தமிழ்நாடு: மத்திய பல்கலைக்கழகங்களில் CUET நுழைவுத் தேர்வு - கல்வியாளர்கள் எழுப்பும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
'மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கியூட் (CUTE) நுழைவுத் தேர்வால் மாநிலங்களுக்கு பாதிப்பு வரப்போவதில்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு என பல்வேறு வகைகளில் சிக்கல் ஏற்பட உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வால் என்ன சிக்கல்?
யு.ஜி.சி சொன்னது என்ன?
'இந்தியாவில் உள்ள மத்திய பல்லைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUTE) அவசியம்' எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை நிறைவு செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'கியூட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு பிளஸ் 2 மதிப்பெண்ணை தகுதியாக எடுத்துக் கொள்ளலாம்' என்றும் 'மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது' எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. சிறுபான்மையினர் உள்பட அனைத்து மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே சேர்க்கப்பட வேண்டும் எனவும் இதற்கான கேள்விகள் அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களின் அடிப்படையில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு
ஆனால், முதலில் மத்திய பல்கலைக்கழங்களுக்குத் தேர்வு எனக் கூறிவிட்டு பிறகு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கியூட் நுழைவுத் தேர்வை விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கியூட் நுழைவுத் தேர்வினை எதிர்த்து தீர்மானம் ஒன்றையும் மாநில அரசு நிறைவேற்றியது.
'இந்தத் தேர்வின் மூலம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை' என்ற காரணத்தையும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்வைத்தார். இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் ஆதரவு கொடுத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சட்டமன்ற பா.ஜ.க குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், 'ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றில் எந்தப் படிப்புகளை படித்தாலும் இதற்காக தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இது நாற்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிராக மாநில அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.
மத்திய அரசின் கடிதம்
இந்தநிலையில், கியூட் நுழைவுத் தேர்வு குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'தேசிய கல்விக் கொள்கை 2020 ஆனது பல்வேறு நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகள் மற்றும் கலந்தாய்வு செயல்முறைகளுக்குப் பிறகே இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தேசிய கல்விக் கொள்கையின்படி பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் அதனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படப் போவதில்லை' என்கிறார்.
மேலும், 'ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும். இதன் காரணமாக ஏழை மாணவர்களின் நிதிச்சுமையும் குறையும். பயிற்சி மையங்களுக்குச் செல்லும் நிலையை ஒழிக்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே கியூட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று கேள்விகள்
கியூட் நுழைவுத் தேர்வால் மாநில அரசின் உரிமை பாதிக்காது என மத்திய அரசு சொல்கிறதே?'' என மூத்த கல்வியாளர் பேராசிரியர் சிவக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
'' மாநில அரசின் உரிமையை பாதிக்காது என்ற அடிப்படையில் இந்த நுழைவுத் தேர்வை பார்க்க முடியாது. திருச்சி மற்றும் செங்கல்பட்டில் கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் ஐஐஐடி (indian institute of information technology) என்ற இரண்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களிலும் திருச்சி என்.ஐ.டியிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது உள்ளது. ஆனால், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு என்பதே இல்லை. அவ்வாறு இடஒதுக்கீடு இருந்தால் கியூட் தேர்வு எழுதி உள்ளே நுழைய முடியும்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'இதனை அனுமதித்தால் பிற பல்கலைக்கழகங்களுக்கும் கொண்டு வருவார்கள்' எனப் பேசியுள்ளனர். மத்திய பல்கலைக்கழகத்தை திருவாரூரில் கட்டுவதற்கு மாநில அரசு நிலம் கொடுத்துள்ளது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் என்று யாரும் இல்லை. மாநிலத்துக்குச் சொந்தமான நிலத்தில் இருந்தாலும் தமிழ் மாணவர்களுக்கு இடமோ, முன்னுரிமையோ அங்கு கொடுப்பதில்லை'' என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், '' திருவாரூர் மத்திய பல்கலையில் கடந்த காலங்களில் ஒவ்வோர் துறையும் தனித்தனியாக நுழைவுத் தேர்வை நடத்தினர். துறைத் தலைவர்கள் விருப்பப்பட்டால் தமிழ் மாணவர்களுக்கு இடம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. தற்போது கியூட் தேர்வை எழுதாவிட்டால் தமிழ் மாணவர்களுக்கு இடம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இதனைத் துறைத் தலைவரும் தீர்மானிக்க முடியாது. இதனை அனுமதித்தால் சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட பிற மாநிலப் பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வு வருமென மாநில அரசு கருதுகிறது'' என்கிறார்.
''மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வித் தரம் என்பது எப்படி உள்ளது?'' என்றோம். ''மாநில பல்கலைக்கழகங்களைவிட மத்திய பல்கலைக்கழகத்தில் வசதிகள் அதிகமாக உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த திறன்வாய்ந்த பேராசிரியர்கள் பலர் திருவாரூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகியவற்றில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பணிபுரிகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுக்கான நிதியையும் மத்திய அரசு குறைத்துவிட்டது. இந்தச் சூழலில் தரம் என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது'' என்கிறார்.
அடுத்ததாக, ``பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை என்ன?'' என இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆனந்திடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, '' கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் மாணவர் சேர்க்கை என்பது பெருமளவு குறைந்துவிட்டது. கோவிட் சூழலால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குப் பல்வேறு சுமைகள் ஏற்பட்டுள்ளன. திருவாரூர், கேரளா ஆகியவற்றில் உள்ளவற்றைவிடவும் பாண்டிச்சேரி மத்திய பல்கலையில் பல்கலைக்கழக கட்டணம் என்பது அதிகம். கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு பல்கலைக்கழகம் திறக்கப்பட்டாலும் கல்வித்தரம் உள்பட பல நிலைகளில் சிக்கல்கள் உள்ளன'' என்கிறார்.
மேலும், '' பல்கலைக்கழகத்தில் உள்ள பதினெட்டுக்கும் மேற்பட்ட துறைகளில் பாண்டிச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனால் நிறைய மாணவர்கள் உயர்கல்வி சார்ந்து படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது. கியூட் நுழைவுத் தேர்வால் இது பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகும். இது மிகவும் முக்கியமான பிரச்னை. இடஒதுக்கீடு பிரச்னை குறித்து பல்கலைக்கழக நிர்வாகமும் தெளிவுபடுத்தவில்லை'' என்கிறார்.
பா.ஜ.கவின் பதில்
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசும் தமிழ்நாடு பா.ஜ.கவின் மாநில பொருளாளரான எஸ்.ஆர்.சேகர், '' கியூட் தேர்வின் மூலம் தமிழ் மாணவர்களுக்கு இடம் கிடைப்பது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நமது மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலங்களில் சென்று படிக்கக் கூடாது என்பதுதான் தி.மு.கவின் நோக்கமாக இருக்கிறது. பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் மட்டுமே மத்திய பல்கலைக்கழகங்களில் பங்கேற்க வேண்டும் என மாநில அரசு விரும்புகிறதா?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
மேலும், '' மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழ்நாடு மாணவர்களுக்கான வாய்ப்புகளை தி.மு.க இழக்க வைக்கிறது. இவர்கள் மாணவர்களின் நலன்களை புறம்தள்ளி அரசியல் செய்கின்றனர். பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வால் மாணவர்களின் உயர்கல்வித் திறன் மேம்படும். இதனை எதிர்ப்பது என்பது அவசியமற்றது'' என்கிறார்.
''கியூட் தேர்வால் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு பாதிக்கும் என்கிறார்களே?'' என்றோம். ''பாண்டிச்சேரி என்பது யூனியன் பிரதேசம். அங்கு மத்திய அரசின் ஒதுக்கீடு என்பது உள்ளது. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு பொதுவான இடஒதுக்கீடு என்னவோ அதுதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு வருவதற்கு முன்னால் பாண்டிச்சேரியில் உள்ளவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் வேறு எந்த மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது இல்லை. கியூட் தேர்வால் எந்தவிதச் சிக்கலும் வரப் போவதில்லை. இதனை திசைதிருப்பும் வகையில் இடஒதுக்கீடு என்ற வார்த்தையை விளையாடுகிறார்கள்'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














