ராணி கெய்டின்லியு: பிரிட்டிஷாரை எதிர்த்து 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த பெண்

காணொளிக் குறிப்பு, ராணி கெய்டின்லியு: பிரிட்டிஷாரை எதிர்த்து 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த பெண்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியக் குடியரசில் ஒடுக்கப்படும் வாழ்வை ஏற்காத தலித், பழங்குடி, முஸ்லிம் பெண்களின் வரலாறு இது. 'வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பிபிசி வெளியிடும் கட்டுரைகளின் இரண்டாம் பாகம்

ராணி கெய்டின்லியு - பிரிட்ஷாரின் கட்டாய வரிவசூலுக்கு எதிராகக் குரலெழுப்பிய நாகா பெண்மணி இவர். நேரு "ராணி" என்று கொண்டாடிய பெண்மணி.

பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தலைநகர் இம்ஃபாலில் இருந்து 174 கிலோ மீட்டர் மலைகளினூடே பயணித்தால் டெம்கெங்லாங் மாவட்டத்தை அடைந்து விடலாம். இங்குதான் லொவாங்கௌ என்ற கிராமம் உள்ளது.

ராணி கெய்டின்லியுவைப் பற்றிய தகவல்களை இங்குதான் தேடினோம்.

நாகா பழங்குடி இனமான ராங்மெயினைச் சேர்ந்த ராணி கெய்டின்லியூ தனது சொந்தக்காரரான ஹைபாங் ஜடொனாங்கின் செயல்பாடுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ஜடொனாங் கிறித்தவ மிஷனரிகளின் ஆதிக்கத்திலிருந்து பழம்பெரும் மதமான ஹெரகாவையும் நாகா மக்களின் மரபுகளையும் சடங்குகளையும் காப்பாற்றுவதற்காக தீவிரமான பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.

நாகாக்களின் இடங்களில் பிரிட்டிஷ் குறுக்கிடுவதற்கு எதிராக அவர் குரல் எழுப்பினார். அதற்கு அவர் செலியங்க்ராங் இயக்கம் என்று பெயரிட்டிருந்தார். ஜடொனாங்குக்கு ஆதரவாக ராணி கெய்டின்லியுவும் இந்த இயக்கத்தில் சேர்ந்தார்.

"ஜடொனாங் ஒருவகையில் ராணிக்கு அண்ணன் முறை.

இருவரும் அருகருகே உள்ள கிராமங்களில் வசித்தபடியே ஒன்றாக உழைத்தார்கள்.

வீட்டு வரிக்கு எதிராகவும் கட்டாய வேலைக்கு எதிராகவும் பிரிட்டிஷ் அதிகாரி வந்தால் அவருக்கு இலவசமாக சமைத்துப் போடவேண்டும் என்றும், அவரைத் தோள்மீது சுமந்து செல்லவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒருமுறை ராணி கூட அதை செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் அநியாய உத்தரவுகளைப் போட்டுக்கொண்டேயிருப்பார்கள். பிரிட்டிஷார்கள் நமது நாட்டை அழித்தார்கள், அவர்களை வெளியில் துரத்தியாக வேண்டியிருந்தது. அனைவரும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர், வரி கட்ட மறுத்தனர், சுமைதூக்க மறுத்தனர்.

ஜடொனாங் அப்போதுதான் முதல்முறையாகக் கைது செய்யப்பட்டார்" என்கிறார் ராணி கெய்டின்லியுவின் முன்னாள் காரியதரிசி ராம்குய் நியூமி

பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்பட்டதற்காக ஜடொனாங் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதன்பிறகு இயக்கத்தை எடுத்து நடத்திய ராணி, பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராக ஒரு பெரிய செயலை நடத்திக்காட்டினார்.

"அசாம் துப்பாக்கிகளின் தளம் பற்றி ராணி அறிந்திருந்தார். அவர் அந்த தளத்தைத் தாக்கினாலும் பெரிய தாக்கம் இருக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அசாம் துப்பாக்கி தளத்தைச் சேர்ந்த பிரிட்டிஷார் பலரைக் கொன்றனர், பல கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் அவர்கள் காட்டுக்குள் ஒளிந்துகொண்டார்கள். முதல்முறையாக ஒரு தாக்குதலின்போது துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, ஜடொனாங்கின் காலத்தில் இது நடக்கவில்லை. பிறகு தலைமறைவான ராணி, தன் ஆதரவாளர்களுடன் இணைந்து நாகா தேசிய கவுன்சிலை அமைத்தார்" என இம்ஃபாலை சேர்ந்த டாக்டர். ஹீரா கபுய் தெரிவித்தார்.

ராணி மற்றும் அவரது ஆதரவாளர்களின் தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டிஷ் ராணுவம் அவரைத் தேடியது. ராணி கெய்டின்லியுவைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்குப் பரிசுகளும் வரிவிலக்கும் அறிவிக்கப்பட்டன.

ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 16 வயதான ராணி ஒருவழியாகக் கைது செய்யப்பட்டார்.

"ஷில்லாங், கவ்ஹாத்தி, ஐஸாவல், துரா ஆகிய இடங்களில் ராணி சிறைவைக்கப்பட்டார். அவரது வாழ்நாளில் முக்கிய ஆண்டுகளை சிறையில் கழித்தார். மீண்டும் அவர் கிளர்ந்து எழாமல் இருப்பதற்காக எல்லாவிதமான அடக்குமுறைகளையும் அவமானங்களையும் அவர்மீது செலுத்தியது காலனிய நிர்வாகம். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த நான்ஸி ஆஸ்டன் ராணியை சிறையிலிருந்து விடுவிக்க முயன்றார், ஆனால் அந்த முடிவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை" என்கிறார் இம்ஃபால் கல்லூரியின் வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர் கோன்மெல் லான்பிலுங்க் கபுய்

பண்டிட் ஜவஹர்லால் நேரு ராணியை சிறையில் சந்தித்தார். அவரைப் பற்றி நாளிதழில் ஒரு கட்டுரையையும் எழுதினார். அவரது வீரத்தைப் பாராட்டிப் பேசிய நேரு, அவரை மலைமகள் என்று புகழ்ந்து, "ராணி" என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

ராணியை விடுவிப்பதற்கு நேருவும் முயற்சி செய்தார். ஆனால் அது இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே சாத்தியமானது.

சிறையில் பதினான்கு ஆண்டுகள் கழித்த பிறகு, செலியங்கிராங் குழுவாக நாகாக்களை ஒன்றுதிரட்டிய ராணி, அவர்களது ஹெரகா மதத்திலும் நாகாக்களை மீண்டும் இணையச் செய்தார்.

இந்த செயல்முறையின்போது பல தலைவர்களை சந்தித்தார்.

"நேரு அவருக்கு ராணி என்று பட்டம் கொடுத்தார். அவரது புகழ் பரவியது. செலியங்க்ராங் மக்களுக்காக உழைப்பதையும் இந்திய விடுதலைக்கு முன்பாக பல இடங்களில் சிதறி இருந்த நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மக்களையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வருவதையும் அவர் லட்சியமாக வைத்திருந்தார். பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரிடம் அவர் இதுபற்றி விவாதித்தார். அவரது அரசியல் ரீதியான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை" என்று மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர் முனைவர் மாத்யூ கமாய்

ஒருவர் தனது மரபை இழந்தால் அவரது அடையாளமும் போய்விடும் என்று ராணி நம்பினார்.

விடுதலைக்குப் பிறகு நாகா தேசிய கவுன்சில் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்தியாவிடமிருந்து பிரிவதற்கான கோரிக்கையை வைத்தன.

ஹெரகாவுக்கும் எதிராக அவை குரல் எழுப்பின. சூழல் மோசமானதாக மாறியது. ராணியும் அவரது ஆதரவாளர்களும் தலைமறைவாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் இந்திய அரசின் முயற்சியால் 1966ல் ராணி மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். 1972ல் அவருக்கு பத்ம பூஷன் விருது தரப்பட்டது. முதலில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய ராணி, தன் சமூகத்திலிருந்த பிரிவினைவாதிகளுக்கு எதிராகவும் போராடி ஹெரகாவுடன் தனக்கு இருந்த பிணைப்பைக் காப்பாற்றிக்கொண்டார்.

தன் அடையாளத்தை ஒருபோதும் இழக்க விரும்பாத ராணியின் போராட்டமும் பிரசாரமும் இன்றும் தொடர்கிறது.

செய்தியாளர் : சுஷீலா சிங்

படத்தொகுப்பு : தீபக் ஜாஸ்ரோடியா / டேனி

(வரலாற்றில் பெண்கள் பாகம் 2 தயாரிப்பாளர் சுஷிலா சிங், பிபிசி இந்தி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :