உதா தேவி: 36 ஆங்கிலேயர்களைக் கொன்று கணவரின் மரணத்திற்குப் பழிவாங்கிய பெண்
இந்தியக் குடியரசில் ஒடுக்கப்படும் வாழ்வை ஏற்காத தலித், பழங்குடி, முஸ்லிம் பெண்களின் வரலாறு இது. 'வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பிபிசி வெளியிடும் கட்டுரைகளின் இரண்டாம் பாகம்)
வரலாற்றில் பெண்கள் முதல் பாகம் :பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட புரட்சியாளர்கள்
உதா தேவியின் கதை வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். ஆனால் உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவைச் சுற்றியுள்ள பகுதியில் அவரது துணிச்சலின் கதையைச் சொல்லாதவர் இல்லை.
தலித் சமூகத்தைச் சேர்ந்த உதா தேவி, லக்னோவின் நவாப் வாஜித் அலி ஷாவின் பேகம் ஹஸ்ரத் மஹாலின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றினார். அவரது கணவர் மெக்கா பாசியும் நவாபின் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார்.
1857ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் கிளர்ச்சி இந்தியாவில் நடந்தது. லக்னோவின் நவாப், வாஜித் அலி ஷா, ஆங்கிலேயர்களால் கல்கத்தாவுக்கு கட்டாயமாக அனுப்பிவைக்கப்பட்டார். அவரது மனைவி ஹஸ்ரத் மஹால் கிளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்தார். லக்னோவுக்கு அருகிலுள்ள சின்னஹட் என்ற இடத்தில் நவாபின் ராணுவத்திற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த போரில் உதா தேவியின் கணவர் மெக்கா பாசி கொல்லப்பட்டார்
கணவரின் மரணத்தால் வருத்தப்பட்ட உதா தேவி பிரிட்டிஷாரை எவ்வாறு பழிவாங்கினார்?
உதா தேவி பாசி சமூகத்தைச் சேர்ந்தவர். உதா தேவி வீரத்திற்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் என்று சிந்தனையாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.
உதா தேவி 36 பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்றார். இவரது வரலாறு நாட்டுப்புறக் கதைகளிலும் நாட்டுப்புறப் பாடல்களிலும் இன்றும் உயிர்ப்புடன் இருந்தாலும், இத்தகைய வீரச் செயல் புரிந்த உதா தேவியின் பெயர் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.
உதா தேவி பற்றிய இந்தக் கதை உண்மையாகவே நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் என்று கருத ஆதாரம் உள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வர்ணனை அடங்கிய ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருடைய பெயர் தான் மறைக்கப்பட்டிருந்தது.
பல ஆண்டுகள் கழித்து, பல ஆராய்ச்சிகளின் விளைவாக உதா தேவியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார் சமூகவியலாளர், பேராசிரியர் பத்ரி நாராயண் திவாரி,
உதா தேவி போன்ற பெண்களின் பெயர்கள் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறவில்லை. ஆனால் அவர்களின் துணிச்சலும் தியாகமும் பொதுவாக உயர் சாதியினராலும் ஆண்களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்ட சாதனையாளர்கள் பட்டியலில், சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களும் இடம்பெறலாம் என்பதை நிரூபித்துள்ளன.
உதா தேவியின் கதை சுதந்திரப் போராட்டத்தில் தலித்துகள் மற்றும் பெண்களின் பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்தியக் குடியரசின் உண்மையான மக்களை அடையாளம் காட்டுகிறது இந்த முன்னுதாரணம்.
வரலாற்றில் பெண்கள் பாகம் 2 - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்: நிலமற்றவர்களுக்கு நிலம் வாங்கப் போராடிய தமிழ் பெண் செயற்பாட்டாளர்
செய்தியாளர் - சுஷிலா சிங்
படத்தொகுப்பு - தீபக் ஜஸ்ரோடியா
படப்பிடிப்பு - தேவேஷ் சிங், தீபக் ஜஸ்ரோடியா, சுபாஷ் பட்
(வரலாற்றில் பெண்கள் பாகம் 2 தயாரிப்பாளர் சுஷிலா சிங், பிபிசி இந்தி)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்