You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்கள் மீது புகார் கூறிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி - என்ன நடந்தது?
- எழுதியவர், பிரஷாந்த் ஷர்மா
- பதவி, பிபிசி டிஸ்இன்ஃபார்மேஷன் குழு
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சில மாதங்களுக்கு முன், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, அதன் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவு, விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த மே 31ம் தேதி மாலை 5 மணியளவில், விவேக் அக்னிஹோத்ரி தனது சமூக ஊடகத்தில், இரண்டு நிமிடம் 14 வினாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தான் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டதாகவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வீடியோ பதிவில், விவேக் அக்னிஹோத்ரி கூறுகையில், "நான் தற்போது ஐரோப்பாவில் 'Humanity Tour' என்ற சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் எனப் பிரபலமான பல இடங்களில் என்னைப் பேச அழைத்துள்ளனர். ஆனால் நான் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு வந்தபோது, அந்த நிகழ்ச்சியை 'நீங்கள் வீடியோ பதிவு செய்ய முடியாது' என்று கடைசி நிமிடத்தில் என்னிடம் கூறினார்கள்," என்றார்.
"நான் பிரதமர் நரேந்திர மோதியின் ஆதரவாளர் என்பதால் எனது நிகழ்ச்சிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்களும் முஸ்லிம் மாணவர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இது நடந்தது," என்கிறார் அக்னிஹோத்ரி.
மேலும் அந்த வீடியோவில், விவேக் அக்னிஹோத்ரி, "இன்று நான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவிருந்தேன். அங்கு ஆக்ஸ்போர்ட் யூனியன் என்னைப் பேச அழைத்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர்கள் மே 31ஆம் தேதி இரண்டு நிகழ்ச்சிகளைத் தவறுதலாக முன்பதிவு செய்ததாகக் கூறி, எனது நிகழ்ச்சியை ரத்து செய்தனர். நான் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி மே 31க்கு பதிலாக ஜூன் 1க்கு மாற்றப்பட்டது," என்று கூறினர்.
விவேக் அக்னிஹோத்ரி, "எனது நிகழ்ச்சியை அவர்கள் ரத்து செய்தனர். ஆனால் உண்மையில், அவர்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மையினரான இந்து மாணவர்கள் குரல் கொடுப்பதைத் தடுக்கின்றனர்," என்கிறார்.
மேலும், "ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். எனது இந்தப் போராட்டத்தை அனைவரும் பகிருங்கள். அனைவரும் எனக்கு ஆதரவு தாருங்கள்," என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும், இந்த விவகாரம் செய்தி ஊடகங்களில் முக்கியமான விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விவேக் அக்னிஹோத்ரியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடிகர் அனுபம் கேர் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிபிசி விசாரித்தபோது, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் கூற்றுகள் தவறானவை என்றும் அவர் கூறிய அனைத்தும் உண்மை அல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
உண்மையில் நடந்தது என்ன?
விவேக் அக்னிஹோத்ரி தற்போது ' 'Humanity Tour' என்ற ஒரு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது சமூக வலைதளத்தில் மே 26ம் தேதி பகிர்ந்துள்ளார்.
அச்செய்தியின்படி, விவேக் அக்னிஹோத்ரி இந்த ஆண்டு மே 28 முதல் ஜூன் 26 வரை ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் உரையாற்ற தன்னை அழைத்ததாகவும் விவேக் அக்னிஹோத்ரி அந்த வீடியோவில் கூறியிருந்தார். அதன் பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் வீடியோ பதிவு செய்ய அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக யூனியன் அவரது நிகழ்ச்சியை ரத்து செய்தது எனவும் கூறியிருந்தார்.
கேம்பிரிட்ஜ் விவேக்கிற்கு அழைப்பு விடுத்ததா?
சமூக ஊடகங்களில் விவேக் கூறியதைப் போல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்ததா அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சியை கேம்பிரிட்ஜின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி என்று அவர் அழைக்கிறாரா என்று விவேக் அக்னிஹோத்ரியிடம் பிபிசி கேட்டது.
இந்த கேள்விக்கு அக்னிஹோத்ரி, சமூக ஊடகங்களில் உலவும் பொய்யான செய்தி குறித்து தான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
இந்த விவகாரத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியைத் தொடர்பு கொண்டு பிபிசி விசாரித்தது.
பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு அதிகாரப்பூர்வமாக பதிலளித்த கல்லூரியின் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவின் இயக்குநர் நிக்கோலா, " மே 20ஆம் தேதிக்கான 30 லார்ட் ரானா அறக்கட்டளையின் முன்பதிவுகளை கல்லூரி ஏற்றுக்கொண்டது. இது முற்றிலும் தனிப்பட்ட மற்றும் வணிகரீதியானது. விவேக் அக்னிஹோத்ரியின் நிகழ்ச்சிக்கு கல்லூரி எந்த வகையிலும் தொடர்பு இல்லை. மேலும் இந்தத் தகவலை அவருக்கு கல்லூரியின் ட்விட்டர் கணக்கு மூலம் தெரிவிக்கப்பட்டது.
வீடியோ பதிவு குறித்த கேள்விக்கு, "எந்த ஒரு நிகழ்ச்சியின் வீடியோ பதிவுக்கும் முன் அனுமதி பெற வேண்டும். விவேக் அக்னிஹோத்ரியின் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்படவில்லை," என்று நிகோலா கூறுகிறார்.
பிபிசி டிஸ்இன்ஃபார்மேஷன் குழு நடத்திய விசாரணையில், விவேக் அக்னிஹோத்ரிவுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமோ அல்லது ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியோ அழைப்பு விடுக்கவில்லை என்றும் அந்த கல்லூரியில் உள்ள ஓர் அரங்கத்தில் ராணா அறக்கட்டளையின் தனிப்பட்ட நிகழ்வில் கலந்து கொள்ள அவர் வந்ததாகவும் கண்டறிந்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் விவகாரம் என்ன?
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலில், தன்னை ஆக்ஸ்போர்ட் யூனியனில் பேச அழைத்ததாகவும் கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, மே 31ம் தேதிக்கு பதிலாக ஜூன் 1ஆம் தேதிக்கு, தன்னிடம் கூட தகவல் தெரிவிக்காமல் தேதியை மாற்றியதாகவும் விவேக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, விவேக் அக்னிஹோத்ரி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரியின் கூற்றுகளின் உண்மையை அறிய விரும்பி, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பிபிசி நேரடியாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு பிரிவின் இயக்குநர் ஸ்டீபன்ஸ் பிபிசிக்கு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்பினார். அதில், "ஆக்ஸ்போர்ட் யூனியன் ஒரு தனிப்பட்ட, சுதந்திரமான அமைப்பு. ஆக்ஸ்போர்ட் யூனியன், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி அல்ல. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு ஆக்ஸ்போர்ட் யூனியன் மீது எந்த அதிகாரமும் இல்லை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பதிலளித்த பிறகு, ஆக்ஸ்போர்ட் யூனியனின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை நாம் சரி பார்த்தோம். ஆக்ஸ்போர்ட் யூனியன் ஒரு சுயாதீன விவாத அமைப்பு என்பதைக் கண்டறிந்தோம். இணையத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, இந்த நிறுவனத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் இந்த நிறுவனம் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி அல்ல. எந்த நபரும் அதன் உறுப்பினராகச் சேரலாம்.
பிபிசி தனது விசாரணையில், விவேக் அக்னிஹோத்ரியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆக்ஸ்போர்ட் யூனியனும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி அல்ல என்று கண்டறிந்துள்ளது. ஆகவே, ஆக்ஸ்போர்ட் யூனியன் விடுத்த எந்த அழைப்பையும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அழைப்பாகக் கருத முடியாது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்