சேலம் மாநகரில் சோலார் பேனல் உதவியோடு கூப்பிட்ட இடத்துக்கு சென்று பஞ்சர் போடும் தொழிலாளி

- எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
காலத்திற்கேற்ப தொழிலில் புதுமையை புகுத்தி தனது இருசக்கர வாகனத்தில் சோலார் சாதனம் பொருத்தி உள்ளார் சேலத்தை சேர்ந்த டயர் பஞ்சர் தொழிலாளி கண்ணன்.
அதன் மூலம் பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை பேட்டரியில் சேகரித்துவைத்து தன்னை அலைபேசியில் அழைப்பவர்களுக்கு உடனடியாக சென்று பஞ்சர் ஒட்டி கொடுக்கிறார்.
கண்ணன் எவ்வாறு செயல்படுகிறார் ?
சேலம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த கண்ணன், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வண்டி டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் சிறிய அளவிலான பஞ்சர் பட்டறை ஒன்றையும் வைத்திருக்கிறார்.
வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென வண்டி பஞ்சர் ஆகி நின்று விட்டால் உடனே அழைப்பது கண்ணனைத் தான்.

சேலத்தில் அந்த அளவுக்கு இவர் மொபைல் நம்பர் பிரபலம். மொபைல் போனில் அழைத்தால் உடனே வண்டி இருக்கும் இடத்திற்கே சென்று பஞ்சர் போட்டு திக்கு தெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவுவது இவரது பாணி.
இப்படி, பஞ்சர் ஒட்டி கொடுப்பதற்கான கருவிகள் மற்றும் காற்றடிப்பதற்கான பம்ப் ஆகியவற்றை தன் பைக்கில் எடுத்துச் செல்வார் இவர். பஞ்சர் ஒட்ட காற்றடிக்கும் பம்ப்பை காலால் இயக்கும்போது இவருக்கு கடுமையான கால் வலி ஏற்பட்டுள்ளது .
அதிலிருந்து விடுபட நவீன உத்தியை கையாண்டுள்ளார். அதன்படி தனது இருசக்கர வண்டியில் சோலார் சாதனம் பொருத்தி அதன்மூலம் பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை பேட்டரியில் சேகரித்துக் கொள்வார்.
பின்னர் வெளியே சென்று பஞ்சர் போடும்போது, பேட்டரியில் உள்ள மின்சாரத்தை கொண்டு சிறிய அளவிளான கம்ப்ரசர் மோட்டாரை இயக்கி அதிலிருந்து டயர்களுக்கு காற்றடித்துக் கொடுப்பார்.
இந்த முறை நல்ல பயனளித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சோலார் சாதனத்தை பயன்படுத்தி பஞ்சர் போடும் தொழிலை செய்துவருகிறார்.

தனக்கு தகவல் கிடைத்தவுடன் இரவு நேரத்தில்கூட உடனடியாக சென்று வழியில் நிற்கும் வாகனங்களுக்கு பஞ்சர் போட்டு தருகிறார். அப்போது தேவைப்படும் வெளிச்சத்திற்காக இவரது இருசக்கர வாகனத்தில் எல்இடி விளக்கும் பொறுத்தியுள்ளார்.
எளிய தொழில்நுட்பத்தைக் கொண்டு தன் வேலையில் புத்தாக்கத்தைப் புகுத்தி தவிக்கும் பலருக்கும் உதவும் பணியை செய்துவரும் கண்ணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"வழியில் வண்டி நின்று போனவர்கள் போன் பண்ணி கூப்பிட்டால் உடனே சென்று அது எந்த வகையான வண்டி என பார்த்து டியூப், டியூப்லெஸ் எதுவாக இருந்தாலும் அரைமணிநேரத்தில் பஞ்சர் சரி செய்து கொடுத்து வருகிறேன்.
என்னிடம் சிறிய அளவில் மோட்டார் கம்பரசர் உள்ளது. அதன் மூலமாக 80 பவுண்ட் வரை காற்று பிடிக்க முடியும். சோலார் பேனல் உள்ளதால் அதன் மூலம் பேட்டரியில் மின்சாரம் சேமித்து, இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இரவு பகலானாலும் என்னை அழைப்பவர்களுக்கு உடனடியாக சென்று பஞ்சர் ஒட்டி கொடுத்து வருகிறேன்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்















