ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

பிரசுரிக்கப்பட்டது

இன்றைய நாளில் வெளியான நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே சுருக்கமாக வழங்குகிறோம்.

மார்ச் 15 அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கோவை ரஹ்மத்துல்லா என்பவர் திருநெல்வேலியிலும் எஸ்.ஜமால் முகமது உஸ்மானி என்பவர் தஞ்சாவூரிலும் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத பழக்கமல்ல என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் சிறுபான்மை சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வியாழன் அன்று மதுரையில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தின் வீடியோ கிளிப் இரண்டு நாட்களுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வைரலானது.

அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தணிக்கைக் குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஜார்கண்டில் காலை நடைபயிற்சியின் போது 'தவறான' தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொல்லப்பட்டதாகக் கூறுவதைக் காட்டுகிறது. நீதிபதி உத்தவ் ஆனந்த் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்டோரிக்ஷா மோதியது. "எங்கள் சமூகத்தில் உணர்ச்சிவசப்பட்ட சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு (நீதிபதிகளுக்கு) ஏதாவது நேர்ந்தால், எங்களை குற்றம் சாட்டுவதற்கான சந்தர்ப்பத்திற்காக பாஜக காத்திருக்கிறது," அவர் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக தரக்குறைவான கருத்து தெரிவித்ததாக ததஜத தலைமையக பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானியையும் கவால்துறை கைது செய்துள்ளது. அந்த அமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜிக் முகமது மீது வழக்கு பதிவு செய்தனர். பெங்களூருவில், தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளுக்கு தமிழகத்தில் உள்ள சில குழுக்கள் மிரட்டல் விடுத்தது குறித்து காவல்துறை சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கியது. வழக்கறிஞர் சுதா கத்வா அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் முதல் தக்வால் அறிக்கையை பதிவு செய்தனர்," என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நரிக்குறவர் சமூகத்தை எஸ்.டி பட்டியலில் சேர்க்க வேண்டும்

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை வலியுறுத்தியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இந்திய தலைமை பதிவாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த 1956-ல் அமைக்கப்பட்ட லோகூர் எனும் வல்லுநர் குழுவும் 1967-இல் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தன. நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெற தகுதியுடையவர்களாக மாறுவர்.

இதுதொடர்பாகப் பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அருகே கண்டுபிடிக்கப்பட்ட இரும்புக்கால பொருட்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம நடந்த தொல்லியல் ஆய்வு, இரும்புக் காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அந்த கிராமம் எப்படி கடல் மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு ஒரு போக்குவரத்து இடமாகச் செயல்பட்டது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், "சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் முனைவர் ஜே சௌந்தரராஜன் தலைமையிலான மாணவர்கள் குழுவால் நெரும்பூர் கிராமத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பழங்காலப் பொருட்களைக் கண்டறிய வழிவகுத்துள்ளன.

கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள்/பானை ஓடுகள், கூம்பு ஜாடிகள்/ஆம்போரா(இரு கைகள் கொண்ட ஜாடி) என அடையாளம் காணப்பட்ட உடைந்த மட்பாண்டத் துண்டுகள், சில்லி பாத்திரங்கள், பானை ஓடுகள், கழிமண் சிலை துண்டுகள், அரைக்கும் சக்கரம், கண்ணாடி மற்றும் படிக மணிகள், கண்ணாடி மற்றும் இரும்பு கசடு, இரும்பு பொருட்கள், மீன் கொக்கிகள், மற்றும் செம்பு துண்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

"இந்த தளம் ஆரம்பத்தில் இரும்புக் காலத்தில் உள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் ஆரம்பகால வரலாற்று காலத்தில் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது என்று முடிவு செய்யலாம். ஆரம்பகால மற்றும் இடைக்காலத்தின் பானை ஓடுகள் மற்றும் ஆம்போராவின் மாதிரியான வகைகள் அகழியின் மேல் மட்டங்களில் காணப்பட்டன," என்று சௌந்தரராஜன் கூறினார்.

கிராமம் பாலாற்றின் கரையில் இருப்பதால், பழங்காலப் பொருட்கள் அப்பகுதியின் கடல் மற்றும் உள்நாட்டு வணிக நடவடிக்கைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

இது கல்வெட்டு, கையெழுத்துப் பிரதி மற்றும் பிற ஆவணங்கள் மற்றும் பொருள் சான்றுகள் மூலமாகவும் அறியப்படுகிறது," எனக் கூறுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் இன்னும் சில ஆண்டுகளில் சி.ஆர்.பி.எஃப் தேவை இருக்காது

இன்னும் சில ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகணங்களில் சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவப் படையின் பாதுகாப்பு தேவையிருக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளதாக இந்து நாளிதழ் செய்தி கூறுகிறது.

சனிக்கிழமை ஜம்முவில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல்படையின் 83 வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "2014-இல் நரேந்திர மோதி பிரதமரான பின் மிகக் குறுகிய காலத்தில் ஜம்மு காஷ்மீரின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாக கிராமங்களில் தலைவர்கள், துணைத் தலைவர்கள் என 30,000 பேர் பிரதிநிதித்துவம் செய்வது ஜம்மு காஷ்மீருக்கும் தேசத்திற்கும் பெருமையான விஷயமாக உள்ளது.

370-வது பிரிவு நீக்கப்பட்டதன் காரணமாக புதிய சட்டங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பெறத் தொடங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு படைகள் பெரிய வெற்றியை அடைந்துள்ளன. தொழில் வளர்ச்சி தொடங்கியுள்ளது. 33,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பெற்றது.

சிஆர்பிஎஃப் பற்றி நாடு எப்போதும் பெருமிதம் கொண்டிருக்கிறது. இந்தப் படைப்பிரிவில் உள்ள 3.25 லட்சம் வீரர்களும் உள்நாட்டு பாதுகாப்பிற்கும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் தங்களை மறுஅர்ப்பணம் செய்துகொள்ள வேண்டும்.

காஷ்மீர், நக்சல் பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் பணிபுரியும் உறுதியுடன், அடுத்த சில ஆண்டுகளில், மூன்று பிராந்தியங்களிலும், அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை மற்றும் மூன்று பிராந்தியங்களில் முழுமையான அமைதியைப் பேணலாம் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையுடன், அது நடந்தால், முழுப் புகழும் சிஆர்பிஎஃப்-க்குத்தான் சேரும்" என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: