பருத்தி விலை உயர்வு முதல் இறக்குமதி வரி வரை - இந்திய ஜவுளித்துறை சந்தித்துவரும் நெருக்கடிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கக்கூடியது ஜவுளித்துறை. இந்தியா முழுவதும் 4.5 கோடி பேர் ஜவுளித்துறை மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்திய ஜவுளித்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.16.7 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.3.33 லட்சம் கோடியாக உள்ளது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித்துறை பல்வேறு காரணங்களால் தற்போது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
ஜவுளித் துறையில் என்ன சிக்கல்?
ஜவுளித்துறைக்கு அடிப்படையான பருத்தியின் விலை கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.125 ஆக இருந்த ஒரு கிலோ பருத்தியின் விலை தற்போது ரூ.270 ஆக உள்ளதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `இந்தியாவின் 90% பருத்தி உற்பத்தி பருத்தி சீசன் (டிசம்பர் - மார்ச்) காலகட்டத்தில்தான் நடைபெறும். இந்த காலகட்டத்தில் 320 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகும் எனக் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் 240 லட்சம் பேல் தான் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்சம் நான்கு மாதத்திற்கு தேவையான பருத்தி இருப்பு கைவசம் இருக்கும். ஆனால் தற்போதைய பருத்தி இருப்பு 40 நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கும். பருத்தி விலை உயர்வால் நூல் விலையும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வரவில்லையென்றால் இந்திய பருத்தியை இறக்குமதி செய்யும் நம்முடைய போட்டி நாடுகளான வங்கதேசம், சீனா மற்றும் வியட்நாம் சர்வதேச ஜவுளி சந்தையில் நம்முடைய பங்கை கைப்பற்றிவிடுவார்கள்` என்றுள்ளனர்.
சர்வதேச சந்தையில் இந்தியாவின் இடம் என்ன?
2017-ம் ஆண்டு சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலிருந்த இந்தியா 2020-ம் ஆண்டு ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் நூல் அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் தான் உள்ளன.
ஆனால் சர்வதேச சந்தையில் ஜவுளி ஏற்றுமதியில் இந்த மூன்று நாடுகளும் இந்தியாவை விட அதிக அளவில் பங்கு வைத்துள்ளன. இந்தியாவின் பங்களிப்பு வெறும் 4% ஆக உள்ளது.
துறை வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் செயலாளர் செல்வராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், `தற்போது ஒரு கேண்டி (355 கிலோ) பருத்தியின் விலை ஒரு லட்சத்தை தொட்டுவிட்டது. இந்த பருத்தி சீசனில் 320 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் 240 லட்சம் பேல் மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது. 80 லட்சம் பேல் பருத்தியை வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ளதால் விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு உள்நாட்டு தேவையை கருத்தில் கொள்ளாமல் பருத்தியை அதிகமாக ஏற்றுமதி செய்துவிட்டார்கள். இதனால் ஏற்றுமதிக்கு ஒப்புக்கொண்ட ஆர்டர்களை வழங்க முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தவிக்கின்றனர்` என்றார்.
`திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்பைச் சேர்ந்த முத்துரத்தினம் பிபிசி தமிழிடம் பேசுகையில், `கடந்த ஆண்டு ஒரு கிலோ நூல் ரூ.200-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.400-க்கு விற்பனையாகிறது. ஒரு வருடத்தில் நூல் விலையில் ரூ.50 வரை வேறுபாடு இருக்கும். ஆனால் இரு மடங்கு விலை உயர்ந்தது தற்போது தான் முதல் முறை` என்றார்.
தற்போதைய நிலை மக்களை எவ்வாறு பாதிக்கும், அரசு இதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகளுக்கு செல்வராஜ் மற்றும் முத்துரத்தினம் விரிவாக பதிலளித்தனர்.
மக்களை எவ்வாறு பாதிக்கும்?
செல்வராஜ், `ஜவுளித்துறை சீராக இயங்க தடையில்லாமல் உற்பத்தி நடைபெற வேண்டும். பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் ஜவுளித்துறையே முடங்கிவிடும். ஏற்கனவே உற்பத்தி குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால் நூற்பாலைகளில் நேரடியாகவும் அதனை சார்ந்து ஜவுளி சங்கிலியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் வேலை இழப்பு ஏற்படும்` என்றார்.
முத்துரத்தினம், `ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகளுக்கான உற்பத்தி தடைபட்டால் வேலை இழப்பு ஏற்படுவது உறுதி. நூல் விலை உயர்வால் ஏற்கனவே 50% அளவில் உற்பத்தி மந்தமடைய ஆரம்பித்துவிட்டது. இதனால் பெரு நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்காது. திருப்பூரில் 90% உற்பத்தி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தான் நடைபெறுவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
சில்லறை விற்பனையில் விற்கப்படும் ஆடைகளின் விலையும் 30% வரை அதிகரித்துள்ளது. பருத்தி மற்றும் நூல் விலை குறைவாக இருந்தபோதே வங்கதேசம் போன்ற இந்தியாவின் போட்டி நாடுகள் இந்தியாவைவிட 30% விலை குறைவாக வழங்கினர். இதனால் சர்வதேச ஆர்டர்கள் இந்த நாடுகளுக்கு அதிகம் செல்லும். அதுமட்டுமில்லாமல் இந்திய சந்தைக்குமே வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா வைத்துள்ள 4% பங்கும் மேலும் குறையும்` என்றார்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
செல்வராஜ், `பருத்தி இறக்குமதிக்கு உள்ள 11% வரியை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் பற்றாக்குறையாக உள்ள 40 லட்சம் பேல் பருத்தியை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் சந்தையில் பருத்தியின் விலை கட்டுக்குள் வரும். மேலும் பருத்தியை வைத்திருக்கும் இடைத்தரகர்கள் தங்கள் கைவசம் இருக்கும் அளவை வெளிப்படையாக தெரிவிக்குமாறு விதிகள் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பருத்தி பதுக்கப்படுவதை தவிர்க்க முடியும், என்றார்
முத்துரத்தினம், `இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி அளவை நிர்ணயிக்க வேண்டும். பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்` என்றார்.
இந்திய அரசு என்ன சொல்கிறது?
ஜவுளி ஏற்றுமதியில் வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு கடுமையான சவால் கொடுக்கின்றவா என்பதற்கு பதிலளித்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், `ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் முக்கிய சந்தைகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிக கட்டணங்கள் விதிக்கப்படுவதும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் வரி சலுகைகளும் இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கிறது` என்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இறக்குமதி வரி ரத்து செய்யப்படுமா என்பதற்கு பதிலளித்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், `இந்த விவகாரத்தை ஜவுளித்துறை அமைச்சகம் நிதித்துறை அமைச்சகத்திடம் எடுத்துச் சென்றுள்ளது` என்று பதிலளித்துள்ளது.
பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா என்பதற்கு, `நடப்பு பருத்தி சீசனின் தொடக்கத்தில் 73 லட்சம் பேல் பருத்தி கையிருப்பு உள்ளது. உற்பத்தி 362 லட்சம் பேல் ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் தேவை என்பது 338 லட்சம் பேல் ஆக உள்ளது. எனவே நாட்டில் போதுமான அளவு பருத்தி இருப்பு உள்ளது` என்று பதிலளித்துள்ளது.
இறக்குமதி வரி ஏன் வந்தது?
உலகிலே இந்தியாதான் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்தாலும் பருத்தி இறக்குமதி என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் பருத்தி வகைகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனால் பருத்தி விவசாயிகள் கடும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். அதனால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்குதான் பருத்திக்கு இறக்குமதி வரி கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரி ரத்து செய்யப்படுமா?
இறக்குமதி வரி ரத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள நிதித்துறை அமைச்சகம், `பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளது` என்று தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என இந்திய பருத்தி கழகமும், ஜவுளி அமைச்சகமும் நிதித்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன.
ஆனால் இறக்குமதி வரி ரத்து செய்யப்படுமா என்பதற்கு நிதித்துறை அமைச்சகம் தற்போது எந்த விதமான பதிலும் உத்திரவாதமும் வழங்கவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















