உத்தர பிரதேசத்தில் சிறுவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர் கைது

பள்ளிக் கூடம் - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பள்ளிக் கூடம் - கோப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது

(இன்று 30.10.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சக மாணவனை கடித்த சோனு யாதவ் என்கிற இரண்டாம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா அழைத்து கண்டித்துள்ளார். பிறகு சக மாணவனிடம் மன்னிப்பு கேட்குமாறு சோனுவிடம் அவர் கூறியுள்ளார்.

ஆனால் சோனு மன்னிப்பு கேட்காததால் ஆத்திர மடைந்த தலைமை ஆசிரியர் அச்சிறுவனை தரதரவென்று பள்ளி மேல் தளத்துக்கு இழுத்துச் சென்று,சிறுவனின் காலை பிடித்துக் கொண்டு அச்சிறுவனை மாடியிலிருந்து தலைகீழாக தொங்கவிட்டு, மன்னிப்பு கேட்குமாறு பயமுறுத்தியுள்ளார். இதில் சோனு அலறி அழத் தொடங்கியதால் சக மாணவர்கள் அங்குகூடினர். இதையடுத்து அச்சிறுவனை தலைமை ஆசிரியர் விடுவித்தார்.

இந்நிலையில் சோனுவை தலைமை ஆசிரியர் தலைகீழாக தொங்கவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா நேற்று கைது செய்யப்பட்டார் என இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது

சோனுவின் தந்தை ரஞ்சித் யாதவ் கூறும்போது, "தலைமை ஆசிரியர் செய்தது தவறாக இருந்தாலும் எனது மகன் மீதான அன்பின் காரணமாகவே அவ்வாறு செய்துள்ளார்" என கூறியுள்ளார்.

தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கூறும்போது, "சோனு மிகவும் குறும்புக்காரன். குழந்தைகள் மட்டுமின்றி ஆசிரியர்களையும் அவன் கடித்துள்ளான். அவனை திருத்துமாறு அவனின் தந்தை கூறியிருந்தார். எனவே நாங்கள் அச்சுறுத்த முயன்றோம்" என கூறியுள்ளாதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2024ல் மோதி மீண்டும் பிரதமராக, யோகி மீண்டும் உபி முதல்வராகவேண்டும்: அமித் ஷா

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று நரேந்திர மோதி பிரதமராகத் தொடர வேண்டும் என்றால், அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெறும் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

உத்தரப் பிரதேச தலைநகா் லக்னௌவில் வெள்ளிக்கிழமை பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் "மோதி பிரதமரான பிறகு உத்தர பிரதேசத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளாா். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்தல்தான், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான அடிக்கல்லாக இருக்கும். அடுத்த மக்களவைத் தோ்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று நரேந்திர மோதி மீண்டும் பிரதமராகத் தொடர வேண்டுமென்றால், அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்றத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வராக வேண்டும்.

தோ்தல் பணியில் பாஜகவினா் அா்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். நமது கட்சியினா் தாமரைச் சின்னத்துடன், கோஷங்களை எழுப்பிச் செல்லும்போது எதிா்க்கட்சிக்குத் தோல்வி பயம் வர வேண்டும். மாநிலத்தில் 300 இடங்களுக்கு மேல் வெல்வதை இலக்காகக் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும்" என்று அவர் பேசியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரவெடிக்கு உள்ள தடையை சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம்

சர வெடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர வெடி

பட்டாசு வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை அனைவரும் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பட்டாசு வழக்கில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொண்டாட்டம் என்கிற பெயரில் அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும் இந்த உத்தரவை பொறுத்தவரை, குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளின் சுகாதார நலனை மீறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை, அதே நேரம் பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் 'பேரியம் நைட்ரேட்' ரசாயணம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்த உத்தரவுகளை மீறினால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் அல்லது மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அல்லது காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் எச்சரித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :