ஜோத்பூர்: ஈத் பண்டிகை ஏற்பாடுகள் தொடர்பான வன்முறையால் பதற்றம்

ஜோத்பூர் வன்முறை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

    • எழுதியவர், மோஹர் சிங் மீனா
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ராஜஸ்தானில், ஜோத்பூர் மாவட்டத்தின் ஜலோரி கேட் என்ற இடத்தில் இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை இரவு கொடிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதில் ஆரம்பித்த விவகாரம், சொத்துக்களை சேதப்படுத்தல், கல் வீச்சு மற்றும் தீ வைப்பு வரை சென்றுவிட்டது.

நேற்று பின்னிரவு 1.30 மணியளவில் சூழல் ஓரளவு அமைதியடைந்ததை அடுத்து இன்று காலை ஈத் தொழுகை நடத்தப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் மீண்டும் வகுப்புவாத வன்முறை தொடங்கியது.

வன்முறையாளர்களை கட்டுப்படுத்த உள்ளூர் போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடியடியும் நடத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நகரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மே 3 ஆம் தேதி காலை நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, ஜோத்பூர் இயக்குனரகத்தின் கீழ் உள்ள பத்து காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நடந்த வன்முறை சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் இணையதள சேவையை நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை

ஈத் பண்டிகையின் போது, ஜலோரி கேட் அருகே உள்ள இத்காவில் தொழுகை நடத்தப்படுகிறது. இங்கு மே 3-ஆம் தேதி ஈத் தொழுகை நடைபெற இருந்த நிலையில், இரவு நேரத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஜலோரி கேட்டில் வைப்பதற்காக பெரிய கொடிகளும், பேனர்களும், ஒலிபெருக்கிகளும் கொண்டு செல்லப்பட்டன.

ஜலோரி கேட்டில் இந்து சமூகத்தினர் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தனர். பலர் அங்கு திரண்டு ஆட்சேபங்களை எழுப்பியதால், தகராறு அதிகரிக்கத் தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கொடிகள், பேனர்களை கிழித்த கும்பல், ஒலிபெருக்கிகளையும் அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கூடுதல் போலீஸாரும் பணியில் நிறுத்தப்பட்டனர். ஆவேசமான கும்பலைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டியிருந்தது, மேலும் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர்.

கொடி, பேனர்கள், ஒலிபெருக்கிகள் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஒன்று திரண்டனர். இரவு 11.30 மணி முதல் இரவு ஒன்றரை மணி வரை இரு தரப்பினரும் கற்களை வீசி நாசவேலையில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் டிஜிபி மோகன் லால் லத்தர் பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், "ஈத் பண்டிகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஜலோரி கேட்டில் உள்ள சிலைக்கு அருகில் கொடியை வைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்ததைத் தொடர்ந்து தகராறு அதிகரித்தது. நாங்கள் கூடுதல் போலீஸாரை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். அமைதி மற்றும் ஒழுங்கை பராமரிக்க முன்னுரிமை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,"என்று தெரிவித்தார்.

வன்முறை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

இந்த சம்பவத்தில் இதுவரை 39 பேரை நாங்கள் பிடித்துள்ளோம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொழுகைக்குப் பிறகு மீண்டும் வன்முறை

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஈகைத்திருநாள் தொழுகை காலையில் நடைபெற்றது. இதன்போது, சிலர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள ஜலோரி கேட்டுக்கு அருகே வந்து முழக்கங்களை எழுப்பினர்.

கடைகள், ஏடிஎம்கள், வாகனங்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன. இதன்போது போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. உள்ளூர் பாஜக எம்எல்ஏ ஒருவரின் வீட்டிற்கு வெளியே முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இரண்டு சமூகங்கள் நேருக்கு நேர்

வன்முறை சம்பவத்தை அடுத்து மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமைதி காக்குமாறு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், இரு சமூகத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வன்முறை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கேலாட், அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழுகைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை முடிவுக்கு வந்ததும், ஜோத்பூர் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் சம்பவ இடத்திற்கு வந்து, மாநிலத்தின் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

எம்பி ஷெகாவத் முன்னிலையில், ஒரு சமூகத்தினர் ஹனுமான் சாலிசாவை பாடினார்கள். அதே சமயம் இன்னொரு சமூகம் முழக்கங்களை எழுப்பியது.

காவல்துறையினரும், நிர்வாக அதிகாரிகளும் அப்போது அங்கிருந்தனர். பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள், கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இருந்தனர்.

ஊரடங்கு உத்தரவு

மே 2ஆம் தேதி இரவு நடந்த வன்முறை சம்பவத்தை அடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தால் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டு தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈத் தொழுகைக்குப் பிறகு மீண்டும் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மே 4 ஆம் தேதி நள்ளிரவு வரை பத்து காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி போலீசார் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்துள்ளனர். அகலியா சதுக்கம், சோச்தி கேட் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ஜோத்பூர் பிரிவு ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். போலீசார் அணிவகுப்பும் நடத்தினர்.

இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட முதல்வர் அஷோக் கேலாட், ஜோத்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். அமைதி சூழலை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அஷோக் கேலாட் ஆலோசனை நடத்தினார்

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அஷோக் கேலாட் ஆலோசனை நடத்தினார்

கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதல்வர்

முதல்வர் அஷோக் கேலாட் தனது சொந்த மாவட்டமான ஜோத்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக, அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லா கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்து, மாநிலத்தின் உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை முதல்வர் அழைத்தார்.

மூத்த அதிகாரிகள் மற்றும் இரண்டு அமைச்சர்கள் அடங்கிய குழுவை உடனடியாக ஜோத்பூருக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்குப்பிறகு உயர் அதிகாரிகள் குழுவை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஜோத்பூருக்கு அனுப்ப முதல்வர் முடிவு செய்தார்.

மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர யாதவ் , ஜோத்பூர் பொறுப்பு அமைச்சர் டாக்டர் சுபாஷ் கர்க், உள்துறை கூடுதல் தலைமை செயலர் அபய் குமார், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி ஹவா சிங் கும்ரியா ஆகியோர் இந்தக்குழுவில் அடங்குவர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தானின் கரௌலியில் வகுப்புவாத வன்முறை ஏற்பட்டது. புத்தாண்டு தினத்தன்று நடந்த ஊர்வலத்தின்போது, கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்தன.

மே 2 ஆம் தேதி இரவு ஜோத்பூரில் ஈத் மற்றும் பரசுராம் ஜெயந்திக்கு முன்னதாக நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை காரணமாக ராஜஸ்தான் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. மாநிலத்தின் அஷோக் கேலாட் அரசு அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசை மீண்டும் தாக்கி வருகின்றன. ஜலோரி கேட் வட்டத்தில் உள்ள பால் முகுந்த் பிஸ்ஸா சிலை மீது வைக்கப்பட்டிருந்த காவிக்கொடி இறக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜோத்பூர் வன்முறை குறித்து முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரான், கரௌலி, ராஜ்கர் (ஆல்வர்) ஆகிய இடங்களுக்குப் பிறகு தற்போது முதல்வரின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் வகுப்புவாத பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பரவியுள்ள மதவெறி , காங்கிரஸ் அரசின் திருப்திப்படுத்தல் கலாசாரத்தின் விளைவு என்பதை மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால் முகந்த் பிஸ்ஸாவின் சிலை மீது வைக்கப்பட்டிருந்த காவிக்கொடி இறக்கப்பட்ட சம்பவம் உணர்த்துகிறது. அரசு இந்தக்கலாசாரத்தை கைவிடவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :