"ஒரு மாணவர் கூட வகுப்புக்கு வரவில்லை" - சம்பளத்தை மொத்தமாக திரும்ப கொடுத்த இந்தி பேராசிரியர்

பட மூலாதாரம், Neeraj Sahay
- எழுதியவர், நீரஜ் சஹாய்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கல்லூரி பேராசிரியர் ஒருவர், தன் சம்பளப் பணத்தை மொத்தமாக திருப்பி கல்லூரிக்கே கொடுத்துள்ளார். ஆம், நீங்கள் வாசித்தது சரிதான். கடந்த இரண்டாண்டு காலமாக ஒரு மாணவர் கூட தன் வகுப்புக்கு வரவில்லை என்பதால், அந்த இரண்டாண்டு காலத்துக்கான தன் சம்பளப்பணம் மொத்தத்தையும் பல்கலைக்கழகத்திடமே திருப்பி அளித்துள்ளார் அவர்.
என்ன நடந்தது? ஏன் இந்த முடிவு? பல்கலைக்கழகம் சொன்ன பதில் என்ன?
பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் உள்ள பாபாசாகேப் பீம் ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் லலன் குமார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நிதிஷ்வர் கல்லூரியில், இந்தி பாடப்பிரிவின் உதவிப் பேராசிரியர் முனைவர் லலன் குமார். இவரது வகுப்பில் தொடர்ந்து மாணவர்களின் வருகை இல்லாததால், தனது இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாத சம்பளம் மொத்தமாக 23 லட்சத்து 82 ஆயிரத்து 228 ரூபாயை திருப்பி அளித்துள்ளார்.
இந்தத் தொகைக்கான காசோலையை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஆர்.கே.தாக்கூரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளார்.
பதிவாளர் முதலில் காசோலையை ஏற்க மறுத்துவிட்டார், ஆனால் காசோலையை ஏற்காவிட்டால் வேலையை விடப்போவதாகக் கூறிய டாக்டர் லலன் குமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பின்னர் அந்த காசோலையை பதிவாளர் ஏற்றுக்கொண்டார் என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து பேராசிரியர் டாக்டர் லலன் குமாரிடம் கேட்ட போது, "எனது ஆசிரியப் பணிக்கு நான் உண்மையாக நடந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. தேசத்தந்தை காட்டிய பாதையிலும், மனசாட்சியின் குரலாகவும், பணிபுரிந்த நாளிலிருந்து இன்று வரையிலான சம்பளத் தொகை முழுவதையும் பல்கலைக்கழகத்திற்குத் திருப்பி அளித்தேன்" என்றார்.
ஆனால், மொத்தமாக இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டபோது, "இவ்வளவு பெரிய தொகையை வழங்குவதற்காக எனது சகாக்கள் மற்றும் நண்பர்கள் சிலரிடம் நிதி உதவி பெற்றுள்ளேன், ஆனால் பிரச்னை இதுவல்ல. உண்மையான பிரச்னை, எனக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது" என்றார்.
யார் இந்த லலன் குமார்?
டாக்டர் லலன் குமார், வைஷாலி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பிகாரில் இடைநிலைப் படிப்பை முடித்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பட மூலாதாரம், Neeraj sahay
தங்கப் பதக்கம் பெற்ற டாக்டர் லலன் குமார், அகாடமிக் எக்ஸலன்ஸ் விருதையும் பெற்றுள்ளார்.
டாக்டர் லலன் குமார் செப்டம்பர் 24, 2019 அன்று பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டார்.
"ஆசிரியர்கள் இப்படிப் பாடம் நடத்தாமல் சம்பளம் வாங்கினால், ஐந்தாண்டுகளில் தங்கள் கல்வித் தகுதியையே இழக்கக்கூடும். சீரான கல்விப் பயன்பாடுகள் இருந்தால்தான் தொழில் வளர்ச்சியடையும்" என்பது அவர் கருத்து.
அவர், "நான் இங்கு நியமிக்கப்பட்டதில் இருந்து, இக்கல்லூரியில் படிக்கும் சூழலே நிலவிப் பார்க்கவில்லை. சுமார் 1,100 மாணவர்கள் ஹிந்தியில் சேர்ந்துள்ளனர், ஆனால் அவர்கள் அதில் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருப்பதால், அவர்களால் கல்விப் பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில், நான் ஊதியம் பெறுவது நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை" என்கிறார் அவர்.
பேராசிரியர் லலன் குமார் மேலும் கூறியதாவது: "கல்லூரியின் நிலையைக் கருத்தில் கொண்டு, தன்னை மாணவர்கள் வரக்கூடிய ஒரு கல்லூரிக்கு மாற்றுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் ஆர்.கே.தாக்கூரிடம் கடந்த காலங்களில் பலமுறை கோரிக்கை விடுத்தேன். இது தொடர்பாக அவரும் விண்ணப்பம் அளித்துள்ளார், ஆனால், இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















