பல்கலை தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக தலைவர் உள்பட மூவர் கைது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், அவருக்காக தேர்வு எழுதியவரான திவாகர் மாதவன், உடந்தையாக இருந்ததாக ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.
அந்த தேர்வில் 6 பாடங்கள் உள்ள நிலையில் சனிக்கிழமை 5ஆவது பாடத்துக்கான தேர்வு நடத்தப்பட்டது.
அதில் பிஏ அரசியல் அறிவியல் பாடத்துக்கான தேர்வை எழுத வந்த பாஸ்கர் என்ற மாணவரின் அடையாள அட்டை மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வு அறை அதிகாரி சரிபார்த்தார். அப்போது, பாஸ்கருக்கு பதிலாக திவாகர் மாதவன் என்பவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரியவந்தது.
இது குறித்து தேர்வுத் அறை அதிகாரி தேர்வு நடத்தும் முதன்மை கண்காணிப்பாளரிடம் தகவல் அளித்தார். இதையடுத்து தேர்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தேர்வு எழுத வந்த நபர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகர் மாதவன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், அவர் 12-ஆம் வகுப்பு முடித்துள்ளதாகவும், கறிக்கடை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க பிரமுகரான ரமேஷ் தனக்கு அறிமுகமானவர் என்றும் அவர்தான் தன்னை பாஸ்கருக்காக தேர்வு எழுதும்படி கூறியதாகவும் திவாகர் மாதவன் தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆள் மாறாட்ட தேர்வெழுத ரூ. 6 ஆயிரம் பேரம்

பாஸ்கர் 2020ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு பிஏ அரசியல் அறிவியல் பட்டப்பிடிப்பில் சேர்ந்தார். அவர் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக தேர்வு நடத்தும் முதன்மை கண்காணிப்பாளர் நாகரத்தினம் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக திவாகர் மாதவன், அவருக்கு உடந்தையாக இருந்ததாக திருவாரூர் மாவட்ட பாஜக கல்விப்பிரிவு செயலாளர் ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேர்வு எழுத திவாகர் மாதவனுக்கு ஆறாயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டு தொகை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போலீஸார் தன்னை இந்த வழக்கில் தேடுவதை அறிந்து பாஸ்கர் தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரையும் போலீஸார் கைது செய்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















