ஆடு, மாடு வளர்க்க கட்டணம்: மதுரை மாநகராட்சியின் அறிவிப்பு உண்மையா?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்குப் புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. மாநில நிதி நிலை மோசமாக இருக்கும் நிலையில் அதைச் சரி கட்டவே இந்த வரிகள் விதிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களும் செய்தனர். ஆனால், உண்மை என்ன?

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் ஆடு, மாடு, நாய் போன்றவற்றை வளர்க்க வரி செலுத்த வேண்டுமென மாநகராட்சி உத்தரவிட்டதாக செவ்வாய்க் கிழமையன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. மதுரை மாநகராட்சி வெளியிட்ட ஒரு அறிவிப்பின் அடிப்படையில் இந்த செய்திகள் வெளியானதாகக் கூறப்பட்டது.

அந்தச் செய்திகளின்படி அதன்படி மாடு, குதிரை, எருமை, நாய் போன்றவற்றை வளர்க்க வருடத்திற்கு 10 ரூபாய் செலுத்த வேண்டுமெனவும் தெருக்களில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் நாய்களின் உரிமையாளருக்கு ஐநூறு ரூபாய் அபராதம் எனவும் திடக் கழிவுகளை தெருவில் கொட்டும் இறைச்சிக் கடைகளுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் கேள்விகளும் கேலிகளும் எழுந்தன. அதற்கு முந்தைய நாள்தான் தமிழ்நாடு நிதியமைச்சர் மாநில நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், வருவாயை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

சிலர், "குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட இனி வரி இருக்கும் போலிருக்கிறது" எனக் கருத்துத் தெரிவித்தனர்.

"மதுரை மக்களே, ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச உங்கள நினச்சா ரொம்பப் பெருமையா இருக்கு" என தி.மு.கவின் வெற்றியோடு இதனைத் தொடர்புபடுத்தினர்.

தனியாக வேளாண்மைக்கென ஒரு பட்ஜெட் போட்டால் விவசாயிகளுக்கு இப்படிதான் சுமை அதிகரிக்குமென சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

உண்மையிலேயே இப்படி ஒரு வரி இருக்கிறதா என சிலர் கேள்வி எழுப்பினர்.

உண்மை என்ன?

மதுரை மாநகராட்சியின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. மதுரை மாநகராட்சி பொது சுகாதார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சிச் சட்டம் 1971ன் பிரிவு 41 - 48 மற்றும் 134/138 Aவின் படி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் வகையில் செயல்படும் கறிக்கடை, மீன்கடை, விற்பனைக் கூடங்கள், வளர்ப்புப் பிராணிகள், சுற்றித் திரியும் மாடுகள், குதிரை போன்றவற்றுக்கு உரிமம் அளிக்கவும் அபராதம் விதிக்கவும் தீர்மானம் ஒன்று ஜூலை 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

கறிக்கடைகள், கோழிக் கடைகள், செல்லப்பிராணிகள் விற்கும் கடைகள் ஆகியவற்றுக்கு சதுர அடிக்கு வருடத்திற்கு பத்து ரூபாய் எனவும் உரிமம் வழங்கப்படாத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டினால், அந்த விலங்குகள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.. 5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் மாடு, எருமை, குதிரை, நாய் போன்றவற்றை வளர்க்க ஆண்டுக்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெருக்களில் ஆடு, மாடு, குதிரைகள் திரிந்தால் அவற்றின் உரிமையாளருக்கு 1000 ரூபாய் + தினமும் 200 ரூபாய் அபராதம் விதிக்கவும் நாய்களின் உரிமையாளருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கவும் இறைச்சிக் கடைகள் கழிவு நீரையும் தடக் கழிவுகளையும் தெருவில் கொட்டினால் அதற்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்தின் மீது 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மாநகராட்சி வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

"மதுரையில் சில இடங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டுவிட்டு வேறு இடங்களில் மிருக வதை செய்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்தவே இந்த அபராத முறையைக் கொண்டுவந்தோம். மேலும், சாலையில் திரியும் மாடுகளால் கடந்த ஆண்டில் மட்டும் 15 விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த விரும்பினோம். சாலையில் திரியும் மாடுகளை மாநாகராட்சி பிடித்து அடைக்கும்போது, அவற்றின் உரிமையாளர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவுசெய்யும் முறை உதவும். அதற்காகத்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது" என பிபிசியிடம் கூறினார் மதுரை மாநகராட்சியின் ஆணையர் கார்த்திகேயன்.

விலங்குகளை வளர்ப்பதற்கு கட்டணம் விதிக்கும் மதுரை மாநகராட்சியின் இந்த விதிகள், புதியவை அல்ல. 1971ல் மதுரை மாநகராட்சி உருவாக்கப்பட்டபோது, அதற்கான சட்டத்திலேயே இந்தக் கட்டணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மதுரையில் கடந்த சில மாதங்களில் சாலைகளில் திரியும் மாடுகளின் மீது ஆசிட் அடிப்பது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. தெரு நாய்களுக்கு சிலர் உணவு வைக்கும்போது, வேறு சிலர் சண்டை போடுகின்றனர். ஆகவே மிருகங்களின் உரிமையை உறுதிசெய்யவும் அவை துன்புறுத்தப்படாமல் தடுக்கவுமே இந்த விதிகளை அமல்படுத்த முடிவுசெய்தோம் என்கிறார் கார்த்திகேயன். தவிர, கட்டணம் இன்னமும் விதிக்கப்படவில்லை. அது தொடர்பான கருத்துக் கேட்பு அறிவிப்புதான் இப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் மதுரை மாநகராட்சி ஆணையர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :