மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைந்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சிதைந்து விடுமா?

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மம்தா பானர்ஜி தற்போது தனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த சில நாட்களிலேயே, புது டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தின் போது சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்புகளுக்குப் பிறகு, மம்தா பானர்ஜி தனது சக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் காங்கிரஸுடன் இணையக்கூடும் என்ற யூகங்கள் தீவிரமடைந்துள்ளன.

இருப்பினும், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இந்த இணைப்பு குறித்த செய்திகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளன.

ஆனால், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த அரசியல் நகர்வுகளை உற்று நோக்குபவர்கள், ஒருவேளை இந்த இணைப்பு பேச்சுவார்த்தை உண்மை இல்லை என்றால், மேற்கு வங்கத்தில் தனது கட்சியில் வளர்ந்து வரும் கிளர்ச்சிக்கு மத்தியிலும் மம்தா மூன்று நாட்கள் டெல்லியில் தங்கியிருக்க மாட்டார் என்று வாதிடுகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து இயங்குமா?

காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே இந்த இணைப்பு குறித்த செய்திகள் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளன.

பட மூலாதாரம், Samir Jana/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, 80 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 58 பேர், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர் ரிதாப்ரதா பானர்ஜிக்கு ஆதரவளித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்க முடிவு செய்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடுமா அல்லது அக்கட்சி தொடர்ந்து இயங்குமா என்பதுதான் கேள்வி.

இரண்டாவது கேள்வி என்னவென்றால், மம்தா பானர்ஜியின் இந்த கூட்டணி காங்கிரஸுக்கு எத்தகைய பலனைத் தரும்?

அவரைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்க மற்றும் சக்திவாய்ந்த தலைவரால் காங்கிரஸின் செயல்பாட்டு பாணி மற்றும் அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ப பழகிக்கொள்ள முடியுமா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மம்தா பானர்ஜியின் கட்சியில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை விட்டு விலகிச் செல்கின்றனர் என்பதையே இதுவரையிலான நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸின் 80 எம்எல்ஏக்களில், 58 பேர் ஏற்கனவே ரிதப்ரதா பானர்ஜிக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த குழு மம்தாவின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியை எதிர்க்கும் ஒரு பிரிவாகும்.

கட்சியின் எம்பியான காகோலி கோஷ் தஸ்திதார், 28 எம்பிக்களில் 20 பேர் தங்களின் பக்கம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சரத் குப்தா, மம்தா காங்கிரசுக்குச் சென்றாலும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும் என்றும், இது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சியின் பெரும்பாலான எம்பிக்களும் எம்எல்ஏக்களும் திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு பிரிவுக்கு மாறினால், அது கட்சியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும்.

நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இந்த பிரிவை உண்மையான கட்சியாக அங்கீகரித்தால், இதுவே உண்மையான திரிணாமுல் காங்கிரஸாகக் கருதப்படும்" என்கிறார்.

மேலும் "இது மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் என்சிபி கட்சிகளுக்கு ஏற்கனவே நடந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் வெளியேறிய பிறகு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஒரு பிரிவு உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டது. அதே நேரத்தில், பெரும்பாலான எம்எல்ஏக்கள் வெளியேறிய பிறகு, அஜித் பவார் தலைமையிலான ஒரு பிரிவு உண்மையான என்சிபியாக அங்கீகரிக்கப்பட்டது" என்று சரத் குப்தா கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைந்தாலும், திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு பிரிவு தொடர்ந்து இயங்குவதோடு, என்டிஏ கூட்டணிக்கு தனது ஆதரவை அளிக்கும். இதுவரை தங்களை எதிர்த்து வந்த ஒரு கட்சி, இப்போது நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தங்களை ஆதரிப்பதை விட பாஜகவுக்கு வேறு என்ன சிறப்பான விஷயம் இருக்க முடியும்?" என்றார்.

காங்கிரஸுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும்?

 சோனியா காந்தி- மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியக் கூட்டணிக் கூட்டத்தில் சோனியா காந்தியும் மம்தா பானர்ஜியும் சந்தித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், மம்தா பானர்ஜியின் ஆதரவு காங்கிரஸுக்கு பலன் தருமா?

இதனால் காங்கிரஸுக்கு எந்த ஒரு சிறப்பான பலனும் கிடைக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வீர் சாங்வி 'தி பிரிண்ட்' இதழில் இதுகுறித்து எழுதியுள்ளார்.

அதில், "மம்தா பானர்ஜி ஒரு அதிகார மையமாக இருந்து வருகிறார். அவர் ஒருபோதும் யாருக்கும் பொறுப்புடையவராக இருந்ததில்லை"

"அவர் காங்கிரஸில் இருந்தபோதும் கூட, கிட்டத்தட்ட அனைவருடனும் மோதினார். அவர் பாஜகவுடன் கைகோர்த்தபோதும் கூட, அங்கேயும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவர் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தபோது, ​​காங்கிரஸ் தொண்டர்களை டிஎம்சியில் இணைய ஊக்குவித்து, வங்காள காங்கிரஸ் அமைப்பை பலவீனப்படுத்தியது தான் அவரது மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது"என்றும் அதில் கூறியுள்ளார்.

"முக்கியமான தருணம் வரும் போது மம்தா பானர்ஜி யாருடைய பேச்சையும் கேட்பதில்லை" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸின் சிதைவு பாஜகவுக்கு எந்த அளவுக்குப் பயனளிக்கும்?

பாஜக ஆதரவாளர்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பாஜக ஆதரவாளர்கள் ஊர்வலம் சென்றனர்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய தீர்க்கமான தோல்விக்குப் பிறகும், திரிணாமுல் காங்கிரஸின் வீழ்ச்சி இடதுசாரி கட்சிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கக்கூடும் என்பதால், அக்கட்சி சிதறுவதை அனுமதிக்க பாஜக விரும்பவில்லை.

இதன் பொருள் என்னவென்றால், பாஜக மட்டுமல்லாமல் சங் பரிவாரும் பல ஆண்டு காலங்களாக தீவிரமாக எதிர்த்து வரும் ஒரு சித்தாந்தம் மீண்டும் முதன்மை நீரோட்டத்திற்கு வருவதாகும்.

அரசியல் விமர்சகர் தீப் ஹால்தார் 'தி பிரிண்ட்' இதழில் எழுதிய கட்டுரையில், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரிட்டிஷ் அகாடமியின் சர்வதேச ஃபெலோவான அயன் குஹாவின் கூற்றை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.

அதில், "இடதுசாரி அரசியல் மொழிகள், சொல்லாடல்கள் மற்றும் இயக்க அணிதிரட்டல்களை திரிணாமுல் காங்கிரஸ் மேலோட்டமாக ஏற்றுக்கொண்டதன் மூலம், இடதுசாரி அரசியல் செழிப்பதைத் தடுத்துள்ளது.

சிபிஎம் போன்ற பாரம்பரிய இடதுசாரி சக்திகளில் பலர் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதிய அடையாள அரசியலையும் அது பகிரங்கமாக ஆதரித்து ஊக்குவித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹால்தார் தனது "பெங்கால் 2021 - எ டைரி" என்ற புத்தகத்தில் உள்ள ஒரு நேர்காணலைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர், மம்தா பானர்ஜி உடனடி அரசியல் எதிரியாக இருக்கலாம், ஆனால் உண்மையான "எதிரி" எப்போதும் இடதுசாரிகள் தான் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், அது நாட்டின் கட்டமைப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இடதுசாரிகளுக்கு ஒட்டுமொத்த நாட்டிற்கே தீங்கு விளைவிக்கும் சக்தி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர் கிளர்ச்சிகளைச் சந்தித்த திரிணாமுல்

கட்சியின் மக்களவை எம்பியான காகோலி கோஷ் தஸ்திதார், சமீபத்தில் தன்னிடம் 20 எம்பிக்கள் இருப்பதாகக் கூறி, சபையில் தங்களுக்குத் தனித்தனி இடங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரினார். மேலும் அவர் என்டிஏ கூட்டணிக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Kakoli Ghosh Dastidar/Facebook

படக்குறிப்பு, கட்சியின் தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள்.

35 ஆண்டுகால இடதுசாரி முன்னணி அரசை வீழ்த்தி மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அந்த மாநிலத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு, மம்தா பானர்ஜியும் அவரது கட்சியும் தங்களது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

கட்சியின் தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள்.

முதலில், ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சஹா ஆகியோரால் சட்டமன்றத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தேசிய தலைவர்கள் பலர் தொடர்ச்சியாகப் பதவி விலகினர்.

மம்தா பானர்ஜியின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கொல்கத்தா மேயரும் மம்தா பானர்ஜியின் மற்றொரு நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான பிர்ஹாத் ஹக்கீம் தனது ராஜினாமாவை நேரில் வழங்கியதைத் தொடர்ந்து அப்பதவியிலிருந்து விலகினார்.

கட்சியின் மக்களவை எம்பியான காகோலி கோஷ் தஸ்திதார், சமீபத்தில் தன்னிடம் 20 எம்பிக்கள் இருப்பதாகக் கூறி, சபையில் தங்களுக்குத் தனித்தனி இடங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

மேலும் அவர் என்டிஏ கூட்டணிக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தார்.

புதன்கிழமை அன்று, கட்சியின் மாநிலங்களவை எம்பியான சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ததுடன், தனது மாநிலங்களவை எம்பி பதவியையும் துறந்தார்.

சுஷ்மிதா தேவுக்கு முன்பாக, டிஎம்சி மாநிலங்களவை எம்பியான சுகேந்து சேகர் ராயும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.

திரிணாமுல் காங்கிரசுக்கு மக்களவையில் 28 எம்பிக்களும், மாநிலங்களவையில் 13 எம்பிக்களும் இருந்தனர்.

இருப்பினும், சுகேந்து சேகர் மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ராஜினாமாவிற்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரசுக்கு மாநிலங்களவையில் 11 எம்பிக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய கிளர்ச்சிக்குப் பிறகு, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு நடந்தது போல, இந்தக் கட்சியால் அதன் தேர்தல் சின்னத்தைக் காப்பாற்ற முடியுமா என்ற யூகங்கள் இப்போது எழுந்துள்ளன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு