You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எல்.ஐ.சி ஐ.பி.ஓ - இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனை அரசுக்கு கை கொடுக்குமா?
- எழுதியவர், நிகில் இனாம்தார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்திய அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் (எல்ஐசி) பங்குகளில் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ஆரம்பகட்ட பங்கு வெளியீடாக (Initial Public Offering) விற்பனைக்கு வந்துள்ளன. இது நிறுவன முதலீட்டாளர்களிடையே கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்போதைய சந்தை நிலையை பிரதிபலிக்கும் வகையில், இதன் அளவு மற்றும் மதிப்பீடு, இரண்டும், கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த மிகப்பெரிய பங்கு விற்பனையில் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளில் 3.5% பங்குகளை அரசு விற்கிறது.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலகளாவிய பங்குச் சந்தையில் கடந்த மாதம் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் மெகா ஐ.பி.ஓவை (IPO) ஒத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோதி அரசு முடிவு செய்தது.
அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையை தீர்க்க எல்.ஐ.சியின் 5% பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 8 பில்லியன் டாலர் திரட்ட இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. இது வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியைப் போக்கும் நடவடிக்கையாகும்.
அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகளும் குறைந்த அளவு பொருளாதார வளர்ச்சியே இருக்கும் என்று கணிப்புகள் கூறுவதாலும், இந்த நிதி திரட்டும் நடவடிக்கை, மத்திய அரசுக்கு ஏற்கெனவே உள்ள நிதி பற்றாக்குறைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, வெளியிடப்படும் பங்குகளின் அளவும் விலையும் பொருத்தமானதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2021ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர்களை வெளியே கொண்டு சென்றுள்ளனர். மேலும் எல்ஐசியின் செல்வாக்கும் நியாயமான மதிப்பீடும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் என்று அரசு நம்புகிறது.
"நமக்குக் கொஞ்சம் கட்டுப்பாடான சூழல் நிலவினாலும், முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்க முடியும்" என, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் கண்டா பாண்டே மும்பையில் கடந்த வாரம் தெரிவித்தார்.
எல்ஐசி பாலிசிதாரர்கள், அதன் ஊழியர்கள், சிறு முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு, ஐபிஓவில் நிர்ணயிக்கப்பட்ட பிரைஸ் பேண்டுக்கு (Price band) கூடுதல் தள்ளுபடியும் அளிக்கப்பட உள்ளது.
இணையத்தில் பங்கு வர்த்தகத்தை மேற்கொள்ள உதவும் கணக்குகள், முதலீட்டாளர்களால் குறைந்தது 8-12 மில்லியன் கூடுதலாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள புரோக்கிங் நிறுவனமான ஸெரோதா, இது ஏற்கெனவே செயல்பட்டு வரும் 80 மில்லியன் கணக்குகளில் 10-15 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கிரீடம்
சுதந்திர இந்தியாவை போன்று எல்.ஐ.சியும் பழமையானது. 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசியமயமாக்கியதன் மூலம் உருவானதே எல்.ஐ.சி. 1956ஆம் ஆண்டு முதல் பாலிசிகளை வெளியிட்டுவரும் இந்நிறுவனம், இந்திய காப்பீட்டு துறையில் 2000ஆம் ஆண்டுகள் வரை ஏகபோக உரிமையை அனுபவித்துவந்தது.
காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின்னான 2 தசாப்தங்களை கடந்தும், எல்.ஐ.சி, 2021ஆம் ஆண்டு வரை 66 சதவீத சந்தைப் பங்குகளுடன் முதல் இடத்தை வகித்து வருகிறது.
இத்தகைய மிகப்பெரிய சந்தைப் பங்கு, இந்தியாவின் முக்கிய காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சியை மாற்றியுள்ளது.
500 பில்லியன் டாலர்கள் என்ற மதிப்பீட்டில், அதன் சொத்து மதிப்பு சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். செயல்பாட்டில் உள்ள கிட்டத்தட்ட 280 மில்லியன் பாலிசிகளுடன், பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையைவிட 4 மடங்கு அதிகமான பாலிசிகளை எல்.ஐ.சி நிர்வகித்துவருகிறது.
மாநில மற்றும் மத்திய அரசின் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் பெரியளவிலான முதலீடுகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய அளவில் சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனமாகவும் எல்.ஐ.சி உள்ளது.
கிரிசில் தர மதிப்பீட்டு நிறுவனத்தின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்.ஐ.சியின் பங்கு முதலீடுகள், தேசிய பங்கு சந்தையின் மொத்த சந்தை மூலதனத்தில் 4 சதவீதமாகும். இது சோதனை காலகட்டங்களில் அரசு நடத்தும் நிறுவனங்களை மீட்டெடுத்து, அரசாங்கத்திற்கு வழக்கமாக நிதியளிக்கும் நிறுவனமாகவும் இருந்து வருகிறது.
இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட்டிலும் பல சொத்துகளை தன் வசம் வைத்துள்ளது எல்.ஐ.சி.
இந்தியாவின் பாதுகாப்பு வலை
1.3 மில்லியன் விநியோகஸ்தர்கள் இந்தியா முழுவதும் பாலிசிகளை விற்கிறார்கள், எங்கும் நிறைந்திருக்கும் 'எல்ஐசி ஏஜென்ட்' சுதந்திர இந்தியாவின் பொது உணர்வில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக வீடுதோறும் பாலிசிகளை விற்றுவரும் 70 வயதுக்கு மேற்பட்டவரான ஸ்ரீனிவாசலு நாயுடு பிபிசியிடம் கூறுகையில், தான் இந்த துறையில் உச்சத்தில் இருந்தபோது தன்னை 'எல்ஐசி நாயுடு' என மக்கள் அழைப்பார்கள் என தெரிவித்தார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தன்னுடைய கிராமத்தில் மதிப்புக்குரிய நபராக அவர் திகழ்ந்தார்.
எல்.ஐ.சி வளர்ச்சிக்கும் நம்பிக்கையை உருவாக்கவும், நாட்டின் கடைக்கோடியில் உள்ளவர்களிடையே சேமிப்பு கலாசாரத்தை உருவாக்குவதற்கும் ஸ்ரீனிவாசலு போன்ற ஏஜென்ட்டுகள் முக்கியமானவர்களாக உள்ளனர்.
"காப்பீட்டுக்காக மட்டும் மக்கள் என்னிடம் பாலிசிகளை வாங்குவதில்லை, அதனை ஒரு முதலீடாக கருதி அவற்றை வாங்குகின்றனர். அவர்களின் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணத்திற்கான முதலீடாக அவற்றை கருதுகின்றனர். அவர்களின் வாழ்நாள் சேமிப்பின் மீதான நம்பிக்கையை என்னிடத்தில் வைத்தார்கள்," என ஸ்ரீனிவாசலு தெரிவித்தார்.
இந்திய வீடுகளில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 ரூபாய் எல்.ஐ.சி மூலம் சேமிக்கப்படுவதாக யுபிஎஸ் வங்கி கணக்கிட்டுள்ளது. இது, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஈர்த்த வைப்புத்தொகையைவிட இது அதிகம்.
அரசாங்கம் விலைமதிப்பற்ற எல்.ஐ.சியை விற்பனை செய்வதாகவும், பங்குதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், உயர் பிரைஸ் பேண்டில் கூட, எல்ஐசி பங்கு வெளியீடு மூன்று பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவற்றைவிட மிகவும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இந்த முடிவை எள்ளளவும் நியாயப்படுத்தப்படவில்லை. சமூக பாதுகாப்பு வலையான எல்.ஐ.சி போன்றவற்றிலிருந்து விலக்கிக்கொள்ளும்போது, இதுதொடர்பான விவாதங்களில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்" என, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஷர்மா மொஹமது பிபிசியிடம் தெரிவித்தார்.
எதிர்கால வாய்ப்புகள்
எல்.ஐ.சி பங்கு வெளியீடு நீண்ட கால விளைவாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை மேம்படுத்தி மேலும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதன் போட்டி நிறுவனங்கள் அனைத்தும் டிஜிட்டல்மயமாகிவிட்ட நிலையில், எல்.ஐ.சி இன்னும் விநியோகஸ்தர்களை சார்ந்திருப்பது கவலைக்குரிய ஒன்று என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், இதனால் எதிர்வரும் ஆண்டுகளில் சந்தை பங்குகளை இழப்பது தொடரும் என, அவர்கள் நம்புகின்றனர்.
"விநியோகஸ்தர்கள் முறையில் எல்.ஐ.சி நீடித்தால், மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடுவது கடினமானதாக இருக்கும். எல்.ஐ.சி நிறுவனத்தை புதுப்பிக்க வேண்டும். காப்பீட்டு சந்தை வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பதற்கு பொருத்தமாக மாற வேண்டும்," என ஸெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிக்கில் கமாத் தெரிவித்தார்.
பொருளாதார விமர்சகர் விவேக் கௌல் கூறுகையில், ஏஜெண்டுகளுக்கு முதல் ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களைவிட இரு மடங்கு அதிகமாக எல்.ஐ.சி கமிஷன் வழங்கிவருகிறது என்றும், இது காலப்போக்கில் நீடித்த ஒன்றாக இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
எல்.ஐ.சி மீது கொரோனா கால விளைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்குகள் அதன் செயல்பாடுகளை சீர்குலைத்ததால், புதிய வணிக பிரீமியங்களில் அதன் வளர்ச்சி கணிசமாகக் குறைந்தது, இது திறம்பட செயல்படுவதற்கு எல்.ஐ.சி தொழில்நுட்பத்தை கணிசமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
ஆனால், இந்தியாவின் இளம் மக்கள்தொகை மற்றும் இந்தியர்களிடையே போதிய அளவு காப்பீட்டுத் திட்டங்கள் சென்று சேராதது ஆகியவை எல்ஐசி விரிவாக்கத்திற்கான நீண்டகால உந்துதலை வழங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புரோக்கிங் நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் ரதியின் பகுப்பாய்வின்படி, இந்தியாவின் பாதுகாப்பு இடைவெளி - அல்லது தேவைப்படும் மற்றும் உண்மையில் இருக்கக்கூடிய காப்பீட்டுக்கு இடையேயான வேறுபாடு - 83% அல்லது 16.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள், இது 2019 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகளில் மிக அதிகமாக இருந்தது, "இதன் மூலம் வளர்ச்சிக்கான மிகப்பெரிய சாத்தியத்தை அளிக்கிறது" என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :