You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோனியா காந்தி நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை முன்பு இன்று ஆஜர்
(இந்தியா, இலங்கையில் இன்று (21.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையின் முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜராகிறார் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், "நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8ஆம் தேதியன்று ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் விசாரணைக்கு ஆஜராவதில் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.
இதற்கிடையே ஜூலை 21ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி இன்று ஆஜராகிறார். இந்நிலையில், சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும் கட்சியினரும் நாடு தழுவிய தர்ணாவில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேக்கேதாட்டு அணை விவகாரத்தை விவாதிக்கத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியின்படி, கடந்த ஜூன் மாதம் திட்டமிடப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் முறையிடப்பட்டது. இதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், இவை உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூறி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "கடந்த 2018-ம் ஆண்டு முதல் இப்போது வரை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு முறையாக நீர் பங்கீட்டை மேற்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் புதிய அணை கட்டினால் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களுக்கு முறையாக நீர் பங்கீடு கிடைக்காது.
மேலும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு தொடர்பாக எந்தவொரு விவாதமும் நடத்த அனுமதிக்கக் கூடாது. காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் இதற்கான அமைப்பு கிடையாது. எனவே, ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் சியாம் திவான், "கர்நாடக அரசு முறையாக நீர் பங்கீட்டை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கர்நாடக அரசின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அணை கட்டப்படுவதால் கீழ் பாசன வசதி பெறக்கூடிய மாநிலங்களுக்கு நீர் பிரச்னை இருக்காது. எனவே தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு தேவையற்றது" என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அப்போது, கர்நாடக அரசு தரப்பில் "வழக்கை ஒத்திவைக்கக் கூடாது , அதேபோல காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தவும், அதில் மேக்கேதாட்டு குறித்து விவாதம் செய்யலாம் என்றும் உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
அப்போது நீதிபதிகள், 2018ஆம் ஆண்டு முதல் காத்திருக்கும் நிலையில் மேலும் ஒரு வாரம் காத்திருந்தால் என்னவாகப் போகிறது என்று கேள்வி எழுப்பி, விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 26) ஒத்தி வைத்தனர். மேலும், மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
அதோடு, வரும் வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்தலாம் என்றும் அந்தக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது எனத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
இலங்கை: வாகன இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
வாகன இலக்கத் தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இலங்கையில் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இதைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நடவடிக்கையின் போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வாகன இலக்கத் தகட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி இலக்கமான 3, 4 மற்றும் 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மாத்திரம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படுமென எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்