ஜெய்பாய் சௌத்ரி: பெண் கல்வி குறித்து உரக்கப் பேசிய தலித் செயற்பாட்டாளர்
இந்தியக் குடியரசில் ஒடுக்கப்படும் வாழ்வை ஏற்காத தலித், பழங்குடி, முஸ்லிம் பெண்களின் வரலாறு இது. 'வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பிபிசி வெளியிடும் கட்டுரைகளின் இரண்டாம் பாகம்
வரலாற்றில் பெண்கள் முதல் பாகம்: பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட புரட்சியாளர்கள்
ஒரு சுமை தூக்கியாக தன் வாழ்வைத் தொடங்கி, கல்வியாளராக வளர்ந்து, பின் தலித் செயற்பாட்டாளராக உயர்ந்தவர் ஜெய்பாய் செளதரி. அன்று அவர் தூவிய பெண் கல்வி விதைகள் இன்று வேறூன்றிய விருட்சங்களாக வளர்ந்து இருக்கின்றன.
ஜெய்பாய் சௌதரி மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிறந்தவர். ரயில் நிலையத்தில் சுமைதூக்கியாக இருந்தவர் ஒரு ஆசிரியராகவும் தலித் செயற்பாட்டாளராகவும் மாறிய பயணம் மிகவும் கடினமானதாக இருந்தது.
ஆனால் தன் உத்வேகத்தால் எல்லா தடைக்கற்களையும் வாய்ப்புகளாக அவர் மாற்றியிருக்கிறார்.
செயற்பாட்டாளர் கிஸன் பௌஜி பன்ஸோடேவால் நடத்தப்பட்ட பள்ளியில் அவர் முதலில் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் வறுமை காரணமாக அவர் படிப்பை நிறுத்திவிட்டார்.
அவருக்கு ஒன்பது வயதில் திருமணம் நடந்தது. வருமானத்துக்காக அவர் கூலி வேலை செய்ய வேண்டியிருந்தது.
மிஸ் கிரிகரி என்ற மிஷனரி ஒருவர், ஜெய்பாய் சுமைகளைத் தூக்கிக் கொண்டிருப்பதை ஒருநாள் பார்த்தார். ஜெய்பாயின் புத்திசாலித்தனத்தைப் பார்த்த அவர், அவரைப் படிக்க வைக்க உதவி செய்வதாகக் கூறினார்.
இதே மிஸ்.கிரிகரி பின்னாட்களில் அவருக்கு மிஷனரி பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியையும் ஜெய்பாய்க்குக் கொடுத்து உதவினார்.
"தனக்குக் கிடைத்த இந்த உதவி, கல்வியை எதிர்ப்பார்க்கும் பிற தலித் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஜெய்பாய் நினைத்தார். இது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தன் கல்வியை முடித்துவிட்டு அவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால், அவரிடம் கல்வி பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தன் குழந்தைகளுக்கு ஒரு தலித் பெண் ஆசிரியராக இருக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர். தன் குழந்தைகளை அவர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. அதனால் பள்ளி நிர்வாகம் ஜெய்பாயை வேலையை விட்டு நீக்கியது. ஜெய்பாய் உடைந்துபோனார். ஆனால் இதுபோன்ற பெண்குழந்தைகளுக்காக, தானே ஒரு பள்ளியைத் துவக்க வேண்டும் என்று ஜெய்பாய் முடிவெடுத்தார்" என்கிறார் நாக்பூரின் ஹிஸ்லாப் கல்லூரியில் இணைப் பேராசிரியராக இருக்கும் முனைவர் அபிலாஷா ரவுட்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த பெண்களுக்காக சாந்த் சொக்கமேளா பெண்கள் பள்ளியை ஜெய்பாய் தொடங்கினார். பிறகு அந்தப் பள்ளிக்குக் குழந்தைகளை அவர் அழைத்துவரவேண்டியிருந்தது.
"பெண்களைத் திரட்டி அவர் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். பெண் கல்வியைப் பற்றிப் பல பாடல்களை இயற்றினார். தானியங்கள் அரைக்கும்போது அவரும் மற்ற பெண்களும் இந்தப் பாடல்களைப் பாடுவார்கள். வீடு வீடாகச் சென்று, பெண்குழந்தைகளின் அழுக்கைக் களைந்து, தலைசீவிவிடுவார். உங்களுக்குத் தேவையில்லையென்றால் சீருடை அணியவேண்டாம், சுத்தமான ஆடை அணிந்து பள்ளிக்கு வந்தால் போதும் என்று குழந்தைகளிடம் சொல்வார். நயி பஸ்தியில் ஒரு மரத்துக்குக் கீழ் 1922ல் தன் பள்ளியைத் தொடங்கினார்" என்கிறார் ஜெய்பாய் செளதரியின் உறவினர் டாக்டர் ஷில்பா செளதரி
கல்வியோடு அவர் தன் வேலையை நிறுத்திவிடவில்லை. அவர் தீவிரமான தலித் செயற்பாட்டாளராகவும் இருந்தார். ஆனாலும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் அவர் சந்திக்கவேண்டியிருந்தது.
"1937ல் ஆல் இந்தியா பெண்கள் மாநாடு நடந்தது. கல்வியாளராகவும் தலித் செயற்பாட்டாளராகவும் இருந்ததால் ஜெய்பாய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தன் நண்பருடன் ஜெய்பாய் அந்த மாநாட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் பாரபட்சமாக நடத்தப்பட்டார். உணவு இடைவேளையின்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் ஜெய்பாயைத் தனியாக உட்காரவைத்து உணவு சாப்பிடச் சொன்னார்கள். இது ஜெய்பாய்க்கும் அவரது நண்பருக்கும் ஆத்திரத்தைக் கொடுத்தது. ஆதிக்க சாதிப் பெண்கள் எப்போதும் இப்படித்தான் செய்வார்கள் என்பதால் இனிமேல் இதுபோன்ற மாநாடுகளில் கலந்துகொள்வதில்லை என்று அவர்கள் முடிவெடுத்தனர். ஜெய்பாயும் அவரது நண்பர்களும் 1938ல் ஒரு தலித் மாநாட்டை நடத்தினர், தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கு எந்த மாதிரி செயல்பாடுகளை செய்யவேண்டும் என்று அவர்கள் விவாதித்தனர்" என்கிறார் எழுத்தாளர் அனிதா பாரதி.
1922ல் ஜெய்பாய் தொடங்கிய பள்ளி இப்போது உயர்நிலைப் பள்ளியாக இருக்கிறது. ஜெய்பாய் சௌதரி ஞானபீட் பள்ளி என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
"ஜெய்பாய் சௌதரி மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தலித் செயற்பாட்டாளர், ஆசிரியர், முதல் தலித் பள்லி முதல்வர், முதல் கூலி, ஏன் தலித் பெண்ணிய செயல்பாட்டின் முன்னோடி" என கூறுகிறார் அனிதா பாரதி
"ஜெய்பாயின் முயற்சியால்தான் பெண்களின் பள்ளிப்படிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்தது. ஆயிரக்கணக்கான பெண்களின் மனத்தில் அவர் கல்விக்கான முக்கியத்துவத்தைப் பதியவைத்தார். அது ஒரு பெரிய மரமாக இப்போது வளர்ந்து நிற்கிறது. அவரது மாணவிகள் ஒருநாளும் தங்கள் பெண்குழந்தைகளைக் குறைவாக மதிப்பிட மாட்டார்கள். ஜெய்பாய் தனது சொந்த மருமகளுக்கே படிக்கவும் ஆசிரியராக இருக்கவும் சுதந்திரம் கொடுத்தார். தனது மாணவிகள் கல்வி கற்கவேண்டும் என்றும் ஆசிரியராக இருக்கவேண்டும் என்றும் அவர் விரும்பினார். பல தலைமுறைகளுக்குப் பின்னர் இன்றும் அவரது மாணவிகள் அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்கின்றனர்" என பெருமையாகக் கூறுகிறார் ஷில்பா.
செய்தியாளர் - அனகா பாதக்
படப்பிடிப்பு - பிரவீன் முதல்கர், துஷர் குல்கர்னி
படத்தொகுப்பு - தீபக் ஜஸ்ரோட்டியா, டேனியல்
வரைபடங்கள் - கோபால் ஷூன்ய
(வரலாற்றில் பெண்கள் பாகம் 2 தயாரிப்பாளர் சுஷிலா சிங், பிபிசி இந்தி)
பிற செய்திகள்:
- கொண்டாடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்; கோபப்பட்ட கரூர் ஆட்சியர்
- குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன அமைச்சர்: கோபமடைந்த சகாக்கள்
- சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - பெற்றோர் அறிய வேண்டியவை
- இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?
- சீமான் vs லிங்குசாமி: மீண்டும் வெடித்த 'பகலவன்' கதை சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்