இந்திய தேசியக் கொடியில் 'மேட் இன் சீனா' முத்திரை: தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கேள்வி

பட மூலாதாரம், Appavu M
இன்று (28/08/2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
கனடாவில் இந்திய சபாநாயகர்கள் பங்கேற்ற ஒரு மாநாட்டில் 'மேட் இன் சீனா' முத்திரையுடனான இந்திய தேசியக்கொடி பயன்படுத்தப்பட்ட நிலையில், இதைக்கூட அரசு இறக்குமதிதான் செய்யுமா என்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார் என இந்து தமிழ்திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் நடைபெறும் 65ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கலந்து கொண்டனர்.
அப்போது இந்தியக் குழுவினர் தேசியக் கொடிகளுடன் மாநாட்டுக்கு சென்றனர். அந்தக் கொடியில் 'மேட் இன் சீனா' என முத்திரையிடப்பட்டிருந்ததை கண்டு இந்தியக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தை மாநில சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொண்டு சென்றனர். தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேசியக் கொடிகளைக்கூட மத்திய அரசு இறக்குமதி செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதுகுறித்து மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
நாட்டின் கவுரவத்தை வெளிப்படுத்த தேசியக் கொடிகளுடன் நாங்கள் மாநாட்டுக்கு சென்றோம். ஆனால், அந்தக் கொடிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை இருந்தது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

பட மூலாதாரம், Mitchell Gunn
தேசியக் கொடிகளை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சிவகாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் போன்ற இடங்களில் பல அச்சு ஆலைகள் உள்ளன. இரவு ஆர்டர் கொடுத்தால், மறுநாள் காலை அவர்களால் 100 கோடி தேசியக் கொடிகளை வழங்க முடியும். இதுபோன்ற சூழல் ஏன் ஏற்பட்டது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடாது: தாலிபன்கள் தடை

பட மூலாதாரம், Getty Images
கல்வி கற்க வெளிநாடு செல்லவிருந்த பெண்களுக்கு தாலிபன்கள் தடை விதித்து திருப்பி அனுப்பியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதற்கு தாலிபன்கள் தடைவிதித்தது சர்வேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தடையை திரும்ப பெறக்கோரி உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தாலிபன்கள் அதை புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்கு தாலிபன்கள் தடைவிதித்துள்ளனர். கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த மாணவிகளை தாலிபன்கள் விமானத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
வெளிநாடு செல்வதற்காக மாணவர்களும், மாணவிகளும் விமான நிலையம் வந்த நிலையில் மாணவர்களை மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதித்த தாலிபன்கள் , மாணவிகளுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
'தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த தமிழ்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்'

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிா்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்தவொரு கருத்தையும் தமிழக அரசு எழுத்துபூா்வமாகப் பதிவு செய்யவில்லை என்று இந்திய கல்வித்துறை இணையமைச்சா் சுபாஷ் சா்க்காா் தெரிவித்துள்ளாா் என தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து அவா் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தகுதிவாய்ந்த, திறமைமிக்க மாணவா்களை உருவாக்க முடியும். அதற்காகவே தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிா்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழக அரசு எழுத்துபூா்வமாகப் பதிவு செய்யவில்லை. அதேவேளையில், அதில் சில முரண்பாடுகள் இருப்பதை தமிழக அரசு கருத்தாக பதிவு செய்துள்ளது. தமிழக அரசுடன் தொடா்ச்சியாக பேச்சுவாா்த்தை நடத்துவதன் மூலம், தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை நிச்சயம் அமல்படுத்துவோம்" என்றார்.
மேலும், "புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் நிலையில், மூன்றாவது மொழி என்பது ஹிந்தி உள்பட எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த மொழியையும் தேசிய கல்விக் கொள்கை திணிக்கவில்லை. அதே நேரத்தில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதுதான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
மாநிலங்கள் அவரவா் விருப்பத்துக்கேற்ப கல்விக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்கின்றன. ஆனால், அது தரமானதா என்பதை ஆராய வேண்டும். அதனால்தான், தேசிய அளவில் தரமான கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சிறப்பாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை அமலானால், இன்னும் தரம் மேம்படும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்துத் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது" என்றும் அவர் தெரிவித்தாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
















