CUETக்கு எதிராக பேரவையில் தமிழக அரசு தீர்மானம் - பா.ஜ.க வெளிநடப்பு

தமிழ்நாடு: CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்! - பா.ஜ.க வெளிநடப்பு

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைக் கைவிடக் கோரி சட்டசபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த மார்ச் 21 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக நிதிக்குழுவின் நிதியுதவியைப் பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் கலை அறிவியல் உள்ளிட்ட இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (2022-23) நடக்கும்போது அது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) மூலம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வினை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் ஏற்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, `ஒற்றை நுழைவுத் தேர்வு என்பது சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சமமற்ற வளர்ச்சியுள்ள நமது நாட்டில் அனைவருக்கும் இது சமமான வாய்ப்பினை வழங்காது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் பாடத் திட்ட அடிப்படையிலான இந்தத் தேர்வு, மாநில பாடத்திட்ட அடிப்படையில் பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்காது. இதனால் தமிழ்நாடு மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், `நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் அதில் சிறப்பாகப் பயின்று பட்டம் பெற்று வரும் நிலையில் அவர்கள் மீது நுழைவுத் தேர்வினை திணித்து தேவையற்ற பொருளாதார சுமையையும் மனஅழுத்தத்தையும் ஏற்றும் வகையில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை தமிழ்நாடு அரசு கண்டிக்கிறது' என்றார்.

தமிழ்நாடு: CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்! - பா.ஜ.க வெளிநடப்பு

பட மூலாதாரம், Dr.K.Ponmudy/Twitter

இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள நுழைவுத் தேர்வை கைவிடக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொணட எந்தவொரு நுழைவுத் தேர்வும் மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு சமமான வாய்ப்பினை வழங்காது என இப்பேரவை கருதுகிறது. குறிப்பாக, பெரும்பாலான மாநிலங்களில் உள்ள 80 சதவீத மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து வருகிறவர்கள்தான். இவர்கள் விளிம்புநிலை பிரிவினைச் சேர்ந்தவர்கள்' எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின்,

` என்சிஇஆர்டி பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வின் மூலம் பெரும்பான்மையோருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்' என்றார்.

தமிழ்நாடு: CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்! - பா.ஜ.க வெளிநடப்பு

பட மூலாதாரம், Nainar Nagenthiran/Twitter

நீட் நுழைவுத் தேர்வைப் போலவே பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும் பள்ளிகளில் நீண்டகால கற்றல் வழிமுறைகளை குறைத்து மதிப்பிட வழிவகுப்பதாக அமையும் எனச் சுட்டிக் காட்டிய முதல்வர், ` மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை அதிகரிப்பதற்கு பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கக் கூடிய சூழலை ஏற்படுத்திவிடும். பயிற்சி மையங்கள் பெருகுவதற்கு மட்டுமே இது சாதகமாக அமையும். இதனால் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். எனவே, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்' என்றார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பின்னர், பா.ஜ.கவை தவிர்த்து பிற கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

காணொளிக் குறிப்பு, ஒரு கிராம் மண்ணில் என்னென்ன இருக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: