ஜல்காரி பாய்: 1857களில் ஜான்சி ராணிக்கு துணை நின்ற விளிம்புநிலை பெண்மணியின் வரலாறு

காணொளிக் குறிப்பு, 1857களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட ஜான்சி ராணிக்கு துணை நின்ற விளிம்புநிலை பெண்மணி
பிரசுரிக்கப்பட்டது

(இந்தியக் குடியரசில் ஒடுக்கப்படும் வாழ்வை ஏற்காத தலித், பழங்குடி, முஸ்லிம் பெண்களின் வரலாறு இது. 'வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பிபிசி வெளியிடும் கட்டுரைகளின் இரண்டாம் பாகம்)

இந்தப் பெண்மணியின் வீரமும் மன உறுதியும் வரலாற்றில் பேசப்படவில்லை என்றாலும் கதைகளைப் பகிர்வது மூலமாக மக்கள் அவருக்குத் தங்கள் இதயத்தில் இடம் கொடுத்தார்கள். சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஒரு முன்னோடியாக அவரது கதைகள் இருக்கின்றன. அதனால்தான் பல நகரங்களில் குதிரை மீது இருப்பதுபோன்ற அவரது சிலைகள் நிறுவப்பட்டன. அவர் பெயர் ஜல்காரி பாய்.

1857 கலகத்தின்போது பிரிட்டிஷாருக்கு எதிராக ஜான்சி ராணியுடன் போரிட்டவர் ஜல்காரி பாய்.

ஜான்சிக்கு அருகில் போஜ்லா என்ற ஒரு கிராமம் இருக்கிறது. ஜல்காரி பாய் இங்கிருந்து வந்தவர் என்று சொல்லப்படுகிறது. தலித் நெசவாளர்கள் நிறைந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் இவர்.

"ஜான்சியின் ராணியான லக்‌ஷ்மி பாயின் கோட்டைக்கு முன்னால் வசித்தவர் இவர். போஜ்லா கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் விறகு சேகரிப்பதற்காக அருகிலிருக்கிற காடுகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் செல்வார்கள். அந்த இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் இன்று அங்கு வசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஜல்காரி பாயின் சொந்த பந்தங்களும் இந்தக் கதைகளை சொல்லி வருகிறார்கள். தாங்கள்தான் போரிட்டோம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அங்கு ஒரு பெரிய சமூகம் இருக்கிறது, பெரிய வரலாறு இருக்கிறது, ஜல்காரி பாய் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ராஜ்குமார்.

ஜல்காரி பாயின் வீரத்தைப் பேசுகிற பல கதைகள் உண்டு. ஒரு கதையில் அவர் குழந்தையாக இருக்கும்போதே ஒரு புலியைக் கொன்ற நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. கொள்ளைக்காரர்களின் சூறையாடலை எதிர்த்து விரட்டினார். அவரது கணவர் பூரன் ஒரு மல்யுத்த வீரராக இருந்தார்.

ஜான்சி ராணியின் ராணுவத்தில் இணைந்த அவர், பிரிட்டிஷாருக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தார். அந்த காலகட்டத்தில் இருந்த சமூக அரசியல் சூழல், ஜல்காரி பாய் போன்ற ஒரு ஆளுமையை உருவாக்கியிருக்கிறது.

"முக்கியமானவர்கள், சிறப்பானவர்கள் என்று பிரிட்டிஷாரால் நினைக்கப்பட்டவர்களின் வரலாறு மட்டுமே ஆவணங்களில் இருக்கிறது. ஆகவேதான் நாம் மக்களின் நினைவுக்குள் போய் தேடவேண்டியிருக்கிறது. ஜல்காரி பாய் அங்குதான் குடியிருக்கிறார். அந்த காலகட்டத்தின் கதையாடல்களில்கூட அவர் குறிப்பிடப்படுகிறார். அவர் நிஜமாகவே வாழ்ந்தாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் அவரின் ஆளுமை இருந்தது. அவர் வரலாற்றில் இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது" என்கிறார் சமூகவியலாளர் பத்ரி நாராயணன்

அடுத்ததாக, அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தலித்துகளுக்கு மரியாதை இருக்கவில்லை. அது பிரிட்டிஷாருக்கும் தெரிந்திருந்தது. அதையே அவர்களும் பின்பற்றினார்கள் என எழுத்தாளர் மோகன் தாஸ் நைமிஷ்ராய் தெரிவித்தார்.

ஜல்காரி பாய் எப்படி ஜான்சி ராணியிடம் போய் சேர்ந்தார்? விளிம்புகளில் வசித்தவர்கள் எப்படி ஜான்சியின் ராணிக்கு அருகில் போய் நின்று போரிட்டார்கள்? பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் குறுநில மன்னர்களும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஜான்சி ராணிக்கு உதவ முன்வரவில்லை. ஆகவே ராணியால் வேறு என்ன செய்திருக்க முடியும்?

வரலாற்றிலேயே முதல்முறையாக அவர் ஒன்றைச் செய்தார். தலித்துகளையும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் ஒன்றாகக் கொண்டு வந்தார் என எழுத்தாளர் மோகன்தாஸ் நைமிஷ்ராய் குறிப்பிடுகிறார்

"அன்றைக்கு இருந்த ராஜா ராணிகளின் வீட்டைச் சுற்றி பல சாதி மக்கள் வேலை செய்தனர். அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டனர். ஜல்காரி பாய் நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரும் ஜான்சி ராணியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தார். ஜான்சி ராணி குழந்தையாக இருந்தபோதே இவர் பணிப்பெண்ணாக இருந்தார் என்பதால், இவரும் குழந்தைப் பருவத்திலிருந்தே பணிப்பெண்ணாக இருந்திருக்கலாம். அது இருவருக்கும் இடையே ஒரு நட்பை உருவாக்கியிருக்கும். இவரது உடல் அமைப்பும் முகமும் ஜான்சி ராணியைப் போலவே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. லக்‌ஷ்மிபாய் நட்புறவும் உற்சாகமும் கொண்ட ஒரு பெண், ஆகவே இருவரும் நெருக்கமாகப் பழகியிருக்கலாம்" என்கிறார் சமூகவியலாளர் பத்ரி நாராயணன்

ஜல்காரி பாய் ஜான்சி ராணிக்கு நெருக்கமானார். அவரது தோற்றம் ஜான்சி ராணியைப் போலவே இருந்தது என்று மக்கள் நினைவுகூர்கின்றனர். அதனால் பிரிட்டிஷாரை ஏமாற்றுவதற்காக அவர் வேடமிட்டிருக்கலாம். அதன்பிறகு நடந்தது ஜல்காரி பாயின் வரலாறானது.

"1857ல் கலகம் வெடித்து பிரிட்டிஷ் ராணுவம் தாக்கியபோது, ஜான்சி ராணியிடம் குழந்தையோடு தப்பிவிடுமாறு கூறிய ஜல்காரி பாய், அவரைப் போலவே நடித்து பிரிட்டிஷாரைத் தடுத்தார். அவர்கள் ராணியைத் தாக்குவதாக நினைத்து என்னுடன் போரிடும்போது நீங்கள் தப்பிவிடுங்கள் என்று சொன்னார். ராணி லக்‌ஷ்மி பாயைப் போல வேடமிட்டு அவர் சண்டையிட்டார். வீரத்துடன் அவர் போரிட்டார். அவர் ராணி லக்‌ஷ்மி பாய் இல்லை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை, இதுதான் நடந்தது" என பத்ரி நாராயணன் தெரிவிக்கிறார்.

பல தலைமுறைகள் கடந்தன. ஜல்காரி பாயின் பெயர் ஆவணங்களில் இடம்பெறவில்லை, மக்களின் வாழ்வில் அது ஒரு அங்கமாக மாறியது. அரசியல் சமூக விழிப்புணர்வு வந்தபிறகு விளிம்புநிலை மனிதர்கள் இந்திய விடுதலைப் போரில் தங்களுக்கான வரலாற்றை சேர்க்கிறார்கள்.

மோகன் தாஸ் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்.

"ஜல்காரி பாய் வந்தபிறகு ஜான்சி ராணிக்கு மரியாதை கூடியது. அந்த காலத்திலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அத்தனை பெரிய விஷயத்தை செய்தார் என்பதை ஏன் மக்களால் ஏற்க முடியவில்லை?"

கட்டுரை: நசருதீன்

காணொளி படப்பிடிப்பு: தேவேஷ் சிங்

படத்தொகுப்பு : தீபக் ஜஸ்ரோட்டியா, டேனியல்

தயாரிப்பாளர்: சுஷிலா சிங்

(வரலாற்றில் பெண்கள் பாகம் 2 தயாரிப்பாளர் சுஷிலா சிங், பிபிசி இந்தி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :