டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி - பிரதமர், டெல்லி முதல்வர் இரங்கல்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டெல்லியின் முண்ட்காவில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியின் காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சமீர் சர்மா இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

கட்டடத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், காயமடைந்தவர்கள் சஞ்சய் காந்தி மற்றும் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் பிபிசி நிருபர் தில்நவாஸ் பாஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் செளத்ரி கூறுகையில், "இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், 14 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது," என்றார்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், கட்டடத்தின் முதல் தளத்தில் தீ பரவியதாகவும், அது தொடக்கத்தில் அவ்வளவு தீவிரமாக இல்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கியவர்களை, க்ரேன் மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

இந்த சம்பவத்துக்கான அடிப்படைக் காரணம் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், மின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த கட்டடம், தீயணைப்புத் துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

சட்டப்பூர்வமாக, இத்தகைய வணிக வளாகங்கள் தீயணைப்புத்துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த சான்றிதழ் இல்லாமல் எப்படி இந்த கட்டடம் இயங்கிவந்தது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "டெல்லியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்," என்று கூறியுள்ளார்.

"டெல்லி தீ விபத்தில் பல உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைக் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது இரங்கல் செய்தியில், "டெல்லியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தை அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டர் பக்கத்தில், டெல்லியின் முண்ட்காவில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அரசு நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை அங்கு சென்றடைகிறது. காயம் அடைந்த மக்களை மீட்டு உடனடி சிகிச்சையை வழங்க முன்னுரிமை தரப்படுகிறது என்று கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இந்த சம்பவம் குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "இந்த துயர சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். தீயை கட்டுப்படுத்தவும், மக்களின் உயிரைக் காப்பாற்றவும் எங்களின் துணிச்சலான தீயணைப்பு வீரர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்து வருகின்றனர். அனைவருக்கும் கடவுள் அருள் புரிவாராக" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தீ விபத்து குறித்து முண்ட்கா காவல் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். முண்ட்கா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள மூன்று மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: