You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ரயில்களில் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம்'
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (ஜூன் 3) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
ரயில்களில் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியின்படி, ரயில்களில் சமீப காலமாக சங்கிலி இழுக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருவதையும், சக பயணிகளின் சிரமத்தை மனதில் வைத்தும், பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளை எடுத்துச் செல்வது குறித்து ரயில்வே நிர்வாகம் பயணிகளை எச்சரித்துள்ளது.
"ரயிலில் பயணம் செய்யும் போது லக்கேஜ்களை எடுத்துச் செல்வதற்கு வரம்பு உள்ளது என்றாலும், பல பயணிகள் அதிக உடைமைகளுடன் ரயிலில் பயணிக்கின்றனர், இது மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது," என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே, பயணத்தின் போது அதிகப்படியான உடைமைகளுகடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தியது ரயில்வே நிர்வாகம். இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் இன்பம் பாதியாக இருக்கும்! அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள், " என்று கூறியிருந்தது.
இந்நிலையில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
"இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் தான்"
புதிய கல்விக் கொள்கையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொிவித்துள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் காந்திநகரில், கல்வி அமைச்சர்களின் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச கல்வி அமைச்சா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனா். இந்த மாநாட்டில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பேசினார்.
அவர் பேசுகையில், "இந்திய மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள் தான். அது குஜராத்தி, தமிழ், பெங்காலி அல்லது மராத்தி என எந்த மொழியாக இருந்தாலும் அது இந்தி மற்றம் ஆங்கில மொழியை விட தாழ்ந்தது அல்ல.
ஏனெனில் ஒவ்வொரு மொழியும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கல்வி அமைப்பை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் காலனித்துவ ஆட்சி உருவானது. அந்த அடிமைத்தன மனப்போக்கு மற்றும் காலனித்துவத்தில் இருந்து வெளியே வருவதற்கான காலம் வந்துவிட்டது. அப்போது தான் பள்ளி கல்வி மூலம் அறிவு சார் தலைமைத்துவத்தை இந்தியா பெறுவதற்கான அடித்தளமாக அமையும். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்பிற்கும் தொலைக்காட்சி சேனல்களை அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சிகள் உருவாக்கப்படும். அதற்காக பட்ஜெட்டில் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார்.
'பைக் விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் இழப்பீடு குறைப்பு'
விபத்து ஒன்றில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாததால் மதுரை கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை குறைத்து உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மனு விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால், விபத்தில் உயிரிழந்தவரின் கவனக்குறைவுக்காக கீழமை நீதிமன்றம் நிர்ணயம் செய்த இழப்பீட்டு தொகையில் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு கீழமை நீதிமன்றம் நிர்ணயித்த ரூ.17,63,800 இழப்பீட்டுத் தொகையில் பத்து சதவீதம் குறைத்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.15,12,800 மற்றும் அதற்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியும் 8 வாரத்தில் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்.
பின்னர் இப்பணத்தை விபத்தை ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் இருந்து காப்பீட்டு நிறுவனம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் கிளை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்