல் விஸ்டா அவென்யூ, நேதாஜி சிலை திறப்பு, கடமை பாதை தொடர்பான பின்னணி தகவல்களை அறிய இந்த 10 முக்கிய தகவல்கள் உங்களுக்கு உதவலாம்.

1) 28 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள நேதாஜி சிலை, சென்ட்ரல் விஸ்டா பகுதியில் உருவாகி வரும் இரண்டு மாடி கட்டடங்களை விட சற்று உயரமானது. நேதாஜியின் சிலையை செதுக்க கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் தலைமையிலான சிற்பக் கலைஞர்கள், 26 ஆயிரம் மணி நேர மனித உழைப்பை செலுத்தியுள்ளனர். 280 மெட்ரிக் டன் எடையுள்ள ஒற்றை கிரானைட் தொகுதியிலிருந்து இந்த சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 100 அடி நீளம் கொண்ட 140 சக்கரங்களைக் கொண்ட டிரெய்லர் டிரக் மூலம் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் இருந்து சிலை செதுக்குவதற்கான கிரானைட் கல் கொண்டு வரப்பட்டது.

அளவில் சிறியது, அடையாளம் பெரியது

2) இந்தியாவில் உள்ள மற்ற நினைவுச்சின்னங்களை ஒப்பிடும்போது, கடமை பாதையில் உள்ள நேதாஜி சிலையின் உயரம் மிகவும் சிறியது. இதற்கு முன்பு குஜராத்தின் கேவாடியாவில் திறக்கப்பட்ட நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக எழுப்பப்பட்ட 'சர்தார் வல்லபபாய் படேல் சிலை' கிட்டத்தட்ட 597 அடி உயரம் கொண்டது.

3) சுமார் 20 மாதங்களாக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் அங்கமாக பல்வேறு அரசு அலுவலகங்கள் எழுப்பப்பட்டு வருவதால், ராஜபாதையின் பெரும்பாலான பகுதிகள் வழியாக மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடமை பாதை, அதை ஒட்டிய சில பகுதிகள், இந்தியா கேட் ஆகியவை இனி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டப்பகுதிகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 8 ஆம் தேதி திறக்கப்படுவதால், இந்தியா கேட் மற்றும் ராஜபாதை புல்வெளிகளுக்கு வருபவர்கள் இந்த புதிய வசதிகளை இனி அனுபவிக்கலாம்.

4) புதுக்கப்பட்டுள்ள கர்தவ்ய பாதையில் இரு புறங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ஐஸ்கிரீம் விற்பனையகங்கள், பிற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சிறு கடைகள், பார்வையாளர்களின் வசதிக்காக புதிய வாகன நிறுத்துமிடங்கள்; 400க்கும் மேற்பட்ட பெஞ்சு வசதிகள்; பொது நிகழ்ச்சிகளுக்கான ஆம்பிதியேட்டர்கள்; பெண்களுக்கு 64 கழிவறைகள், ஆண்களுக்கான 32 கழிவறைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக வசதியுடன் கூடிய 10 கழிவறைகள்; தடையில்லா குறுக்குப்பாதைகள்; 16 நிரந்தர நடைபாதை பாலங்கள், 16.5-கிமீ தூரத்துக்கான பாதசாரிகள் நடைபாதைகள் திறக்கப்படும்.

5) முன்னதாக, புது டெல்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) புதன்கிழமை மாலையில் கூடி, ராஜபாதை சாலையை 'கர்தவ்ய பாதை' என மறுபெயரிடுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும் என்டிஎம்சி உறுப்பினருமான புதுடெல்லி எம்பி மீனாட்சி லேகி இது குறித்து கூறுகையில், "கர்தவ்யா பாதை திறப்பு விழாவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இது ஓர் சிறந்த தருணம்," என்றார்.

6) 'கர்தவ்யா பாதையின்' இரு புறங்களிலும் பசுமையான புல்வெளிகள், 16.5 கிமீ தூரத்துக்கு உள்ளன. அங்காங்கே சிவப்பு கிரானைட் நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட கால்வாய்கள், பழுதுபார்க்கப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட முகப்புப் பகுதிகள், பொது வசதிகள், சிறப்பு விற்பனையகங்கள் மேம்படுத்தப்பட்டு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல் விஸ்டாவில் இடம்பெறும் கட்டடங்கள்

7) சென்ட்ரல் விஸ்டா திட்டம் 2019இல் அறிவிக்கப்பட்டபோதே அது தொடர்பாக எதிர்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன, அதிக செலவினம் பிடிக்கும் இந்த திட்டத்துக்காக கொரோனா பெருந்தொற்றுக்காக பயன்படுத்த வேண்டிய நிதியைக் கூட மத்திய அரசு செலவிட்டதாக எதிர்கட்சிகள் கூறின. ரூ. 13,600 கோடியில் மதிப்பிடப்பட்டு, பிறகு ரூ.20,000 கோடி வரை நீண்டுள்ள சென்ட்ரல் விஸ்டா திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய நாடாளுமன்ற கட்டடம், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர்களின் அறைகள், அதே வளாகத்தில் பிரதமர், மத்திய அமைச்சர்களின் அறைகள், அரசியல் கட்சிகளின் அறைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

8) இந்த திட்டத்தின் அங்கமாக பல்வேறு அரசுத்துறைகளின் அலுவலகங்கள் இடம்பெற்ற சென்ட்ரல் செக்ரட்டேரியேட் வளாகத்தில் 10 மாடி கட்டடங்களுடன் அமையவுள்ளன. இது தவிர, தேசிய ஆவண காப்பக கட்டடம் (பாரம்பரிய கட்டடம் தவிர), புதிய இந்திரா காந்தி தேசிய கலை மையம், பாதுகாப்பு அதிகாரிகளுக்கான கட்டுப்பாட்டு அறைகள், ஓய்வு அறைகள், இந்திய குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான அலுவல்பூர்வ இல்லங்கள், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், தெற்கு மற்றும் வடக்கு பிளாக் அலுவலகங்கள் போன்றவை இந்த வளாகத்தில் இடம்பெறவுள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2026ஆம் ஆண்டு வரை படிப்படியாகவும் ஒன்றன் பின் ஒன்றாகவும் செயல்வடிவம் பெற திட்டமிடப்பட்டுள்ளன.

9) தற்போதைய நிலவரப்படி இரண்டு திட்டங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. முதலாவது திட்டம், ரூ. 862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம், இரண்டாவது திட்டம், ரூ.477 கோடியில் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ அமையும் பகுதியை மறுமேம்பாடு செய்தல். இந்தப் பணிகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த 2 திட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செய்யப்பட்ட செலவு ரூ.195 கோடி. இதைத்தொடர்ந்து 2021-22க்கான நிதிநிலை அறிக்கையில், திட்டத்துக்காக கூடுதலாக ₹790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

10) தற்போதைய செளத் பிளாக், நார்த் பிளாக் கட்டுமானங்கள் அமைந்துள்ள சுமார் 80,000 சதுர மீட்டர் (பயன்படுத்தக்கூடிய காட்சிப் பகுதி) அரசு இடங்கள் பொது இடமாக மக்கள் பார்வைக்கு திறக்கப்படும். தற்போது அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் 2.25 ஹெக்டேர் பொது மற்றும் பகுதியளவு நிலங்கள் பசுமையான இடங்களாக மாற்றப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: