கிருஷ்ணகிரி பள்ளியில் சத்துணவு கூடமாக மாறிய கழிவறைகள் - என்ன காரணம்?

- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு கூடங்கள் முறையாக கண்காணிக்கப்படாத நிலையில், போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தால், கழிவறைக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சில கூடங்கள் இயங்கி வருவதாக தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்திற்கு சமையலறை தனியே கட்டப்படவில்லை. இதனால் இன்றளவும் கழிவறைக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கப்படுகிறது.
மேல்நிலை பள்ளியாக பள்ளியை தரம் உயர்த்திய பிறகு புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களில் சத்துணவு கூடத்துக்கு என்று தனியாக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படவில்லை என தன் பெயர் வெளியிட விரும்பாத சத்துணவு பணியாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அந்த ஊழியர் மேலும் பல விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.
"ஓசூரை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளி உயர்நிலை பள்ளி அந்தஸ்தில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சத்துணவு கூடத்துக்கு என பிரத்யேகமாக கட்டடம் ஏதும் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், பள்ளிக்கு பின்புறமாக மாணவர் பயன்பாட்டுக்கு இல்லாத புதிதாக கட்டப்பட்ட கழிவறையை சமையல் கூடமாக மாற்றினோம். மேலும் சத்துணவுக்கு தேவையான காய்கறிகள் அரிசி பருப்புகள் உள்ளிட்ட மளிகை சாமான்களை தனித்தனி கழிவறை அறைக்குள் பாதுகாத்து வைத்துள்ளோம். இந்த கழிவறை வளாகத்தின் வெளியே உள்ள செப்டிக் கழிவுநீர் தொட்டி அருகிலேயே மாணவர்களுக்கு சமையல் செய்யும் நிலை இன்றும் தொடர்கிறது," என்கிறார் அந்த ஊழியர்.


சூடான சத்துணவை தலையில் சுமக்கும் ஊழியர்கள்

"இந்த பள்ளியில் மட்டுமல்ல, பல கிராமங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் கூட தொடர்பே இல்லாத வேறொரு இடத்தில் சமைக்கப்படும் உணவுகளை மாணவர்களுக்கு பரிமாறும் நிலை உள்ளது. அத்துடன் சமையல் பணி உதவியாளர்கள் சூடான உணவுப் பொருட்களை தலப்பாகை வைத்து மிகவும் ஆபத்தான முறையில் தலைமீது சுமந்து சென்று மாணவர்களுக்கு இன்றும் பரிமாறுகிறார்கள்," என்கிறார் சத்துணவு பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மலர்விழி.
சத்துணவு திட்டத்துக்காக எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் திட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனாலும், போதிய நிதி ஒதுக்காததால், எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக விறகுகளைப் பயன்படுத்தி சத்துணவு தயாரிக்கும் நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் எரிவாயு அடுப்பு மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இன்றளவும் பெரும்பாலான பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை என்கிறார் மலர்விழி.

கடந்த 27 வருடங்களாக சத்துணவு சமைத்து வரும் சத்துணவு பணியாளர் அழகு பிபிசி தமிழிடம் பேசும்போது, அன்றாடம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்னைகளை விவரித்தார்.
"சத்துணவுக்காக நான் சமைக்கும் சாப்பாட்டை பள்ளி ஆசிரியர் முதல் கொண்டு விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுநாள் வரை மாணவர்களுக்கு எந்தவொரு குறைபாடும் இல்லாமல் சமைத்துத் தருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சமையல் அறையில் எரிவாயு அடுப்பு மட்டும் வைத்து விட்டு சென்று விட்டனர். கேஸ் சிலிண்டர் இணைப்பு தற்போது வரை கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது விறகு பயன்படுத்தித் தான் சமைத்து வருகிறேன். மேலும் காலையில் சீக்கிரமாகவே விறகு எடுத்து வந்து சத்துணவை தயாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். விறகு பயன்படுத்தி சமைப்பதால் கடும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் கண்ணீர் சிந்திக் கொண்டே தான் மாணவர்களுக்கு சமைக்க வேண்டிய நிலை உள்ளது," என்கிறார் அழகு.

கடுமையான கண் எரிச்சலும் மூச்சு திணறலும் எனக்கு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் சமையலறைக்குள் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் சமைப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மழை தண்ணீரை துடைத்துக் கொண்டே தான் சமைக்க வேண்டிய நிலை உள்ளது. சமையல் உபகரணங்கள் மளிகை சாமான்களை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. புதிதாக சமையலறை கட்டிக் கொடுக்க பலமுறை மனு கொடுத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றார் அவர்.
பயன்படுத்தப்படாத கழிவறையில் சத்துணவு சமைக்கும் பணி நடைபெற்று வருவது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபுவிடம் பேசினோம்.
"சம்பந்தப்பட்ட பள்ளியில் கட்டப்பட்ட கழிவறை பயன்படுத்தப்படவில்லை. அதனால் அந்த கழிவறை கட்டடத்தை மாற்றி அமைத்து அங்கே சத்துணவு சமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சமையல் கூடத்தை வேறு பகுதிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் புதிய சமையல் கூடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு பூஜை நடைபெற இருக்கிறது," என்றார் சுரேஷ் பாபு.
சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு சமையல் கூடத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அங்கு சத்துணவு கூடம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடமும் பேசினோம்.
"சத்துணவு கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புனரமைத்து கொடுப்பதற்கு சமூக நலத்துறையிடம் போதிய நிதி இல்லை. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தான் இதற்காக நிதி ஒதுக்கி புனரமைத்து தர வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்புகளை அந்தந்த பள்ளி நிர்வாகமே சரி செய்து கொள்ள வேண்டும்," என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் பேசுவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















