அசாதாரண பாய்ச்சல்களால் ஸ்பெயின் சவாலை முறியடித்த குட்டி நாடான கேப் வெர்டேயின் 40 வயது கோல் கீப்பர்

    • எழுதியவர், எலிசபெத் கான்வே
    • பதவி, உலகக் கோப்பை செய்தியாளர், அட்லாண்டா ஸ்டேடியம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அட்லாண்டா ஸ்டேடியத்தைச் சுற்றி இறுதி விசில் சத்தம் ஒலித்தபோது, கேமராக்கள் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹாவை நோக்கிக் திரும்பின.

உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஸ்பெயினுடன் தனது அணி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடித்த பிறகு, தான் சாதித்ததன் பிரமாண்டம் மனதிற்குள் உறைக்கத் தொடங்கியதால், அந்த 40 வயது வீரரின் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது.

மைதானத்தின் கேலரிகள் அதிரத் தொடங்கின, 90 நிமிடங்களும் ஓயாத சத்தத்துடன் தங்கள் அணியைத் தாங்கிப் பிடித்த ஆயிரக்கணக்கான கேப் வெர்டே ரசிகர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, நடனமாடி, இந்த முடிவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மைதானத்தில், வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் நோக்கி ஓடினர். நடுநிலையாகப் பார்க்க வந்தவர்கள் கூட இந்தத் தருணத்தில் மூழ்கிப்போயினர். ஆட்டத்தின் இறுதி நேரத்தில், அவர்களில் பலரும் கூடக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினுக்கு எதிராக, அனுபவமிக்க கோல்கீப்பரான வோசின்ஹா, தனது வாழ்நாளின் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு ஹீரோ போல எதிரணியை கோல் ஏதும் அடிக்க விடாமல் தடுத்து, தனது நாட்டின் வரலாற்றிலேயே மறக்கமுடியாத ஒரு முடிவைப் பெற்றுத் தந்தார்.

"நான் அழுததற்குக் காரணம், நான் என் தாத்தா-பாட்டியுடன் தான் வளர்ந்தேன்," என்று ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு வோசின்ஹா கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இப்போது உயிரோடு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இறந்துவிட்டார்கள். அவர்கள் தான் என் வாழ்க்கையில் எல்லாமே, என் உலகமே அவர்கள் தான்."

"அத்துடன் என் அம்மாவாலும் இங்கு வர முடியவில்லை, விசா கிடைக்காததே அதற்குக் காரணம். நிதி நெருக்கடியால் விசாவுக்குக் கட்ட வேண்டிய பணத்தை எங்களால் சரியான நேரத்தில் கட்ட முடியாமல் போய்விட்டது. அவர்கள் இங்கு இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்."

அவர் மேலும் கூறுகையில் "எங்களது சிறந்த ஆயுதமே எங்களது ஒற்றுமை தான். இன்று அணியில் இணையும் புதிய வீரராக இருந்தாலும் சரி அல்லது 10 முதல் 15 ஆண்டுகள் அனுபவமுள்ள வீரராக இருந்தாலும் சரி, நாங்கள் ஒருவரை ஒருவர் குடும்பமாக நடத்தும் விதம் தான் எங்களது மிகப்பெரிய பலம்."

"நாங்கள் இங்கு உலகக் கோப்பையை வெறும் பொழுதுபோக்காகக் கொண்டாட மட்டுமே வந்தோம் என்று அனைவரும் நினைத்தார்கள், ஆனால் அப்படி இல்லை. நாங்கள் இங்கு போட்டியிட வந்திருக்கிறோம், எங்கள் நாட்டுக்காகப் போராட இங்கு வந்திருக்கிறோம்."

'இது என் சிறுவயது கனவு'

வோசின்ஹாவைப் பொறுத்தவரை, இந்தத் தருணம் வாழ்நாள் முழுவதிற்குமான ஒரு தேடலாகும்.

ஜோசிமார் டயஸ் என்ற இயற்பெயர் கொண்ட இந்த கேப் வெர்டே கோல்கீப்பர், உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கனவைத் தனது முழு வாழ்க்கையிலும் துரத்திக் கொண்டே இருந்தார்.

அது இறுதியாக வந்தபோது, வரலாற்றுடன் சேர்ந்தே வந்தது. 40 ஆண்டுகள் மற்றும் 12 நாட்கள் வயதான அவர், ஒரு நாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஞாயிற்றுக்கிழமை குராசாவோவாவின் எலோய் ரூம் படைத்த சாதனையை அவர் முறியடித்தார்.

உண்மையில், எகிப்தின் எஸ்ஸாம் எல் ஹடாரி மட்டுமே தங்கள் உலகக் கோப்பை அறிமுகத்தின் போது வயதானவராக இருந்தார்.

விடாமுயற்சியால் வரையறுக்கப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கையில் இது ஒரு அசாதாரணமான மைல்கல்.

"நான் 2012-இல், எனது 25 வயதில் தான் தொழில்முறை கால்பந்து விளையாடத் தொடங்கினேன். என்னை மாதிரியான ஒருவருக்கு அது மிகவும் தாமதமான ஒன்று," என்றார் வோசின்ஹா.

"நான் தேசிய அணியை விட்டு விலகலாம் என்று கூட நினைத்தேன், ஆனால் இந்தக் கனவுக்காகத்தான் தொடர்ந்து விளையாடினேன்."

"இந்த ஆட்டம் அனைவருக்குமான ஒரு ஆட்டம். நான் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இந்த விருது என் சக வீரர்கள் அனைவருக்கும் உரியது, ஏனெனில் அவர்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நான் அணிக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து உழைப்பேன்."

கேப் வெர்டே ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 600 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகான ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட தீவுக்கூட்டமாகும். அங்கு இளம் கால்பந்து வீரர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மிண்டெலோவில் வளர்ந்த வோசின்ஹா, ஆரம்பத்திலிருந்தே சவால்களை எதிர்கொண்டார்.

"நான் எங்கள் தீவின் சிறந்த கீப்பர்களில் ஒருவனாக இருந்தேன், ஆனால் நான் குள்ளமாக இருந்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். "நான் எவ்வளவு நன்றாக விளையாடினாலும், எனது உயரத்தைக் காரணம் காட்டி என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்."

தனக்கு முன் இருந்த பல வீரர்களைப் போலவே, அவரும் வாய்ப்புகளைத் தேடி நாட்டின் முன்னாள் காலனித்துவ நாடான போர்ச்சுகலுக்குச் சென்றார். அந்த முடிவு ஸ்லோவாக்கியா, அங்கோலா, மால்டோவா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் அவரை அழைத்துச் சென்ற ஒரு நீண்ட தொழில் வாழ்க்கையின் தொடக்கமாக அமைந்தது. இப்போது வோசின்ஹா போர்ச்சுகலின் சாவேஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

வோசின்ஹாவின் பெயரில் கூட கால்பந்து வரலாற்றின் ஒரு பகுதி இருக்கிறது. அர்ஜென்டினா மற்றும் ரியல் மாட்ரிட்டின் சிறந்த வீரரான ஜார்ஜ் வால்டானோவின் நினைவாக, அவரது தந்தை இவருக்கு 'வால்டானோ' என்று பெயரிட விரும்பினார், ஆனால் கேப் வெர்டே அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக, 1986 உலகக் கோப்பையில் பிரபலமான பிரேசில் டிஃபென்டர் ஜோசிமாரின் நினைவாக இவருக்கு ஜோசிமார் என்று பெயரிடப்பட்டது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, மற்றொரு உலகக் கோப்பை மேடையில், வோசின்ஹா தனது சொந்த வரலாற்றைப் படைத்துள்ளார்.

'வோசின்ஹா இந்த ஆட்டத்தையே ஒளிரச் செய்துள்ளார்'

ஆயிரக்கணக்கான கேப் வெர்டே ரசிகர்களின் ஆரவாரத்துடன், ஸ்பெயினின் இடைவிடாத தாக்குதலுக்கு எதிராக அவர் உறுதியாக நின்று, 7 கோல் வாய்ப்புகளைத் தடுத்தார். உலகக் கோப்பை போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்ட கோல்கீப்பர்களில், 1986-இல் பிரேசிலுக்கு எதிரான போட்டியில் தனது 41-வது பிறந்தநாளில் விளையாடிய வட அயர்லாந்து கோல் கீப்பர் பேட் ஜென்னிங்ஸ் மட்டுமே 10 கோல்களைத் தடுத்து இவரை விட அதிக கோல்களைத் தடுத்த கீப்பராக உள்ளார்.

மைதானத்தின் கேலரியில் இருந்தவர்கள், ஒவ்வொரு முறையும் கோல் தடுக்கப்படும் போதும், அதை ஒரு கேப் வெர்டே கோல் போலக் கொண்டாடினர்.

மைதானத்திற்கு வெளியேயும், அவர் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். பிரேசிலில் உலகக் கோப்பை ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றுள்ள யூடியூப் சேனலான CazeTV, தங்கள் பார்வையாளர்களை இவரை ஃபாலோ செய்யச் சொன்ன பிறகு, இன்ஸ்டாகிராமில் 50,000 ஆக இருந்த இவருடைய ஃபாலோயர்களின் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

"அது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது," என்று ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதைப் பற்றிக் கூறும்போது அவர் குறிப்பிட்டார்.

ஸ்காட்லாந்து முன்னாள் வீரர் பேட் நெவின் கூறுகையில், இந்த கோல்கீப்பர் "இந்த ஆட்டத்தையே ஒளிரச் செய்துள்ளார்" என்றார்.

"அவர் உண்மையிலேயே அற்புதமாகச் செயல்பட்டார்," என்று 5 லைவ்விடம் பேசுகையில் நெவின் கூறினார். "அவர் இதைத் தனது 40 வயதில் செய்துள்ளார். ஒவ்வொரு கேமராவும் அவர் மேல் தான் இருக்கிறது, அவருடைய எல்லா வீரர்களும் அவரையே காட்டுகிறார்கள். இது ஒரு அழகான தருணம்."

"கேப் வெர்டே ஆட்டத்தின் பெரும்பகுதியைத் தங்களின் சொந்த 18 யார்டு பாக்ஸிற்குள்ளேயே கழித்தது. முழுமையாக இல்லை என்றாலும், அவர்கள் அதை உடைத்து வெளியே வந்தபோது தைரியமாகவும், அதிக எண்ணிக்கையிலும் முன்னேறினார்கள்."

"அதைச் செய்வதற்கும், அந்த அளவிலான கவனத்தைத் தக்கவைப்பதற்கும், தனித்தனி நபர்களாக இருந்தால் முடியாது, ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதைச் செய்ய முடியும்."

ஐடிவியில் பேசிய லீ டிக்சன் கூறுகையில் "இது முற்றிலும் அற்புதம். ஒரு சிறந்த ஆட்டம். மற்ற எதையும் விட அவர்கள் அந்த ஒரு புள்ளிக்குத் தகுதியானவர்கள். ஸ்பெயின் வீரர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறுகிறார்கள், ஆனால் இந்த இரவு கேப் வெர்டேவுக்குரியது."

"அவர்களில் ஒவ்வொருவரின் ஆட்டமும் என்ன ஒரு அற்புதம்! சென்டர் ஹாஃப்கள், ஃபுல்-பேக்குகள், அங்கே அழுது கொண்டிருக்கும் அந்த மனிதர் (வோசின்ஹா) - இதைப் பார்த்து எனக்கே அழுகை வந்துவிடும் போல இருக்கிறது."

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட கேப் வெர்டே, உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற வரலாற்றிலேயே மூன்றாவது மிகச்சிறிய நாடாகும், இந்த முடிவு அவர்களுக்குப் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கேலரியில் இருந்த அவர்களின் ஆதரவாளர்களும் அதே தீவிரத்தை வெளிப்படுத்தினர். நீல நிற ஆடை அணிந்து, சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறக் கொடிகளை அசைத்து, அவர்கள் ஆட்டம் முழுவதும் பாடி ஆடினர், ஒவ்வொரு கடினமான தருணத்திலும் தங்கள் அணியை ஊக்குவித்தனர். ஆட்டம் முடிவதற்குள், நடுநிலையான ரசிகர்களின் இதயங்களையும் அவர்கள் வென்றனர். கேப் வெர்டேயின் கதை அனைவருக்குமான கதையாக மாறிப்போனது.

ஷெஃபீல்டை விடப் பெரியதாக இல்லாத ஒரு சிறிய தீவு நாடு, ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கற்பனையையும் தன்வசப்படுத்திக் கொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு