கள்ளக்குறிச்சி வன்முறையில் விட்டுச்சென்ற 141 வாகனங்களை மீட்க யாரும் வரவில்லை - காவல்துறை

கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
பிரசுரிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி கலவரத்தில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கலவரத்தில் சிலர் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போராட்டக்காரர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் வாகனங்களை மீட்க யாரும் வரவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில், மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்துக் கொளுத்தினர். இதனிடையே கலவரம் தொடர்பான வழக்கு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 17 அன்று - பள்ளியில்

போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த நபர் கைது

இந்த நிலையில் இது சம்பந்தமாக சிறப்பு குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காவல்துறை வாகனத்திற்கு முதலாவதாக தீ வைத்ததாக சின்ன சேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட மணிகண்டன் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய அப்பகுதியில் உள்ள செல்போன் நெட்வொர்க் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள்

309 பேர் கைது -14 பிரிவுகளில் வழக்கு பதிவு

கலவரம் தொடர்பாக இதுவரை 309 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 147(சட்ட விரோதமாக கூடுதல்),148(ஆயுதங்களுடன் கூடுதல்),294(b)(ஆபாசமாக பேசுதல்), மற்றும் 323,324, 352, 332, 336, 435, 436,379,IPC.r/w.3,4,5.of பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்களை விட்டுச் சென்றுவிட்டனர். இதனால் தனியார் பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறச் சாலையோரங்களிலும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கிடந்தது.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள்

வாகனங்களை மீட்க யாரும் வரவில்லை

இப்படி சாலையோரங்களில் இருந்து 141 இருசக்கர வாகனங்களை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலமாக லாரியில் ஏற்றி சின்னசேலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு அந்த வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து கலவரத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்த விசாரணையைச் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் பகலவன், "பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனத்தைக் கேட்டு இதுவரை அதன் உரிமையாளர்கள் யாரும் காவல் நிலையத்திற்கு வரவில்லை. இதுவரை கைது செய்யப்பட்ட நபர்களின் இரு சக்கர வாகனங்கள் ஏதாவது அதில் இருக்கிறதா என்று விசாரணை செய்து வருகிறோம். அதுமட்டுமில்லாமல் இரு சக்கர வாகனங்களை விட்டுச் சென்றவர்களை வாகன பதிவெண் கொண்டு அடையாளம் காண முடியும்.

இதில் கலவரத்தின் போது அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் வாகனங்களும் இருக்கலாம். மேலும் பயத்தில் அவர்கள் விட்டு சென்று இருக்கலாம். அதில் அப்பாவி மக்களும் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே அனைத்து தரவுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும். இதுவரை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு 309 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்," என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, கல்வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு: கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :