You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வல்லுறவு, ஆபாச வசனங்கள் - கிளப்ஹவுஸ் செயலியில் இலக்கு வைக்கப்படும் பெண்கள் - என்ன நடக்கிறது?
- எழுதியவர், கரிஷ்மா படேல்
- பதவி, பிபிசி செய்திகள்
- பிரசுரிக்கப்பட்டது
கடந்த நவம்பர் மாதம் பாவினி தனது நண்பர் மூலம் தனது உள்ளாடையை குறிப்பிடும் தலைப்புடன் ஒரு ஸ்கிரீன் ரெக்கார்டிங்கை பெற்றார். இது கிளப்ஹவுஸ் செயலியின் ஒரு குழுவில் இருந்து பெறப்பட்டது . அதில் ஆண்கள், பெண்களின் உடல் பாகங்களை ஏலம் விட்டுக் கொண்டிருந்தனர்.
பவினி பெற்ற ஸ்கிரீன் ரெக்கார்டிங்கில் தனது உடல் பாகங்களும் ஏலம் விடப்பட்டுக் கொண்டிருந்தது . இவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
கிளப்ஹவுஸ் செயலி என்பது, பயனர்கள் ஒரு குழுவை தொடங்கவோ அல்லது மற்றவர்களால் தொடங்கப்பட்ட குழுவில் சேரவோ அனுமதிக்கிறது.
பாவினி கூறும்போது, "ஆண்கள் பல மாதங்களாக கிளப்ஹவுஸ் செயலியில் இதை செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான். என்னை வேறு சில பட்ட பெயர் சொல்லி அந்தக் குழுவில் அழைப்பதும் உண்டு."
"தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுதான் நிலைமை" என்றார். இந்த குறிப்பிட்ட நிகழ்வில் கிளப்ஹவுஸ் செயலியில் இவர் மட்டும் இல்லாமல் இன்னும் சில பெண்களின் உடல் பாகங்களும் ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தக் குழுவில் சுமார் 200 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக கிளப்ஹவுஸ் செயலி நிறுவனத்திடம் பிபிசி கேட்டபோது, "இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் கிளப்ஹவுஸ் செயலி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்ததால், இந்த செயலியில் உள்ள இந்து தேசியவாத குழுவினர் தங்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்தி பல மாதங்களாக குறிவைத்து, இது போன்று ஏலம் விடும் செயலை செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் வாழும் இஸ்லாமிய பெண்கள், குறிப்பாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களை இப்படி செய்வது உண்டு. ஒரு சிலர் கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை இணையதளத்தில் ஏலம் விடப்பட்டுள்ளனர், இதன் விளைவாக பல கைதுகள் நடந்துள்ளன.
இந்த ஏலத்தின் பின்னணி, வியாபாரம் செய்ய வேண்டும் என்பது இல்லை. குறிப்பிட்ட நபரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இது நடைபெறுகிறது.
இதன் மூலம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை ஒடுக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்துவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அது அதிக அளவில் நடக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி தனக்கான மெய்நிகர் குழு மூலம் இணையதளங்களில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரால் கொண்டு வரப்படும் புதிய கொள்கைக்கு எதிராக பேசுபவர்களை இக்குழுவினர் அடக்கி வருவதாக கூறப்படுகிறது .
பிரபலமான சமூக ஊடக செயலியான ட்விட்டரிலும் இந்த பிரச்னை காணப்படும் வேளையில், அதிக பயனர்களைக் கொண்டிருக்காத சிறிய சமூக ஊடக செயலிகளில் உள்ள சில குழுவினரும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை கண்காணிப்பது கடுமையான பணியாக இருக்கிறது.
இதனால் அவற்றில் நடக்கக்கூடிய குற்றச் செயல்களும் வெளிப்படையாக தெரிவதில்லை.
கிளப்ஹவுஸ் செயலி, மற்ற செயலிகள் போல் இல்லை. இந்த செயலியைப் பயன்படுத்த இதை பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவர் இன்வைட் லிங்கை அனுப்புவது மூலமே இதை இன்ஸ்டால் செய்ய முடியும். மேலும் ஈலோன் மஸ்க் போன்ற பிரபல நபர்கள் நேரலையில் பேசுவதை கேட்பதற்கான வாய்ப்பையும் இந்த செயலி தருகிறது. இது போன்ற அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த செயலி பிரபலமாகி வருகிறது.
பாவினி மற்றும் மற்றொரு பெண்மணி ரேகா கிளப்ஹவுஸில் சேர்ந்தபோது அரசியலைப் பற்றி சுதந்திரமாக பேசலாம் என்ற நம்பிக்கையில் சேர்ந்தனர்.
இந்த செயலியில் இந்திய அரசியலைப் பற்றிப் பேசுவது கடினமானது என்பதை இந்த இரண்டு பெண்களும் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக அது விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தாலோ, சர்ச்சைக்குரிய சீர்திருத்தங்கள் தொடர்பாக இருந்தாலோ மோதியின் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டாலோ இந்த செயலியில் கருத்தைப் பகிர்வது மிகவும் கடினம் என்கிறார்கள்.
33 வயதான தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ரேகா, "நான் எனது அரசியல் கருத்தை தெரிவித்த நாளில் இருந்து தவறாக விமர்சிக்கப்படலானேன்," என்றார்.
ரேகாவும் பாவினியும் இந்த செயலியில் கணக்கு தொடங்கிய நாளில் இருந்தே தங்களின் படங்களை பயன்படுத்தி ட்ரோலர்கள் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல்களை விடுக்கத் தொடங்கியதாக கூறுகின்றனர்.
"ஒரு கட்டத்தில் சாட்டிங் அறைக்குள் நுழைந்தாலே அதில் உள்ள யாரோ ஒருவர் வார்த்தையால் கடுமையாக என்னை சாடி விட்டு வெளியே செல்வார்," என்றார். "இப்போதும் என்னை நான்கு போலி கணக்கு வைத்திருப்பவர்கள் அப்படி மிரட்டுகிறார்கள்," என்கிறார் பாவினி.
"சில மாதங்களுக்கு முன்பு எனது தோழி ஒருவரை ஒரு செயலியில் ஏலம் விடுவது போல செயல்பட்டனர். அப்போது நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். ஆனால் தற்போது எனக்கும் அது போன்ற ஒரு விஷயம் நடக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பக்கம் பெண்களை நெறிப்படுத்தி பேசுகிறார்கள், மறுபக்கம் மிக மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். இது சம்பந்தமாக முறையான புகார் கொடுத்த பிறகும் சுமார் 2 மணி நேரம் அந்த ஏல நடவடிக்கை குறிப்பிட்ட செயலியில் தொடர்ந்து கொண்டே இருந்தது" என்கிறார் ரேகா.
இது சம்பந்தமாக பிபிசி நடத்திய கள ஆய்வில், புகார் கொடுக்கப்பட்ட நபர்களில் ஒருவரது கணக்கு முடக்கப்பட்ட போதிலும், மீண்டும் அவர் வேறு ஒரு பெயரில் குறிப்பிட்ட செயலியில் செயல்படத் தொடங்கியுள்ளார். புதிதாக தொடங்கப்பட்ட அந்த கணக்கு ஏல நாள் அன்றே தொடங்கப்பட்டது என்றும் தெரிகிறது.
"ஒருவர் மீது எத்தனை முறை புகார் கொடுத்தாலும் அவர் மீண்டும் வேறு ஒரு பெயரில் கணக்கு தொடங்கி செயல்படுவது வழக்கமாகப் போய்விட்டது" என்று சொல்கிறார் ரேகா. இந்த குறிப்பிட்ட செயலியில் உள்ள இன்னொரு பிரச்னை என்பது இது ஒலி நேரலை வழங்கக்கூடியது. அதனால் இதில் பகிரப்படும் செய்திகளை ஆவணப்படுத்துவது முடியாத காரியம் என்கிறார்கள்.
கிளப்ஹவுஸ் நிர்வாகம் இது பற்றி கூறுகையில், சம்பந்தப்பட்ட குழு பற்றி புகார் வந்தால், அதில் இடம்பெற்ற நேரலை ஒலி உரையாடல் பதிவுகள் எங்கள் தரப்பில் இருக்கும். அதை சரிபார்த்து விசாரிக்க அவை உதவும் என்கிறது.
"எந்தப் பயனீட்டாளர் மீது புகார் பெறப்படுகிறதோ அவர் நிரந்தரமாக செயலியில் செயல்பட அனுமதி வழங்கப்படாது. அதுபோல அந்தக் குழுவில் செயல்ப்பட்ட மற்ற பயனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறது கிளப்ஹவுஸ் நிர்வாகம்.
"இதுபோன்ற புகாரின் அடிப்படையில் பல பயனர்கள் நீக்கப்பட்டுள்ளனர்".
கிளப்ஹவுஸ் செயலியில் புகார் தெரிவிக்கப்பட்ட குறைந்தபட்சம் ஒரு பயனர் மீண்டும் அதே சர்ச்சைக்குரிய ஏல அறையில் இடம்பெற்று இருப்பதை பிபிசி கண்டறிந்தது.
"இப்படித்தான் எத்தனை முறை நான் புகார் தெரிவித்தாலும் எதுவும் மாறவில்லை" என்கிறார் ரேகா.பயனர்கள் பழைய உரையாடல்களை அணுக முடியாததால், சம்பந்தப்பட்ட நபர்களை எப்படி பொறுப்புடைமையாக்குவது என்பது பற்றிய கவலைகள் அதிகரித்துள்ளன - அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை அல்லது அவற்றை மீண்டும் போட்டுப்பார்க்கும் வசதி பயனருக்கு இருப்பதில்லை. இதேவேளை விசாரணை தேவைக்காக பயனர்கள் புகார் செய்யும் அறைகளின் சாட்டிங் பதிவுகளை சேமித்து பராமரிப்பதாக கிளப்ஹவுஸ் தெரிவித்துள்ளது."காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்ட பயனர்கள் திரும்புவதை கடினமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த செயலி கூறியது, எனவே "கேள்விக்குள்ளான நபர் பல்வேறு பெயரில் வேறு கணக்கில் நுழைந்தாலும் அவரை தடுக்க முடியும்," என்று அந்த செயலி நிர்வாகம் கூறுகிறது.
இணைய வழி தளங்களைப் பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படும் நபர்களுக்கு எதிரான TeamSAATH, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளப்ஹவுஸ் சாட்டிங் விவகாரம் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்தது.அந்த அமைப்பு, "இந்த வகை துஷ்பிரயோகம் எப்படி கடுமையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமோ அந்த அவ்வளவு தீவிரமாக கவனத்தில் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிர்வாகம் தங்களுடைய வேலையை செய்ய வேண்டும்" என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு அரசின் கொரோனா ஊரடங்கு: நோக்கம் நிறைவேறியதா?
- பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வு என்ன - உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவர கோரிக்கை
- நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு மாற்றங்களைக் கொண்டுவருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்