'அக்னிபத்' ஆள் சேர்க்கை முகாமுக்கு சென்று வந்தவர் திடீர் சாவு - என்ன காரணம்?

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
படக்குறிப்பு, சரண்
பிரசுரிக்கப்பட்டது

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் அனைத்து போட்டிகளிலும் தேர்வு பெற்று இறுதியில் உடலில் தழும்பு இருப்பதாக கூறி நிராகரிக்கப்பட்டதால் மனம் உடைந்த ராமநாதபுரம் இளைஞர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக அந்த இளைஞரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள முதுனால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் சரண் பிஎஸ்சி வேதியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு ராணுவத்தில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளார்.

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர் தற்கொலை

இந்நிலையில், சரண் கடந்த 30ஆம் தேதி அக்னிபத் திட்டத்தின் கீழ் நாகர்கோவிலில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமுக்கு சென்றிருந்தார். இள வயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்த அவர் எப்படியும் ராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று நம்பிக்கையோடு ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டார்.

ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் நடத்தப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் தேர்வு செய்யப்பட்ட அவர் உடல் பரிசோதனையின் போது உடலில் தழும்பு இருப்பதால் அவர் நிராகரிக்கப்பட்டதாக சரண் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

முதுனால்

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சரண் வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று தினங்களாக யாரிடமும் பேசாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அனைவரும் தூங்கிய பிறகு வீட்டின் மாடிக்கு சென்று அவரது அம்மாவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்று சிறு வயது முதலே லட்சியமாகக் கொண்டு அதற்காக இரவு பகலாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த சரண் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். சரண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முதுனால் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"தழும்பால் இந்தியா ஒரு வீரரை இழந்துவிட்டது"

சரணின் தந்தை ஐயப்பன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் சரணுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவரது லட்சியம். இதற்காக அவர் சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேர கடுமையாக பயிற்சி செய்து வந்தான்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யவில்லை. இருந்தாலும் என் மகன் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தான்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் ராணுவத்தில் சேருவதற்காக அக்னிபத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்வுக்கு நாகர்கோவில் சென்றிருந்தான். அங்கு உடல் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்து பின்னர் அதிலும் கலந்து கொண்டான்.

அப்போது என் மகனுக்கு கால் தொடை, முதுகில் தழும்பு இருந்த காரணத்தால் அவர் ராணுவத்தில் சேர்க்க முடியாது என அந்த தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் நிராகரித்துள்ளனர்.

சரண்

இதனால் வீட்டுக்கு வந்த என் மகன் சரண் கடந்த இரண்டு நாட்களாக மன அழுத்தத்திலிருந்து வீட்டில் யாரிடமும் பேசவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு மாடியில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தான்.

என் மகனின் இறப்பை என்னால் தாங்க முடியவில்லை. ராணுவ தேர்வில் இவ்வாறான கெடுபிடிகள் இருந்தால் எப்படி இளைஞர்களால் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவிற்காக பணி செய்ய முடியும். பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர தயாராக இருக்கின்றனர். ஆனால் இவ்வாறான சில கட்டுப்பாடுகளால் பலரும் ராணுவத்தில் சேர அஞ்சுகின்றனர்.

ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போராட வேண்டும் என்ற ஆசையில் இருந்த என் மகனை நான் இழந்துள்ளேன். அதேபோல் நல்ல ஒரு ராணுவ வீரரை இந்த நாடு இழந்துவிட்டது" என தெரிவித்தார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"உடலில் தழும்பு இருந்தது ஒரு தவறா?"

உயிரிழந்த சரணின் அம்மா வசந்தா பிபிசி தமிழிடம் பேசுகையில், "என் மகன் நாகர்கோவில் சென்று வந்த பிறகு மூன்று நாட்களாக மிகவும் மன அழுத்தத்தில் இருந்தான். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை கரைக்கச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து அமைதியாக இருந்தான். எங்களிடம் யாருடனும் பேசவில்லை.

சரண்

இந்நிலையில், திடீரென திங்கள் கிழமை இரவு எனது சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இறந்து விட்டான். என் மகனின் இறப்பை எங்களால் தாங்க முடியவில்லை.

என் மகனுக்கு சின்ன வயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவுக்காக எல்லை பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்பது தான் கனவு. ராணுவத்தில் சேர காலை இரவு என அதற்கு கடும் பயிற்சி எடுத்து வந்த நிலையில் தழும்பு இருக்கும் ஒரே காரணத்தால் அவர் நிராகரித்தது எந்த வகையில் நியாயம். அதனால் என் மகன் மனம் உடைந்து விட்டான். தழும்பு என்ற ஒரே காரணத்தால் இந்தியா ஒரு நல்ல ஒரு ராணுவ வீரரை இழந்து விட்டது" என்றார்.

சந்தேக மரணம் என வழக்குப்பதிவு

இது குறித்து, ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீசாரிடம் கேட்ட போது, "உயிரிழந்த சரண் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் உடலில் தேமல் மற்றும் அலர்ஜி உள்ளதால் நிராகரிக்கப்பட்டு பின் ஊருக்கு வந்ததாக கூறி மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

அவரது அம்மாவின் சேலையை பயன்படுத்தி தூக்கில் தொங்கி உள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை கீழே இறக்கி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு சரண் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. சரணின் தந்தை ஐயப்பன் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை சரண் இறப்பிற்கான முழுமையான காரணம் எதுவும் தெரியவில்லை. உடல் பிரேத பரிசோதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

சிவப்புக் கோடு

தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104'

தற்கொலை எண்ணம்

பட மூலாதாரம், DOMOSKANONOS

ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.

சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.

என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார் மன நல மருத்துவர் ரம்யா சம்பத்.

அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.

வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.

`இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும் என்கிறார் மன நல மருத்துவர்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, அக்னிபத்: திட்டம் பற்றி எழும் கேள்விகளும் அரசு தரும் விளக்கமும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: