You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓட்ட நாயகன் ''சிறுத்தை' மீண்டும் இந்தியாவில் - கண்டம் கடந்த முயற்சி
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்தியா செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
எல்லாம் திட்டமிட்ட படி நடக்கும்பட்சத்தில், நவம்பர் மாதத்தில், இந்தியாவின் ஒரு பரந்த தேசிய உயிரியல் பூங்காவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து சுமார் 8,405 கிலோ மீட்டர் பயணம் செய்து ( 5,222 மைல்கள்) ஐந்து ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்த எட்டு சிறுத்தைகள் வரவுள்ளன.
உலகிலேயே நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய இந்த விலங்கு, இந்தியாவில் அழிந்து போய் அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் வரவிருக்கிறது.
"இப்போது, இந்தப் பூனை இன விலங்கை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான வளங்களும் வாழ்விடங்களும் நம் நாட்டிலும் உள்ளன," என்கிறார் இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் டீனும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிபுணர்களில் ஒருவருமான யத்வேந்திரதேவ் ஜாலா.
ஒரு பெரிய மாமிச பட்சிணி, பாதுகாக்கப்பட வேண்டிய காரணத்துக்காக, ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு மாற்றப்படுவது இதுவே முடல் முறை என்றும் அவர் கூறுகிறார்.
கறுப்பு நிறப் புள்ளிகள் உடலெங்கும் பரவியிருக்க, கண்களை வெப்பத்திலிருந்து காக்க, கண்ணீர் வழிவது போன்ற கறுப்பு நிறக் கோடுகளுடன் கூடிய மெலிதான உருவ அமைப்பு கொண்ட அழகான விலங்கு, தனது உணவைத் தேடி, மணிக்கு 70 மைல் (112 கிமீ) வேகத்தில் ஓடக்கூடிய திறன் வாய்ந்தது. பூனை வகையைச் சேர்ந்த இந்த விலங்கு, பதுங்கிப் பாய்ந்து உணவை வேட்டையாடும் பழக்கமுடையது.
உலகின் 7,000 சிறுத்தைகளில் பெரும்பாலானவை இப்போது தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானாவில் காணப்படுகின்றன. அருகி வரும் உயிரினமாகக் கருதப்படும் இது இந்தியாவில் கடைசியாக 1967-68ல் காணப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அவற்றின் எண்ணிக்கை 1900 வாக்கிலேயே பெருமளவில் குறைந்துவிட்டது.
சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மூன்று இடங்கள் - ஒரு தேசிய பூங்கா மற்றும் இரண்டு வனவிலங்கு சரணாலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று டாக்டர் ஜாலா கூறினார்.
முதல் எட்டு சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு வரும். இதில் மான் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்ற ஏராளமான இரைகள் உள்ளன. ராஜஸ்தானின் முகுந்திரா மலைப்பகுதிகளில் ஒரு புலிகள் காப்பகத்தை வனவிலங்கு வல்லுநர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்தியாவில் சிறுத்தைகள்
16 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் ஆட்சியின் போது தான் இந்தியாவில் முதன்முதலில் சிறுத்தைகள், சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. அவரது தந்தை அக்பர், அவரது காலத்தில் 10,000 சிறுத்தைகள் இருந்தன என்றும் அவற்றில் 1,000 சிறுத்தைகள் அரண்மனையிலேயே இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆம் நூற்றாண்டில் விலங்குகள் விளையாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்டன. 1799 மற்றும் 1968 க்கு இடையில் குறைந்தது 230 சிறுத்தைகள் வனப்பகுதியில் இருந்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அழிந்துபோன ஒரே பெரிய பாலூட்டி இனமாகும் இது.
வேட்டையாடுதல், குறைந்து வரும் வாழ்விடம் மற்றும் கரு மான், கெஸில் மற்றும் முயல் போன்ற இரைகள் போதுமான அளவு கிடைக்காதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த விலங்கு அருகிப் போனது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளைக் கொன்றதால், சிறுத்தைகளை வேட்டையாடப் போட்டி கூட நடத்தப்பட்டது.
1950 களில் இருந்து இந்தியா மீண்டும் இவற்றை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1970 களில் அப்போது 300 சிறுத்தைகள் இருந்த இரானிலிருந்து கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சி, அந்த நேரத்தில் இரானின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதால் தோல்வியடைந்தது.
விலங்குகளை மீண்டும் அறிமுகம் செய்வது எப்போதும் அபாயங்கள் நிறைந்த முயற்சிதான். ஆனால் அவை அரிதானவை அல்ல. 1980களின் பிற்பகுதிகளில் சிறுத்தைகள் அருகிப்போன மலாவியில், 2017 ஆம் ஆண்டில், நான்கு சிறுத்தைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது அவற்றின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
இடத்துக்குத் தக்கபடி தங்களைப் பழக்கிக்கொள்ளக்குடிய விலங்கு சிறுத்தை என்ற நல்ல செய்தியை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
60% சிறுத்தைகள் வாழும் தென்னாப்பிரிக்காவில், பாலைவனங்கள், மணல் காடுகள், புல்வெளிகள், வனப்பகுதிகள் மற்றும் மலைகள் ஆகியவற்றில் சிறுத்தைகள் வாசம் செய்கின்றன.
வெப்ப நிலை மைனஸ் 15 டிகிரி இருக்கும் வடக்கு முனையிலும் 45 டிகிரி கொளுத்தும் வெயில் கொண்ட மலாவியிலும் வசிக்கும் திறன் பெற்றவை சிறுத்தைகள்.
"போதுமான இரை கிடைக்கும் வரை, வாழ்விடம் ஒரு பொருட்டல்ல. அவை வேட்டையாடும் விலங்குகள் அதிக அளவில் வாழும் இடங்களில் உயிர்வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. சிங்கங்கள், சிறுத்தைப் புலிகள் புள்ளி ஹைனாக்கள் மற்றும் காட்டு நாய்களுடன் இணைந்து வாழ்கின்றன," என்று தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிறுத்தை பாதுகாவலர் வின்சென்ட் வான் டெர் மெர்வே என்னிடம் கூறினார்.
ஆனால் வேறு பல கவலைக்குரிய அம்சங்கள் உள்ளன. சிறுத்தைகள் பெரும்பாலும் கால்நடைகளை வேட்டையாட விவசாய நிலங்களுக்குள் நுழைந்து மனித-விலங்கு மோதலைத் தூண்டுகிறது. மிக முக்கியமாக, இவை மற்ற வேட்டையாடும் விலங்குகளால் குறி வைக்கப்படுகின்றன. இரைக்கான போட்டி தான் இதற்குக் காரணம்.
"அவை மென்மையான விலங்குகள்" என்கிறார் டாக்டர் ஜாலா.
"வேகத்திற்குப் பெயர் போன இவை, மோதலைத் தவிர்க்கின்றன."
தென்னாப்பிரிக்காவில், காட்டுச் சிறுத்தைகளின் இறப்புகளில் பாதிக்கு சிங்கங்களும் ஹைனாக்களுமே காரணமாகின்றன. மனிதத் தொடர்பில்லாத நாய்களின் கூட்டமும் சிறுத்தைகளைத் தாக்கும் என்று அறியப்படுகிறது.
"சிறுத்தைகள் எந்தவொரு பெரிய பூனையின விலங்கையும் விட வேகமாக ஓடக்கூடியதாக இருந்தாலும், அவற்றின் இரையை மற்ற விலங்குகள் பறித்துச் செல்வதைத் தடுக்கத் தவறிவிடுகின்றன. இவற்றின் குட்டிகளையும் கூட சிங்கம் போன்ற மற்ற பெரிய விலங்குகள் கவந்து சென்று விடுகின்றன. என்று வனவிலங்கு வரலாற்றாசிரியர் மகேஷ் ரங்கராஜன் கூறுகிறார்.
அதனால்தான், சிறுத்தைகள் வேலி அமைக்கப்பட்ட இருப்புக்களில் செழித்து வளர்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். "வாழ்விட இழப்பு மற்றும் எதிர்த் தாக்குதல்களால், திறந்த வெளியில் இருக்கும் சிறுத்தைகள் எண்ணிக்கையில் வேகமாகக் குறைந்து வருகின்றன" என்று வான் டெர் மெர்வே கூறுகிறார்.
"இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் வேலியில்லாதவை. இது மனித-வனவிலங்கு மோதலுக்குச் சாத்தியமாகிறது.
வான் டெர் மெர்வே, ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியமான இடங்களை மதிப்பீடு செய்தபோது, குனோ தேசிய பூங்கா இவற்றுக்குச் சாதகமான வாழ்விடமாக இருப்பதைக் கண்டார்.
730 சதுர கி.மீ (282 சதுர மைல்) பூங்காவில் கலப்பு வனப்பகுதி-புல்வெளி இரண்டும் கலந்த சூழல், தென்னாப்பிரிக்காவை ஒத்து இருப்பதைக் கண்டார். இங்கு சிங்கங்கள் இல்லை என்றாலும் சிறுத்தைப் புலிகள் ஒரு கவலைக்குரிய அம்சம்.
வான் டெர் மெர்வே, "இந்தியாவில் இவற்றுக்கு சிறந்த இடம், முகுந்த்ரா மலைகளில் உள்ள வேலி அமைக்கப்பட்ட புலிகள் சரணாலயம் தான்," என்று கூறுகிறார். இங்கு சிறுத்தைகளைத் தாக்கக்கூடிய மிருகங்கள் அதிக அளவில் இல்லை.
"இது ஒரு மிகவும் பாதுகாப்பான இடம் என்பது உத்தரவாதமான ஒன்று என்பது எனது கணிப்பு. இங்கு இனப்பெருக்கம் செய்து, மற்ற பாதுகாப்பான இடங்களுக்கும் அவற்றைக் கொண்டு செல்லலாம்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்தியாவின் முன்னணி விலங்கு ஆர்வலர்கள் இது குறித்து ஐயம் கொண்டுள்ளனர்.
சிறுத்தைகளுக்கு பெரிய பரப்புகள் தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள் - 5,000 முதல் 10,000 சதுர கி.மீ வரை உள்ள இடங்கள் தான் சிறந்தவை என்பது இவர்கள் கருத்து.
இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு நிபுணர்களில் ஒருவரான டாக்டர் கே. உல்ஹாஸ் கரந்த், "சிறுத்தைகளுக்கு, மக்கள் நடமாட்டமில்லாத, நாய்கள் இல்லாத சிறுத்தைப் புலிகளோ புலிகளோ இல்லாத, காட்டு விலங்கு இரைகள் அதிகமுள்ள இடங்கள் தான் மிகச் சிறந்த சூழல்," என்று கூறுகிறார்.
"இந்தியாவில் சிறுத்தைகளின் முன்னாள் வாழ்விடங்கள் நிலம் இல்லாததால் சுருங்கி வருகிறது. இந்த மறு அறிமுகத்தின் நோக்கம் சிறுத்தைகள் காடுகளில் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவதாக இருக்கவேண்டும். வெறுமனே சில சிறுத்தைகளைக் கொண்டு இங்கு விடுவது பயனளிக்காது. இந்தத் திட்டம் தோல்வியடையும்," என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் டாக்டர் ஜாலா போன்ற வன விலங்கு வல்லுநர்கள் இந்தியாவின் புல்வெளிகளின் "முதன்மை இனங்கள்" மீண்டும் திரும்புவது குறித்து உற்சாகமாக இருக்கிறார்கள்.
எந்த மறு அறிமுகத்திற்கும், குறைந்தது 20 விலங்குகள் தேவை. "அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 சிறுத்தைகளை இறக்குமதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்று ஜாலா கூறுகிறார்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் ஏற்படுவதற்கு நீரிழிவு காரணமா?
- 400 கால்பந்து திடல்களின் அளவில் 8 கோடி டன் மண் கொண்டு செயற்கை தீவு: டென்மார்கில் நிறைவேறிய சட்டம்
- இந்தியாவில் யுரேனியம் விற்க கள்ளச்சந்தை? - கவலை எழுப்பும் பாகிஸ்தான்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
- ஒலியைவிட வேகமாக செல்லும் பயணிகள் விமானம்: அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டம்
- கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்