You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் - 6 முக்கிய முடிவுகள்
தமிழ்நாடு முதலமைச்சராக மே 7-ம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் நடந்தது.
அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்யவேண்டும். மருத்துவ ஆக்சிஜன் முறையாக பயன்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். எந்த காரணம் கொண்டும் மருத்துவ ஆக்சிஜன் வீணாகக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
எல்லா மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
"கொரோனாவால் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கூறியுள்ளார் அவர்.
முன்னதாக, கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள 2 வார கால முடக்க நிலை குறித்து ஓர் அறிக்கையில் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், "பொது மக்கள் அச்சம் தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி முழுமையான விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கினால், நாம் விரைவில் இந்தக் கடுமையான சோதனையிலிருந்து வெளிவந்து, ஆக்கபூர்வமாக நற்பணிகள் ஆற்ற முடியும். கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஒளியின் வேகத்தில் எடுக்கப்படும் என்பதை உறுதிகூற விரும்புகிறேன். தமிழகத்தில் வெளிப்படையான ஆட்சி நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ஆறு முடிவுகள் :
கொரோனா தொற்று பரவலை குறைக்க கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும். ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே பரவலை குறைத்து, இறப்புகளை கட்டுப்படுத்தலாம்.
மருத்துவமனைகளில் நோயாளிகள், ,மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான வசதி, தரமான உணவு கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். எல்லா நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை தரப்படவேண்டும்.
பல நெருக்கடிகளுக்கு இடையில் தமிழகத்தில் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ ஆக்சிஜன் வீணாகாமல், முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.
சென்னை,கோவை, மதுரை, நெல்லை,சேலம்,திருச்சி என பல பகுதிகளில் ரெம்டெசிவர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விற்பனையை கண்காணிப்பதோடு, கள்ளச்சந்தையில் அந்த மருந்து விற்பனை ஆவதை தடுக்கவேண்டும்.
தகுதியுள்ள பயனாளிகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். எல்லா மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்களை நடத்தி தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
மருத்துவத்துறை, காவல்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சி துறைகள் என எல்லா துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தடுப்பு நடவடிக்கை வெற்றி பெறும். அதனால் ஒருங்கிணைந்து ஆய்வுகூட்டம் நடத்தி அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.
சென்னை மாநகராட்சி ஆணையர்
இதனிடையே, சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு, ககன்தீப் சிங் பேடி அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சுனாமி பேரிடரை சிறப்பாகக் கையாண்டு புகழ் பெற்றவர் ககன்தீப் சிங் பேடி.
பிற செய்திகள் :
- கொரோனா சிகிச்சைக்கு டிஆர்டிஓ தயாரித்த புதிய மருந்து: இந்திய அரசு ஒப்புதல்
- வெ. இறையன்பு: தமிழகத்தின் புதிய தலைமைசெயலர் - யார் இவர்?
- கொரோனா: ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் என்றால் என்ன, இது உயிரைக் காப்பாற்றுமா?
- உங்களால்தான் ஹிட்லர் போல ஆகிவிட்டேன் என்றார் கமல்: ஆர். மகேந்திரன்
- கொரோனா அலை: தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு, டாஸ்மாக், அம்மா உணவகம் நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்