You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திப்பு சுல்தான், விநாயக் தாமோதர் சாவர்க்கர் படம் வைப்பதில் போட்டி; கர்நாடகாவில் பதற்றம்
கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் இரண்டு மதத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக பதற்ற நிலை உண்டாகியுள்ளது.
அங்கு இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தடை உத்தரவும் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த இஸ்லாமிய ஆட்சியாளர் திப்பு சுல்தான் மற்றும் இந்து வலதுசாரிகளின் ஆதர்ச தலைவர்களில் ஒருவரான விநாயகர் தாமோதர் சாவர்க்கரின் ஃபிளக்ஸ் போர்டுகளை வைப்பது குறித்து இந்து மற்றும் இஸ்லாமிய தரப்பினர் இடையே உண்டான மோதலை கட்டுப்படுத்த சென்ற வாரம் சனிக்கிழமை ஷிவமொக்காவில் காவல் துறையினர் தடியடி நடத்த வேண்டியிருந்தது.
கடந்த சனிக்கிழமை ஷிவமொக்கா நகரின் மையப் பகுதியில் உள்ள அமிர் அகமது சர்க்கிள் எனும் இடத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சாவர்க்கரின் படம் தாங்கிய பதாகை இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் தரப்பினர் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டனர்.
சாவர்க்கரின் படம் உள்ள பதாகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் அங்கிருந்த சாவர்க்கர் படத்தை அகற்ற முயற்சி செய்தனர். அப்பொழுது காவல் துறையினர் அவர்களை தடுக்க தடியடி நடத்தினர்.
அதே சமயத்தில் போராட்டத்தில் பங்கெடுத்த இன்னொரு குழுவினர் அந்த இடத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர் திப்பு சுல்தானின் படத்தை வைக்க முயற்சி செய்த பொழுது அந்த முயற்சியை காவல்துறை தடுத்தது.
அந்த இடத்தில் சாவர்க்கர் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டது பிரச்னையில் தொடக்கமாக இருந்தது என்பதால் காவல்துறையினர் படத்தை அங்கிருந்து அகற்றினர். அதற்கு இந்து தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த போராட்டங்களுக்குப் பிறகு பிரேம் சிங் எனும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
அவர் எந்த குழுவையும் சார்ந்தவர் அல்ல; வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்பொழுது அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று பிபிசி இந்தி செய்தியாளர் இம்ரான் குரேஷியிடம் கர்நாடக மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்தார்.
எனினும் இப்பொழுதும் ஷிவமொக்காவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவங்களும் மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரேம் சிங் என்பவர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வர, இந்த ஆண்டு பிப்ரவரியில் தடை விதிக்கப்பட்டது முதலேயே ஷிவமொக்காவில் மதம் சார்ந்த பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது.
பிப்ரவரியில் மாணவிகளுக்கு ஹிஜாப் தடை விதிக்கப்பட்ட பின்னர் ஹர்ஷா எனும் இந்து அமைப்பு ஒன்றைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதும் அங்கு பதற்றத்தை தூண்டியது.
பிரேம் சிங் குத்தப்பட்டது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்ட பொழுதும் ஷிவமொக்கா நகரில் தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்