திமுக எம்.பி செந்தில் குமார் பேட்டி: அரசு நிகழ்ச்சியில் இந்து புரோகிதரை வெளியேற்றியது ஏன்?

- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டின் தருமபுரி தொகுதியில் ஏரி சீரமைப்பு பூஜை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது அங்கு இந்து மத சடங்குகளின்படி பூஜை செய்ய வந்த புரோகிதரை அங்கிருந்து வெளியேற்றிய மக்களவை திமுக உறுப்பினர் டாக்டர் செந்தில் குமாரின் செயல் சில தினங்களுக்கு முன் பரவலான கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், அரசு விழாவில் கடவுள் மறுப்புக் கொள்கையை திணிக்க முற்பட்டாரா? அத்தகைய பரபரப்பை அவர் களத்தில் ஏற்படுத்த என்ன காரணம் போன்ற கேள்விகளோடு டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்துள்ள செந்தில் குமாரை பிபிசி தமிழ் சந்தித்தது. அவரது நேர்காணலில் இருந்து.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக சென்ற நீங்கள் அங்கு இந்து மத முறைப்படி பூமி பூஜை நடத்த எதிர்ப்பு தெரிவித்தீர்களே? அது ஏன்?
நான் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நிகழ்வுக்கு செல்லும்போதும் குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளில் ஒரு எம்பி ஆக செல்லும்போது குறிப்பிட்ட மதம் சார்பான விஷயங்கள் நடக்கும்போது அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிருக்கிறேன். அதை சரிப்படுத்தினால்தான் பங்கேற்பேன் என்றும் கூறியிருக்கிறேன்.
அரசு நிகழ்ச்சி என்பது மக்கள் வரிப்பணத்தில் எல்லா மக்களுக்குமானதாக செய்யப்படும் விஷயம். அதை பொதுவானதாகவே நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் முன்கூட்டியே கூறுவேன். அதையும் மீறி சில வேளைகளில் இதுபோன்ற செயல்கள் தொடரும்போது, அதை அப்படியே கடந்து விட்டு என்னால் செல்ல முடியவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அதனால்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்தேன். நான் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே. அரசு நிகழ்ச்சியில் ஒன்று எந்த மத சடங்குமில்லாமல் செய்யுங்கள் இல்லை எல்லா மதம் சார்ந்து எல்லோரையும் சேர்த்து செய்யுங்கள் என்கிறேன்.
இப்படி செய்தது ஒரு தொடக்கமாக இருக்கட்டுமே என்று நினைத்து அப்படி நடந்து கொண்டேன். இப்போது அது ஒரு விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.
மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவடைந்திருக்கிறது. பலரும் இதுபற்றி பேசுகிறார்கள். நல்ல தீர்வு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை.
உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன்பு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்களே, அது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
பெரியார் சொன்னபடி பகுத்தறிவை உபயோகியுங்கள் என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன். அதாவது. இதுநாள்வரை அது நடந்தது, சம்பிரதாயமாக இருந்தது என்பதை தாண்டி அது சரியா என சுய ஆய்வு செய்து "அது ஏன்" என கேள்வி கேளுங்கள். நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே கடவுள் மறுப்பாளன். அதனால் கேள்வி கேட்டே பழகி விட்டேன். என் குழந்தைகளையும் அப்படித்தான் வளர்க்கிறேன்.
ஒரு அரசு விழா என்பது பொதுவான நிகழ்வு. அது எல்லோருக்குமானது. ஏன் எல்லோரும் ஒரு மதத்தைச் சார்ந்து மட்டும் இருக்க வேண்டும்? அது வைதீக முறையோ எதுவோ, அப்படியே பார்த்தாலும் அங்கு கிராமத்தைச் சார்ந்த பூசாரிகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அழைக்காமல் ஏன் இப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்குறி ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.

இது குறித்து அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நிறைய பேர் இதை பின்தொடர்கிறார்கள். எங்கள் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, ஆ. ராசா, என்.ஆர். இளங்கோ, கெளதம் சிகாமணி போன்றோர் இதுபோல குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த நிகழ்வை அனுமதிப்பதில்லை.
இதுபோன்ற செயல் மூலம், கடவுள் மறுப்புக் கொள்கையை மக்கள் மத்தியில் அழுத்தமாக செயல்படுத்துகிறதா ஆளும் திமுக?
இல்லை. கண்டிப்பாக இல்லை. ஏனென்றால் தந்தை பெரியார் ஆரம்பித்த பகுத்தறிவுக்கு பிறகு அதைத்தழுவியே அறிஞர் அண்ணா பதவியேற்கிறார். அவரைத் தொடர்ந்து கலைஞர் (கருணாநிதி) ஆட்சிக்கு வரக்கூடிய காலத்திலும் இன்று எங்களுக்கு தலைவராக இருக்கக் கூடியவரின் (மு.க. ஸ்டாலின்) காலகட்டத்திலும் பார்த்தால், திமுகவில் இருக்கக் கூடிய 99 சதவீதத்தினர் கடவுள் ஏற்பாளர்கள்தான்.

பட மூலாதாரம், Twitter/@DrSenthil_MDRD
அதே மாதிரி திமுகவுக்கு வாக்களித்தவர்களில் 90 சதவீதம் பேர் மத ஏற்பாளர்கள். அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் ஒரு மதத்துக்கோ கடவுள் ஏற்பாளருக்கோ மறுப்பே சொன்னது கிடையாது.
தந்தை பெரியார் கடைப்பிடித்த பல கொள்கைகளில் கடவுள் மறுப்பும் ஒரு கொள்கை. அண்ணா காலத்தில் ஒன்றே குலம், ஒருவனே தேவன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என அவரே சொல்லியிருக்கிறார். கலைஞர் காலத்திலும் அப்படியே தொடர்ந்தோம். எனவே, நாங்கள் எங்கே எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்பதையும் எங்களுடைய கொள்கையையும் கலக்கக் கூடாது.
நான் இப்போது பேசுவது நாத்திகம் அல்ல. நான் பேசுவது சமத்துவம்.
உங்கள் பார்வையில் திராவிட மாடல் என்றால் என்ன?
திராவிட மாடல் என்பது எங்களுடைய நம்பிக்கை. அது ஒரு குறிப்பிட்ட சமுதாயம் கிடையாது. அது ஒரு மனிதர் சக மனிதரை மதிக்க வேண்டும், சமமாக நடத்த வேண்டும், எங்காவது ஒருத்தர் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அங்கு திராவிடம் வந்து கண்டிப்பாக பாதிக்கப்படுவோருக்கு கைகொடுக்கும். அதுதான் எங்களுடைய திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாமே, பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் சொல்லக்கூடிய திராவிட மாடல்.
தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவற்றைப் பார்த்தால் அவற்றின் பெயரிலேயே திராவிடம் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு கலைஞர் பயன்படுத்தியதை விட தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் திராவிடம் என்ற வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த முழகத்தை அவர் எடுத்துச் சொல்லும் வேளையில் அதை வார்த்தையிலும் செயல்வடிவிலும் முன்னெடுத்துச் செல்லும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.
நீட் விவகாரத்தில் எந்த தீர்வும் கிடைக்கவில்லையே.... இனி உங்கள் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
இப்போது கூட கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் மாளிகையிடம் எழுப்பியிருந்த கேள்விக்கு, சரியான பதில் வரவில்லை. நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்குமாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீதான நடவடிக்கை என்ன கேட்டிருந்தோம். இதற்கான நிலவரத்தை தெளிவுபடுத்த முடியாத நிலையில் அவர்களே இருக்கிறார்கள் என இதன் மூலம் தெரிகிறது.
இதனால் மீண்டும் ஒரு தகவல் உரிமை சட்டப்படி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இனி தொடர்ந்து அழுத்தம் தரப்போகிறோம். கிடைக்கும் என்ன வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம். தற்போது குடியரசு தலைவர் தேர்தல் நடைமுறை நடப்பதால் அது முடிந்த பிறகு மீண்டும் மத்திய அரசுக்கும் குடியரசு தலைவருக்கும் அழுத்தம் தருவோம்.
பல மாநில அரசுகள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும்போது தமிழ்நாடு அரசு மட்டும் அதற்கு விலக்கு கோரி வருகிறதே. ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்காக மட்டும் நீட் விலக்கு தரப்படுவது சட்டப்படி இனி சாத்தியம்தானா?
நீட் மசோதா ஆரம்பிக்கப்பட்டபோதே, அதை அமல்படுத்த விருப்பமுள்ள அரசுகள் என்று கூறித்தான் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஷரத்து உருவாக்கப்பட்டது. மாநில விலக்கு என்ற வகையில்தான் மசோதாவே நிறைவேற்றவும் முயற்சி எடுக்கப்பட்டது. அதனால், இந்த நீட் அமல் சட்டத்தில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்து எங்களுக்கு உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












