You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அருப்புக்கோட்டை மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான தாளாளர் பாஜகவில் இருந்து நீக்கம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி ஒன்றின் தாளாளர் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
மாணவிக்கு நிர்வாணமாக வீடியோ கால் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள எம். தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜக சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தவர்.
அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு நர்சிங் மற்றும் கேட்டரிங் என்னும் தனியார் கல்லாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் தாளாளராக இருப்பவர் தாஸ்வின் ஜான் கிரேஸ்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக மாணவி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. அந்த வீடியோ தற்போது அந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் கல்லூரி மாணவிகள் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நேற்று கல்லூரியும் மூடி இருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரி வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தாஸ்வின் ஜான் கிரேஸை நகர் காவல்நிலைய போலீசார் நேற்று கைது செய்தனர்.
8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
வீடியோ காலில் மாணவியிடம் நிர்வாணமாக பேசியதாகக் கைதாகியுள்ள தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது, அந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 , இந்திய தண்டனைச் சட்டம் 354 (A), 354(b) ,354(c) ,506(1) , உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் கல்லூரி மாணவிகள் தங்களின் படிப்புக்கும் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கல்லூரி கட்டணத்தையும் சான்றிதழ்களையும் திரும்பி தர வலியுறுத்தி திடீரென பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்