You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை எழும்பூர் அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கை 700லிருந்து 40 ஆக குறையக் காரணம் என்ன?
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
சென்னை எழும்பூர் அருகே உள்ளது அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தோராயமாக 700 குழந்தைகள் கல்வி பயின்று வந்த இந்தப் பள்ளியில், தற்போது வெறும் 40 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். தலைநகரில் ஒரு அரசுப் பள்ளியில் தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. என்னதான் நடக்கிறது?
இந்தப் பள்ளியில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. பள்ளி வளாகத்தின் அருகே கூவம் நதி செல்லும் நிலையில், குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவால் உருவான பொருளாதார சூழல், நீட் தேர்வில் இடஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றால் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள இந்த அரசுப் பள்ளியில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு விண்ணப்பம்கூட யாரும் வாங்கவில்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
சேர்க்கை சரிவிற்கு என்ன காரணம்?
எழும்பூர் சுற்றுவட்டாரத்தில் கூவம் நதிக்கரையோரம் ஆக்கிரமிப்பில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றி குடியமர்த்தப்பட்டார்கள். இந்த பள்ளியின் பெரும்பாலான மாணவர்கள் நதிக்கரையோரம் வசித்து வந்தவர்கள் என்பதால், அவர்கள் குடியிருப்பு இடம் மாற்றப்பட்டதன் எதிரொலியாக மாணவர்சேர்க்கை தொடர்ந்து சரிந்துள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம்
பள்ளியில் தற்பொழுது 40 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். இவர்களுக்கு ஒன்பது ஆசிரியர்கள் மற்றும் 2 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 11 பேர் வேலை செய்கின்றனர்.
பள்ளி நிலை குறித்து பள்ளியில் வேலை செய்யும் பெயர் வெளியிட விரும்பாத ஒருவரிடம் தொலைபேசியில் விசாரித்தபோது, "டாக்டர் அம்பேத்கர் என்னும் பள்ளியின் பெயருக்கு ஏற்றார் போல் ஆசிரியர்கள் தன்னலம் பாராமல் மாணவர்களின் நலனுக்காக உழைத்தால் நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும் என்கிறார்".
பள்ளியின் நிலை கூறித்து இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது:
பள்ளியில் ஆசிரியர்கள், வகுப்பறைகள், ஆய்வகம், நுாலகம், உடற்கல்வி ஆசிரியர், அலுவலக பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், கழிப்பறை, குடிநீர் வசதி, இரவு காவலர்கள் போன்ற வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். இந்தப் பள்ளியிலேயே நீண்ட காலம் இருக்கும் ஆசிரியர்களை நிச்சயம் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
"இப்பள்ளி அமைந்திருக்கக்கூடிய சுற்றுப் பகுதியில், ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடியிருப்புகள் உள்ளன. இருந்த போதும் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பள்ளியில் கட்டமைப்பை மேம்படுத்தி ஆசிரியர்களை மாற்றி பணியமர்த்தி, சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு பள்ளிகளை இப்பள்ளியோடு இணைத்து பள்ளிக்கு புத்துயிர் கொடுக்கும் பட்சத்தில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க கூடும்" என்றார்.
அம்பேத்கர் பெயர் காரணமா?
"டாக்டர் அம்பேத்கர் பெயரை அரசுப் பள்ளிக்கு வைத்த ஒரே காரணத்திற்காக மற்ற சாதியினர் இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதையே தவிர்த்து வருகின்றனர்" என்கிறார் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் புனித பாண்டியன். அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் சமூகப் பொறுப்பு வேண்டும் என்று கூறிய இவர், பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசியபோது தெரிவித்ததாவது:
"கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எழும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெயர் டாக்டர் அம்பேத்கர் மேல்நிலைப்பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் பள்ளி சுற்றுவட்டாரத்தில் இருந்த தலித்துகள் வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். மற்ற சாதியினர் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வரவில்லை. இதன் விளைவாகவே 700 மாணவர்கள் பள்ளியில் படித்து வந்த நிலை போய் தற்பொழுது 40 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் பயின்று வருகிறார்கள். இது அரசு சார்ந்த பிரச்சினை கிடையாது. சமூகத்திற்கும் பொறுப்பு நிச்சயம் வேண்டும்.
இப்பள்ளியின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக் கூறிய பிறகு பள்ளிக்குச் சென்ற அதிகாரிகள், பள்ளியின் கட்டமைப்பு மேம்பட என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்கள். இருப்பினும் மாணவர்கள் சேர்க்கை விகிதாச்சாரப்படி குறைந்து வருகிறது. இப்பள்ளிக்கு அம்பேத்கர் பெயர் வைத்த பிறகே விகிதாச்சாரப்படி மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலைமை என்றால் கிராமப்புற பகுதிகளின் நிலைமையை நினைத்து பார்க்க வேண்டும்" என்றார்.
அம்பேத்கர் பெயர் காரணம் அல்ல
டாக்டர் அம்பேத்கர் என பெயர் வைத்த காரணத்திற்காக பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்தது என்பதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை. மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி மீது நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு அங்குள்ள ஆசிரியர்களின் செயல்கள் இருக்க வேண்டும் என்கிறார் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது;
"சம்பந்தப்பட்ட பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்தம் 52 மாணவர்கள் பள்ளியில் கல்வி பயின்றுள்ளனர். தற்பொழுது விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியின் கட்டமைப்பில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தினசரி லாரி மூலம் பள்ளிக்கு குடிநீர் வழங்கி வருகிறார். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் குறிப்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி மீது நம்பிக்கை ஏற்படும் வண்ணம் ஆசிரியர்கள் செயல் இருக்க வேண்டும்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்