பட்டமளிப்பு விழா: நன்றி தெரிவித்த ஸ்டாலின்; தமிழின் பெருமையை பேசிய ஆளுநர் - நடந்தது என்ன?

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் விழாவில் ஆளுநரும் முதல்வரும் ஒரே மேடையில் பங்கேற்றது விவாதப் பொருளாக மாறியது. 'பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும்' என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 731 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இதில், தமிழ்நாடு அரசில் பணியாற்றும் எம்.எஸ்.சண்முகம், மகேஸ்வரி உள்பட ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தமிழ், பொருளாதாரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெற்றனர். அதேநேரம், கடந்த 2011-16 அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

கடந்த ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு ஒரே மேடையில் ஆளுநரும் முதல்வரும் பங்கேற்க இருந்ததால் சர்ச்சை வரலாம் என்ற ரீதியில் தகவல்கள் வெளியானது. அண்மையில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் அமர்ந்திருந்த மேடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தி மொழி குறித்துப் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

முதல்வர் பேசியது என்ன?

இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் உயர்கல்வித் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கல்லூரியில் சேர்ந்து படிப்பு முடியும் வரையில் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது,'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், "சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேட்டினை சமர்ப்பிக்கும்போது பத்து பக்கங்கள் அளவில் சுருக்கமாக தமிழில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை பாராட்டுகிறேன். பல்துறையைச் சார்ந்த ஆய்வுகள், தமிழில் மொழியாக்கம் செய்யப்படுவது என்பது தமிழ் மொழியின் வளத்துக்கும் பெருமைக்கும் துணை நிற்கும். மேலும், முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் ஏழை மாணவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண்கள் ஆகியோர் இலவசமாக உயர்கல்வியில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இலவச கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு, வரும் கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைகளில் இலவசமான கல்வி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு இவை அனைத்தையும்விட எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

ஆளுநருக்கு நன்றி

''அனைவருக்கும் சமமான சமூகநீதி என்ற தமிழ்நாடு அரசின் உயரிய திராவிட நோக்கத்தை உயர்கல்வியில் நிறைவு செய்யும் வகையில் 2022-23 கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவர்களூக்கு சமூகநீதி மற்றும் திருக்குறள் காட்டும் தொழில்நிலை ஆகியவை விருப்பப் பாடமாக இடம்பெற உள்ளது. பட்டங்களை தாண்டிய சமூக அறிவைப் பெற இது உதவும்,'' எனக் குறிப்பிட்ட முதலமைச்சர்,

''கல்விதான் பெரும் சொத்து. இதனை யாரும் பிரிக்க முடியாது. அதனால்தான் காமராஜரின் காலத்தை பொற்காலம் என்கிறோம். கலைஞரின் காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதுபோல என்னுடைய ஆட்சிக்காலம் உயர்கல்வியின் பொற்காலமாக உருவாக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். இத்தகைய முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

நீட் பயிற்சி மையங்களை சாடிய பொன்முடி

முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, '' கல்வியையும் சுகாதாரத்தையும் இரு கண்கள் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி என்பது மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதையும் ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்'' என்றார்.

பட்டமளிப்பு விழா

பட மூலாதாரம், Getty Images

மேலும், ''நீட் உள்பட எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கொள்ளையடிப்பதற்குத்தான் அவை உதவி செய்கின்றன. இதுபோன்ற தேர்வுகள் மாணவர்களுக்கு பலன் அளிக்காது. கல்வி என்பது மாநில உரிமையாக இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி நன்றாக வளரும்'' என்றார்.

ஆளுநர் பேசியது என்ன?

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், '' தமிழை உலகின் தொன்மையான மொழி எனப் பிரதமர் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டதைப்போலவே தமிழ் மிகவும் பழைமையான மொழிதான். சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டை அறிந்து வைத்திருந்ததாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குறிப்பிட்டார். தமிழர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளது பெருமை வாய்ந்தது,'' எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், ''பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும். அதேபோல், பிற மாநிலங்களுக்கும் தமிழ் மொழியைப் பரப்ப வேண்டும். தமிழ் மொழி இருக்கையை பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் அமைப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி, மருத்துவம், தொழில் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது,'' எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: