ஜாா்க்கண்டில் ஆட்டோவால் மோதி நீதிபதி கொலை - இருவருக்கு ஆயுள் தண்டனை

ஆட்டோ ரிக்ஷா

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு, ஆட்டோ ரிக்ஷா
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இன்று (07.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ், இணையதளத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ஆட்டோவால் மோதி நீதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாா்க்கண்டில் ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீ்ர்ப்பு வழங்கியுள்ளது என தினமணி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் லகான் வா்மா, அவரது கூட்டாளி ராகுல் வா்மா ஆகிய இருவரும் கடந்த ஜூலை 28-ஆம் தேதி இந்த வழக்கில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்தனார். அவா்களுக்கான தண்டனை விவரத்தை, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரஜினிகாந்த் பதக் சனிக்கிழமை அறிவித்தாா்.

தன்பாத் கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்தவா் உத்தம் ஆனந்த். இவா், கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி காலை 5.30 மணியளவில் மாவட்ட நீதிமன்றம் அருகே நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பின்பக்கமாக வந்த ஆட்டோ மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளில், ஓரளவு விசாலமான அந்தச் சாலையின் ஒருபக்கமாக நீதிபதி செல்வதும், அவா் மீது வேகமாக வந்து ஆட்டோ மோதி விட்டு தப்புவதும் தெரியவந்தது. எனவே, இந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடந்த கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து விசாரிக்க முதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, பின்னா் விசாரணையை சிபிஐ ஏற்றது.

தன்பாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் லகான் வா்மா, அவரது கூட்டாளி ராகுல் வா்மா இருவா் மீதும் கொலை குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இருவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. ஆனால், இந்திய தண்டனை சட்டம் 302-ஆவது பிரிவின்கீழ் (கொலை) அவா்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அத்துடன், இந்திய தண்டனையியல் சட்டம் 201-ஆவது பிரிவின்கீழ் (ஆதாரங்களை மறைத்தல், பொய்த் தகவல்களை அளித்தல்) 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறு பள்ளி செல்ல விருப்பம்: கள்ளக்குறிச்சி பள்ளியில் குறையும் மாணவர்கள் எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி பள்ளி
படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி பள்ளி

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த 2,000 மாணவ, மாணவிகள் தங்களுடைய சான்றிதழ்களைக் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க முடிவு செய்து விண்ணப்பித்துள்ளனர் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை வேறொரு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 2 பயின்ற மாணவி ஒருவர் மர்மமான முறையில் கடந்த மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மரணத்திற்கு நீதிக்கேட்டு அவரது பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். இன்னொரு புறம் மாணவி மரணம் காரணமாக பள்ளியில் கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பள்ளிக் கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்தன. இதனால் பள்ளியில் படித்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நிலை கேள்விக்குறியானது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான இப்பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது வரை 2,000 மாணவ மாணவிகள் தங்களுடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ் வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். இதில் குறிப்பாக, 180 மாணவ, மாணவிகள் வேறு பள்ளியில் படிக்க போவதாக விண்ணப்பித்துள்ளனர்.

இதனையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவர்களின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பள்ளிகளில் படிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

'ஹாட்ரிக் தங்க' மங்கை வினேஷ் போகத்

வினேஷ் போகத்

பட மூலாதாரம், Getty Images

காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தில் மட்டும் இதுவரை 6 தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன என இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மல்யுத்தத்தில் ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் ரவி குமார் 10-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று நேற்று தங்கப்பதக்கம் வென்றார். இதுவரை மூன்று தங்கங்கள் கிடைத்திருந்த நிலையில், இது மல்யுத்தத்தில் இந்தியா பெறும் நான்காவது தங்கப்பதக்கம் ஆகும்.

மல்யுத்தத்தில் ஐந்தாவது தங்கப்பதக்கம் வினேஷ் போகத் மூலம் கிடைத்தது. மகளிர் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் வினேஷ் போகத். இந்த பிரிவில் மொத்தம் நான்கு வீராங்கனைகளே பங்கேற்றனர். இதனால் ரவுண்டு ராபின் முறை பின்பற்றப்பட்டது. இதில் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வென்று தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார் வினேஷ் போகத்.

இதேபோல், ஆடவர் ஃப்ரீஸ்டைல் 74 கிலோ பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நவீன் பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை 9-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

அதுமட்டுமில்லாமல், தான் கடைசியாக பங்கேற்ற மூன்று காமன்வெல்த் தொடரிலும் தங்கப்பதக்கங்கள் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத் என்றும் அச்செய்தி தெரிவித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: