You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பின் போருக்கு முற்றுப்புள்ளி - அமெரிக்க ஆதிக்கத்தின் எல்லையை அம்பலப்படுத்திய இரான் ஒப்பந்தம்
- எழுதியவர், ஜெர்மி போவன்
- பதவி, பெய்ரூட்டிலிருந்து
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தப் போர் தான், இதுவரை அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்த மிக மோசமான வெளியுறவுக் கொள்கைத் தவறாகும்.
இது தன் எதிரிகளைத் தடுக்கும் அமெரிக்காவின் திறனைக் கடினமாக்குகிறது.
மத்திய கிழக்கின் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் நிலைத்தன்மை கொண்ட தீவுகளாக விளங்கும் வளைகுடாவின் எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளுடனான அதன் கூட்டணியை இந்தப் போர் சேதப்படுத்தியுள்ளது.
இந்த நாடுகளின் வணிக மாதிரியை மீண்டும் சீரமைக்கப் பல ஆண்டுகள் ஆகும்.
மறுபுறம், தங்களது கூட்டணிகளைப் பன்முகப்படுத்துவது பற்றியும், கடல் கடந்து உள்ள தங்களின் அண்டை நாடான இரானுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளைக் கண்டறிவதன் அவசியம் குறித்தும் இந்த நாடுகளின் அதிகாரிகள் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றனர்.
அமெரிக்கா தனது எளிதில் ஈடுசெய்ய முடியாத ஆயுத இருப்புகளை வேகமாகச் செலவழித்ததையும், அதன் அதிகார வரம்புகளை அது எதிர்கொள்வதையும் சீனா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும்.
கடைசி நிமிடத் தடங்கல்கள் ஏதும் இல்லை என்று வைத்துக்கொண்டால், இந்த ஒப்பந்தம் இரானில் உள்ள தங்களின் எதிரியின் பலத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் தவறாகக் கணித்ததன் அடிப்படையில் உருவான ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
அது, போரினால் தங்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிய, குறிப்பாகத் தாக்குதல் எல்லையில் இருக்கும் பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சை உருவாக்கும்.
டிரம்பின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்கிறது. இது உலகளாவிய பொருளாதாரம் மற்றும் உலகெங்கிலும் நெருக்கடியில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.
மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகளும் வணிகங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் விநியோகங்களை நம்பியிருந்த உர உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம், ஆண்டின் பிற்பகுதியில் ஏழை நாடுகளில் உள்ள மக்கள் பசியால் வாட வழிவகுக்கும். குறிப்பாக, சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா அதிக ஆபத்தில் உள்ளது.
இந்த ஒப்பந்தம் ஒரு அமைதி ஒப்பந்தம் அல்ல. பேச்சுவார்த்தையாளர்கள் இரண்டு பக்கங்களில் 14 புள்ளிகளைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ள இதன் முழு உரை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனால், இந்த நீரிணையை மீண்டும் திறப்பதோடு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை நீட்டிக்கிறது மற்றும் இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகையையும் நீக்குகிறது.
இது மிகவும் சிக்கலான பிரச்னைகளை எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்திவைக்கிறது. அந்த செயல்திட்டத்தில் இரானின் அணுசக்தி திட்டத்தின் எதிர்காலம் மற்றும் அது வழங்கும் சலுகைகளுக்கு பதிலாக, எந்தளவு தடைகளில் இருந்து நீக்கம் பெறும் என்பதும் அதில் அடங்கும்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போருக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்போது பிப்ரவரி 27 ஆம் தேதிக்குச் செல்வோம். அப்போது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தன, தங்களது விமானங்களுக்கு ஆயுதம் வழங்கி, தங்களது குழுவினருக்கு விளக்கமளித்து, தங்களது ஏவுகணைகளுக்கான இலக்குகளைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஜெனீவாவில், இரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அத்தியாவசியப் பேச்சுவார்த்தைகள் என்று உலகுக்குச் சொல்லப்பட்ட ஒன்றில் இரானும் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தன.
இரானிய பேச்சுவார்த்தையாளர்கள் தாங்கள் ஒரு தீவிரமான செயல்பாட்டில் இருப்பதாக நம்பியதாகவும், கோரிக்கைகளுடன் தங்களின் சலுகைகளையும் மேசையில் வைத்திருந்ததாகவும் பல ஆதாரங்கள் எனக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்துள்ளன.
வளைகுடாவின் நுழைவுவாயிலில், ஹோர்மூஸ் நீரிணை திறந்திருந்தது, இது உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவைகளில் சுமார் 20 சதவிகிதத்தை கொண்டு செல்ல அனுமதித்தது, நவீன வாழ்க்கையின் முக்கிய அங்கங்களாக மாறிவிட்ட விவசாய உரங்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் உள்ளிட்ட பெட்ரோ-கெமிக்கல் தொழில்துறையின் துணை தயாரிப்புகளையும் கொண்டு செல்ல அனுமதித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையாளர்கள் மீண்டும் கலந்துரையாடுவதற்கும், கப்பல்கள் அந்த நீரிணை வழியாக மீண்டும் பயணம் செய்வதற்கும் வழிவகுக்கிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் ஈடுபடுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு இருந்த அதே நிலைக்கே, இப்போது மீண்டும் விஷயங்கள் திரும்பியுள்ளன.
தொடர்ச்சியான திடீர் தாக்குதல்களில் முதலாவதாக, இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது நெருங்கிய ஆலோசகர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.
அதே நேரத்தில், தெற்கு இரானில் உள்ள மினாப்பில் உள்ள ஒரு பள்ளியை அமெரிக்கத் தாக்குதல் தரைமட்டமாக்கியதாக பல விசாரணைகள் கூறுகின்றன.
இதில் குறைந்தது 120 பள்ளி குழந்தைகள், பெரும்பாலும் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருமே குறுகிய காலம் நீடிக்கும், தீவிரமான, வெற்றிகரமானதாக இருக்கும் என்று அவர்கள் நம்பிய ஒரு போரின் தொடக்கத்தை அறிவிக்க வீடியோவில் தோன்றினர்.
ஆனால், அது மிகப்பெரிய தவறான கணிப்பாக அமைந்தது.
அவர்களது உரைகள் இரானில் உள்ள ஆட்சியின் வீழ்ச்சியைக் கணித்தன.
மாறாக, அந்த ஆட்சி கவிழாமல் தப்பித்தது அதனை வலுப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முழு அளவிலான ஆட்சி மாற்ற முயற்சி தான் அதன் மோசமான கனவாக இருந்தது.
அது நடந்தது, ஆனால் தோல்வியடைந்தது. தெஹ்ரானில் உயிர் தப்பிய அதிகார மையத் தலைவர்கள் துணிச்சலுடன் உருவெடுத்துள்ளனர்.
காமனெயியும் அவரது ஆலோசகர்களும் விரைவாக மாற்றப்பட்டனர். அவரது மகன் மொஜ்தாபா அதி உயர் தலைவராகப் பொறுப்பேற்றார். இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தலைவர்களின் ஆதிக்கம் கொண்ட இளம் தலைமுறை தளபதிகளும் பொறுப்பேற்றனர்.
அவர்கள் முந்தைய தலைமுறையினரைப் போலவே முற்றிலும் கருத்தியல் ரீதியானவர்கள், ஆனால் அவர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள் அல்ல.
இரானில் இஸ்லாமிய ஆட்சி தொடர்ந்து நீடிப்பதற்கான போராட்டம் என்று அவர்கள் சரியாகக் கருதிய ஒன்றில், அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.
ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது மற்றும் இரானின் அரபு அண்டை நாடுகள், அமெரிக்கப் படைகள், தளங்கள் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நன்கு திட்டமிடப்பட்ட உத்தியை அவர்கள் அதன் எல்லை வரை கொண்டு சென்றனர்.
அமெரிக்காவின் அதிகாரம் இரானின் ஆயுதப் படைகளை முடக்கிவிட்டதாகக் கூறிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர் ஹெக்செத்தின் ஆக்ரோஷமான சொல்லாடல், மிகைப்படுத்தப்பட்டதாகவும் உண்மைக்கு புறம்பானதாகவும் மாறியது.
இந்தப் போரில் அமெரிக்காவின் முழுமையான பங்காளியாக இஸ்ரேல் இருந்தது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையிலிருந்து அது விலக்கப்பட்டதால், இந்த ஒப்பந்தத்தை ஏமாற்றத்துடன் பார்த்து வருகிறது.
இஸ்ரேலின் மிக ஆபத்தான எதிரியாகத் தான் கருதும் இஸ்லாமியக் குடியரசை அழிப்பதற்கான வாய்ப்புக்காகத் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் காத்திருந்ததாக நெதன்யாகு பிப்ரவரி 28 அன்று கூறினார். இப்போது அவர் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததாக அரசியல் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அக்டோபர் மாத இறுதிக்குள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வேகமாக நெருங்கி வரும் நிலையில், அதுவரை இந்த நடவடிக்கையின் குற்றச்சாட்டுகளையும் அதன் விளைவுகளையும் நெதன்யாகு சமாளிக்க வேண்டியிருக்கும்.
லெபனானின் தெற்கில் உள்ள ஒரு பரந்த நிலப்பரப்பைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாகக் கூறியிருப்பது ஒரு சாத்தியமான தடையாக உள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து இஸ்ரேல் பொதுமக்களை வெளியேற்றியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டடங்களையும் அழித்துள்ளது. லெபனான், சிரியா மற்றும் காஸாவில் உள்ள நிலங்களை இஸ்ரேல் "காலவரையின்றி" ஆக்கிரமிக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
லெபனானில் இன்னும் கூடுதலான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நெதன்யாகுவுக்கு அவரது அமைச்சரவையில் உள்ள தீவிரப் போக்காளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளிடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சிலர் அந்நாட்டின் தெற்குப் பகுதியைத் தங்களோடு இணைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து அளித்த பேட்டிகளில் நெதன்யாகு மீது தனது விரக்தியை வெளிப்படுத்தி வரும் டிரம்பை எதிர்ப்பதன் மூலம், அமெரிக்காவுடனான இஸ்ரேலின் கூட்டணிக்கு மேலும் சேதம் விளைவிக்கும் ஆபத்தை தம்மால் எதிர்கொள்ள முடியுமா என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமையன்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல், ஒரு முக்கியமான தருணத்தில் பேச்சுவார்த்தைகளைக் குலைப்பதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும். மாறாக, பேசுவதற்கான நேரம் முடிவடைவது போல் தோன்றியதால், அது பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தியதாகத் தெரிகிறது.
இப்போது சற்று ஆசுவாசம் பெறும் இடைவெளி கிடைத்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான ஒரு பெரிய உடன்படிக்கையாக நீட்டிக்க முடியும் என்று முடிவுக்கு வருவது மிகவும் முன்கூட்டிய ஒன்றாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தையே மாற்றக்கூடியதாக இருக்கும்.
ஆனால், கொள்கை ரீதியான வேறுபாடுகளும், முழுமையான நம்பிக்கையின்மையின் காரணமாக, அது இன்னும் நடைமுறைக்கு வர சாத்தியமற்ற தொலைதூரக் கனவாகவே திகழ்கிறது.
இந்தப் போர் உடன் தொடர்புடைய அனைவருக்கும் இது ஒரு வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று டிரம்ப் யாருக்கு சுதந்திரம் கிடைக்கும் என உறுதியளித்தாரோ, அந்த இரானிய மக்கள் இன்னும் ஒரு இரக்கமற்ற ஆட்சியால் தான் ஆளப்படுகிறார்கள்.
இந்த ஆட்சி, தெருக்களில் போராட்டம் நடத்தியதற்காக ஜனவரி மாதத்தில் தங்களது சொந்த குடிமக்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றது.
அமெரிக்கா இன்னும் மகத்தான பொருளாதார மற்றும் ராணுவ ஆற்றலைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆனால் இரானுக்கு எதிராகப் போருக்குச் செல்வதற்கான டிரம்பின் உணர்ச்சிவயப்பட்ட முடிவு, மாறிவரும் உலகில் தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் ஒரு வல்லரசின் நடவடிக்கையைப் போலத் தோன்றுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு