சேலத்தில் சம்பவம்: மகன் இறந்த சோகத்தில் கொரோனா நோயாளி தற்கொலை

பட மூலாதாரம், Getty Images
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயது முதியவர் தற்கொலை கொண்டுள்ளார். இவரது மகன் சில நாட்களுக்கு முன் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தார்.
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான சுப்பிரமணி கொரோனா தொற்று காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
கடந்த 11ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கழிப்பறைக்குச் சென்று சுப்பிரமணி நீண்ட நேரமாகியும் படுக்கைக்கு திரும்பவில்லை. இதுகுறித்து தகவலறிந்த செவிலியர்கள் காவல்துறையினர் உதவியோடு தேடிப் பார்த்தபோது கழிப்பறையில் தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சடலத்தை மீட்ட காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியின் மகன் முருகேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த வேதனையில் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் .
பயிற்சி செவிலியர்களுக்கு தொற்று; படுக்கை கிடைக்கவில்லை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள செவிலியர் மாணவியருக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதே கல்லூரியில் செவிலியர் படிப்பு 4-ம் ஆண்டு பயிலும் சுமார் 50 மாணவிகள் தற்போது கொரோனா சிகிச்சை பிரிவில் பயிற்சி கால சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் முககவசம் கவச உடை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்றும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை அணுகியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மாணவியர் வேதனை தெரிவிக்கின்றனர் .
இது மட்டுமன்றி செவிலியர் மாணவியர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லை என்று கூறிவிட்டதால் அவர்களை தங்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள் :
- காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் யார்? - சபாநாயகர் முன்னிலையில் சர்ச்சை
- தாக்டே புயல்: குஜராத், டையூ கடலோரப் பகுதிளுக்கு புயல் எச்சரிக்கை ; தமிழ்நாட்டில் மழை பெய்யுமா?
- இஸ்ரேலுக்கு தலைவலி தரும் ஹமாஸ்: காசாவை ஆளும் ஆயுதக் குழுவின் வரலாறு
- தமிழ்நாட்டில் இன்று முதல் தீவிரமாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்: 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












