You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீடுகளில் ஆர்டலிகளை பயன்படுத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம் அதிரடி
'காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்ட ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர், தனக்கு ஒதுக்கப்பட்ட காவலர் குடியிருப்பு இல்லத்தைக் காலி செய்யுமாறு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கைக் கடந்த 14 ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 'கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால், மனுதாரர் இடத்தைக் காலி செய்யவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அந்த இடத்தை இந்த ஆண்டுதான் மனுதாரர் காலி செய்துள்ளார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இங்கே சொல்லப்படவில்லை. அதிகாரிகள் தங்களுக்குக்கீழ் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் காவல்துறை நன்மதிப்பை இழக்க நேரிடும். அதிலும், காவல்துறை மீது மக்கள் மத்தியில் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன' எனக் குறிப்பிட்டார்.
"காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களிலேயே கருப்பு பிலிம் பயன்படுத்தப்படுகிறது. காவல்துறையின் பெயரையும் வாகனங்களில் தவறாகப் பயன்படுத்துகின்றனர். தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவலர்களைப் பயன்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. காவல்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், தலைமையின்கீழ் செயல்படுகிறவர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தீர்வு ஆகியவை குறித்து அரசு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.
இந்த மனு இன்று (ஜூன் 21) விசாரணைக்கு வந்தபோது, "ஓராண்டுகாலம் பயிற்சி முடித்த பிறகு 45,000 ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். இந்த விவகாரத்தில் ஆர்டர்லிகளை தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, "அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும் பரிசும் கொடுப்பது தவறுதான். அரசியல்வாதிகளும் காவல்துறையும் கூட்டு சேர்ந்து செயல்படக் கூடாது. அதனால் குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும். ஊரில் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றும் நடவடிக்கைகளை எடுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள், தங்கள் வாகனங்களில் மட்டும் அதனை ஒட்டியிருப்பதை என்னவென்று குறிப்பிடுவது?" எனச் சாடிய நீதிபதி, "ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் ஆகியோரது வீடுகளில் உள்ள காவலர்களை திரும்பப் பெற வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'ஆர்டர்லி குறித்து உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு டி.ஜி.பிக்கு உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சரும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளார். அந்தவகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகக் கூறிய நீதிபதி, வரும் ஜூலை 25 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்