You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புத்தாண்டு 2022: நம்பிக்கையோடு காத்திருக்கும் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள்
- எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கிராமப்புற திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் என்றால் கட்டாயம் கலை நிகழ்ச்சிகள் இருக்கும். குறிப்பாக மக்களிசையாக போற்றப்படும் நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசும் ரசிகர்கள் கூட்டமும் இ(எ)ப்போதும் உண்டு. கிராமப் புறங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் நாட்டுப்புற கலை நிகழ்வுகளுக்கு வரவேற்பு உள்ளது. ஆனால். கொரோனா பெருந்தொற்றால் கிராமிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள், மேடை நாடகம் மற்றும் இசைக் கலைஞர்கள் மேடை ஏறும் வாய்ப்பை பெருமளவு இழந்துள்ளனர்.
"2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று வந்தது. இதனால் 2020ஆம் ஆண்டு பல்வேறு துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டது. இது கலைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக கிராமிய, நாட்டுப்புற கலைஞர்கள். தொடர்ந்து 2021ம் ஆண்டில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே வாய்ப்பிருந்தது. பொருளாதாரம் முடங்கியே இருக்கிறது என்கிறார்கள்," கிராமப்புற கலைஞர்கள்.
நன்கொடையாளர்களின் உதவிகளை மறக்க முடியாது
தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்ற நிறுவனத் தலைவர் வளப்பகுடி வீரசங்கர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஆண்டிற்கு 4 மாதங்கள் தான் எங்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான், 12 மாதங்களையும் சமாளிக்க வேண்டும்," என்றார்.
"கஜா புயல், கொரோனா என தொடர்ந்து 3 ஆண்டுகளாக போதிய வாய்ப்பில்லை. பலரும் அத்தியாவசிய செலவிற்கே வழியின்றி அல்லல்படுகின்றனர். தமிழ்நாடு அரசு நலவாரியத்தின் மூலம் ஒரு முறை ரூ. 2000 கொடுத்தது பெரும் உதவியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வாழ்க்கையை நடத்த நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்."
சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், பல்வேறு தனியார் அமைப்பினர், தன்னார்வலர்களின் நன்கொடையால் இந்த ஆண்டு மட்டும் சுமார் 19 ஆயிரம் கலைஞர்களுக்கு உதவியுள்ளோம். நன்கொடையாளர்கள் பணம் மட்டுமல்ல, அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் என்று கொடுத்து உதவினர். அவர்கள் உதவியால் பல கலைஞர்கள் இன்றைக்கு உயிரோடு இருக்கிறோம். இந்த பெருந்தொற்று காலத்தில், இது போன்ற உதவிகளை என்றைக்கும் மறக்க முடியாது" என்கிறார்.
கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர்
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர், மதுரை லட்சுமி பிபிசி தமிழிடம் கூறுகையில், "கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. புத்தாண்டு பிறந்ததும், மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருக்கும் போது, புதிய திரிபான ஒமிக்ரான் பரவல் ஒரு அச்சத்தை தருகிறது. தொடர்ந்து விழாக்கள் நடைபெறாத நிலையில், கடைகளுக்கு முன்பாக நின்று காசு கேட்கும் நிலை ஏற்பட்டது," என்றார்.
"புத்தாண்டிலாவது யாராவது சாப்பாடு தருவார்களா? என்று காத்திருக்கும் நிலை மாறும். வீட்டில் உள்ள வறுமை போய், மீண்டும் வீட்டில் விளக்கு எரியும் என்று காத்திருக்கிறோம். இந்த ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கரகாட்ட கலைக்காக எனக்கு விருது கொடுத்து அங்கீகரித்தார்கள். ஆனால், இதைக் கொண்ட்டாட கூட இயலவில்லை. சக கலைஞர்கள் அனைவரும் மகிழும் நாள், 2022ம் ஆண்டு கொடுக்கட்டும்." என்கிறார் லட்சுமி.
புத்தாண்டில் நல் வழி பிறக்கும் என்று நம்பிக்கை
இவரைப்போலவே புத்தாண்டாவது நல்வழி காட்டும் என்கிற நம்பிக்கையோடு பல கலைஞர்கள் காத்திருக்கிறார்கள்.
நாட்டுப்புற கலைக்குழு நடத்தி வரும் ராஜீவ்காந்தி, "மேடையில் திறமைகளைப் வெளிப்படுத்தி, மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நாட்டுப் புற கலைஞர்களுக்கு 2022ம் ஆண்டாவது இயல்பு நிலைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறோம். தமிழ் மாதத்தில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டுமே தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும். மற்ற மாதங்களில் ஒன்றிரண்டு வரும், அதுவும் எல்லாருக்கு கிடைக்காது. ஆகையால், 2018 ஆம் இறுதியில் கஜா புயலைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் தொடர்ந்து 3 ஆண்டுகள் கலைஞர்களுக்கு கஷ்டம்தான். ஆனால், கச்சேரி வாய்ப்பில்லாமல் தினக் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வேலையும் கிடைக்கவில்லை. இந்த துயரத்திலும் பலர் பண உதவி, பொருள் உதவி என்று செய்து வருகிறார்கள். அவர்களின் மனிதநேய உதவிகள்தான், எங்களை இப்போது வாழ வைத்துள்ளது," என்கிறார்.
மேடைகளில் மக்களால் கொண்டாடப்படும் கலைஞர்கள் பலரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் நாட்டுப்புறப் பாடகி ஆரூர் அம்பிகா.
அவர் கூறுகையில், "வாழ்வில் மிகக் கொடுமையான கால கட்டம் இது. கடந்த ஆண்டு வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. இந்த ஆண்டு கிடைத்த சில வாய்ப்புகளும் ரத்தாகின. இதனால், அன்றாட செலவு, குழந்தைகளின் கல்வி செலவு மட்டுமல்ல வயிற்றுப் பசி போக்குவதே பெரும்பாடு என்கிற நிலை. சேமித்து வைத்திருந்த கொஞ்சத்தையும் விற்று விட்டு கடனாளிகளாக உள்ளோம். அரசு நலவாரியத்தின் மூலம் ₹ 2 ஆயிரம் கொடுத்தார்கள். அந்த தொகையும் என்போன்ற பலருக்கும் கிடைக்கவில்லை." என்கிறார்.
தொடக்கம் நம்பிக்கை அளிக்கிறது
திரைத்துறையில், சின்னத்திரைகளில் வாய்ப்பு பெற்று கவனத்திற்கு உள்ளாகி, பிரபலமாகியுள்ள சிலர் உட்பட பெரும்பான்மையான கலைஞர்கள் பொருளாதாரத்தில் பெரிதும் நலிவடைந்துள்ளனர்.
அனைவருக்கும் அரசு உதவ வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்தி, கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத, அனைத்து கலைஞர்களுக்கும் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"பிறக்கும் 2022ம் ஆண்டு தொடக்கத்தில், "சென்னையில் ஊர்த் திருவிழா என்று திட்டமிட்டுள்ளார்கள். இதில், சற்றேறக்குறைய 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது நல்ல தொடக்கமாக தெரிகிறது. இது தொடர வேண்டும்" என்கிறார் ஊர்த்திருவிழா அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் வளப்பகுடி வீரசங்கர்.
நம்பிக்கையோடு காத்திருக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நல் வழி பிறக்கட்டும் புத்தாண்டில்...
பிற செய்திகள்:
- விண்வெளியில் 312 நாட்கள்: சோவியத்தின் 'கடைசி குடிமகன்' பூமி திரும்பியதும் சந்தித்த அதிர்ச்சி
- இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: முதலைகளிடம் இருந்து தப்பிக்கும் மனிதர்கள் - அதிர்ச்சித்தகவல்
- 2021ல் இந்திய கிரிக்கெட் - இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை
- தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? - கூட்டுறவுத்துறை அறிவிப்பு
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
- ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்