வருமான வரி சோதனையில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு கண்டுபிடிப்பு

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய தொழில் குழுமங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவு விற்பனை குறைத்துக் காட்டப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நிறுவங்களின் பெயரையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிடவில்லை.

இரண்டு தொழில் குழுமங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் 10 கோடி ரூபாய் பணமும் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ள, நகைகள், துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இரண்டு தொழில் குழுமங்களுக்குச் சொந்தமான 37 கடைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தொழில் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற சான்றுகள் மூலம் அக்குழுமத்தில் கணக்குகளில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும் பல ஆண்டுகாலமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக விற்பனை குறைத்து காட்டப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக ஆடைகள் மற்றும் நகை விற்பனை பிரிவில் கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கொண்டு 150 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது என்றும் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது குழுமத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரசீதுகள் வாங்கப்பட்டு அதன் மூலம் வரி செலுத்த வேண்டிய வருவாயை குறைத்துக் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாமல் தங்கம் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் வருமான வரித்துறைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் வாடகை மற்றும் விற்பனை மூலம் பெறப்பட்டு, கணக்கில் காட்டப்படாத ஏழு கோடி ரூபாய்க்கான ஆவணங்களும் இந்த நிறுவனத்தில் வருமானவரித்துறை கைப்பற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :