சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு: காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்தநிலையில் தற்கொலை

சேலத்தில் தனது ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து உயிழந்திருக்கிறார்.
சேலம் மாவட்டம் அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ் குமார். இவர் கடந்த 12 ஆம் தேதி கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அப்போது ஓட்டுநர் சந்தோஷ் குமார் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது .
இதனால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார் உடனே அருகில் இருந்த பெட்ரோல் பங்குங்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். பின்னர் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் சந்தோஷ் குமார் தன்மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீப்பற்ற வைத்துக் கொண்டுள்ளார்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தோஷ்குமார் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (15 .03.22 ) இரவு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று மதியம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உயிரிழந்த சந்தோஷ் குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் ஆனையின் பேரில் வட்டாச்சியர் செம்மலை தலைமையில் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக அங்கிருந்த இறந்துபோன சந்தோஷ் குமாரின் தாயார் புஷ்பாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"என் மகன் அன்று ஆட்டோவுக்கு ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு வரும்போது வண்டியை போலீஸார் மடக்கி வண்டியின் சாவியை வாங்கி ஆட்டோவையும் பறிமுதல் செய்து கொண்டனர். அப்பொழுது என் மகன் எவ்வளவு அபராத தொகை என்றாலும் என் தாயாரை வரச்சொல்லி கட்டி விடுகிறேன் தயவுசெய்து என்னுடைய வண்டியை கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டிருக்கிறான். ஆனால் அவர்கள் தரவில்லை எடுத்துச் சென்றுவிட்டனர். எனக்கு தகவல் கிடைக்க நான் அங்கு சென்று ஆட்டோவைக் கேட்டு கிட்டு எஸ்.ஐ ன் காலில் விழுந்து எங்களுடைய வண்டியை கொடுத்து விடுங்கள் நாங்கள் பணத்தை கட்டி விடுகிறோம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னை உதைத்து தள்ளிவிட்டு போய்விட்டார். என் மகன் மது போதையில் இருந்ததாக கூறுகிறார்கள் எதுவாயிருந்தாலும் நாங்கள் ஃபைன் கட்டி விடுகிறோம் என்றுதான் சொன்னோம். இதை பார்த்துக்கொண்டிருந்த என் மகன் பெட்ரோலை ஊற்றி கொளுத்தி கொள்வேன் என்று ஆவேசமாக கூறினார். அங்கிருந்த அத்தனை போலீசாரும் அதை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் ஆனால் யாரும் தடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவன் பற்ற வைத்துக் கொண்டான். தீ மளமளவென பற்றி உடலெல்லாம் எரியத்தொடங்கியதும். அதைப் பார்த்த காவலர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிவிட்டார்கள்" என்றார்
இது தொடர்பாக கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் கேட்டோம்.
"சந்தோஷ்குமார் மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த போது டிராபிக் எஸ்.ஐ தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். அதில் அவர் மது அருந்துவதை உறுதிப்படுத்திக்கொண்டு அதை ஆதாரத்தோடு வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அபராத தொகையை கோர்ட்டில் செலுத்துமாறு அறிவுறுத்தி வாகனத்தை காவல் நிலைய பாதுகாப்புக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் சந்தோஷ் குமார் தான் உடனே பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். அதற்கு கிட்டு அபராதத்தை நீதிமன்றத்தில் தான் கட்ட வேண்டும். இது ஸ்பாட் பைன் என்றால் நாங்கள் ரசிது கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வோம். ஆனால் இது மதுபோதையில் வாகனத்தை ஓட்டுவது என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குண்டான அபராதத் தொகையை நீதிமன்றத்தில் தான் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் எதிர்பாராதவிதமாக இதுபோன்ற ஒரு துர் சம்பவம் நடந்துள்ளது." என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












