You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவை இன்று (மே 07 வெள்ளிக்கிழமை) காலையில் பதவியேற்கவிருக்கும் நிலையில், புதிய அமைச்சரவையின் பட்டியல் வியாழக்கிழமை வெளியானது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டில், 34 பேர் அமைச்சர்களாக இருக்க முடியும். அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட 34 பேர் இந்த அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவையில், பழையவர்களுக்கும் புதியவர்களுக்கும் கிட்டத்தட்ட சமமான இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டப்பேரவையிலேயே வயதில் மிக மூத்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் துரைமுருகன் தற்போது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவருக்கு நீர்வளத் துறை அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பொதுப் பணித் துறையிலும், சட்டத் துறையிலும் அமைச்சராக இருந்தார் துரைமுருகன். இந்த முறை பொதுப் பணித் துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு நீர் வளத்திற்கு மட்டும் ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அந்தப் பொறுப்பு துரைமுருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் துறை ஏன் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளித்துள்ள மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு நீர்வளத் துறை தனி அமைச்சகமாக உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தங்குதடையின்றி விவசாயிகளுக்கு நீர் கிடைப்பதற்கும் நிலத்தடி நீரை விருத்தி செய்யவும் நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முக்கியத் துறையாக இத்துறை செயல்படும் என தெரிவித்திருக்கிறார்.
அமைச்சரவையில் இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் கே.என். நேருவுக்கு முனிசிபல் நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, நீர் வழங்கல் துறை வழங்கப்பட்டிருக்கிறது. பொதுப் பணித்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டதைப் போல உள்ளாட்சித் துறையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு நகர்ப்புற வளர்ச்சிக்கு கே.என். நேரு நியமிக்கப்பட்டிருக்கிறார். 1989லிருந்து தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அமைச்சராக இருந்திருக்கிறார் கே.என். நேரு. இதற்கு முன்பாக, மின்சாரத்துறை, பால்வளத்துறை, செய்தித்துறை, தொழிலாளர் நலத்துறை, உணவுத் துறை, கூட்டுறவுத் துறை,போக்குவரத்துத் துறை, விவசாயத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்திருக்கிறார்.
இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஐ. பெரியசாமி இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர். அவருக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2006 -11 காலகட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் வீட்டு வசதித் துறையின் அமைச்சராக இருந்தார் பெரியசாமி.
கே. பொன்முடிக்கு எதிர்பார்த்ததைப் போலவே உயர்கல்வித் துறை அளிக்கப்பட்டிருக்கிறது. இவரும் 1989 முதல் தி.மு.க. அமைச்சரவைகளில் பங்கேற்றவர். இதற்கு முன்பாக, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சராக இவர் பதவிவகித்திருக்கிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலுவுக்கு பொதுப் பணித் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தத் துறையில் இருந்து நீர்வளத் துறை பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் இவரது துறையின் கீழ் வரவிருக்கின்றன.
புதிய தி.மு.க. அமைச்சரவை குறித்து பேச்சுகள் எழுந்தபோது அதிகம் எதிர்பார்ப்புடன் விவாதிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று தங்கம் தென்னரசு. கடந்த முறை பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து அவர் செய்த சீர்திருத்தங்களும் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அவருக்கு இந்த முறை தொழில்துறை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு பெருமளவில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கவும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் முன்னுரிமை கொடுக்கும் நோக்கில் அவருக்கு இந்தத் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, கடந்த முறை தனி அமைச்சகமாக இருந்த தமிழ் கலாசாரம், தொல்லியல் துறை ஆகியவையும் தங்கம் தென்னரசுவுக்கே அளிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடந்துவரும் நிலையில், தொல்லியல் துறை இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வீட்டுவசதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ். முத்துச்சாமி தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1977ல் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 8 ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்தார். 2010ல் தி.மு.கவிற்கு வந்த அவருக்கு தற்போது மீண்டும் அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து தி.மு.கவுக்கு வந்த ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் முதல் முறையாக தி.மு.கவின் அமைச்சரவையில் இடம்பெறுகிறார். அவருக்கு போக்குவரத்துத் துறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இவர் பொதுப் பணித் துறை அமைச்சராகவும் இருந்தார். பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக் கட்சி ஒன்றை நடத்திய இவர், 2001ல் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். பிறகு 2006ல் கட்சியை தி.மு.கவில் இணைத்தார். பிறகு மீண்டும் அ.தி.மு.கவில் சேர்ந்து 2009ல் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ப. சிதம்பரத்திடம் தோற்ற பிறகு மீண்டும் தி.மு.கவில் இணைந்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்கும் பதவி வழங்கப்படாத நிலையில், இந்த முறை அம்மாவட்டத்தைச் சேர்ந்த இளித்துறை ராமச்சந்திரனுக்கு வனத்துறை அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி. செந்தில் பாலாஜி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குச் சென்று, பிறகு தி.மு.கவில் இணைந்தார். அவருக்கு தற்போது மிக முக்கியமான அமைச்சகமான மின்துறை, மதுவிலக்குத் துறை அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை நகரத்தின் மேயராக இருந்தபோது தனது செயல்பாடுகளுக்காக மிகவும் கவனிக்கப்பட்ட மா. சுப்பிரமணியன் முதல் முறையாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பெரிய அளவில் பரவியிருக்கும் நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ்.எஸ். சிவசங்கர், தனது கட்சிச் செயல்பாடுகளுக்காகவும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் அறியப்பட்டவர். அவரும் முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகிறார்.
தமிழ்நாடு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் சிக்கித் தவிக்கும் நிலையில், நிதித் துறை அமைச்சர் பொறுப்பு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர் நலத் துறை தற்போது மனிதவளத் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அந்தத் துறையும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மிகச் சவாலான ஒரு காலகட்டத்தில் அந்தத் துறைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார் பழனிவேல் தியாகராஜன்.
செஞ்சி கே.எஸ். மஸ்தான் சிறுபான்மையினர் நலத் துறைக்கும் வெளிநாடு வாழ் தமிழர் துறைக்கும் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வெளிநாடு வாழ் இந்தியர் துறை என்பது வெளிநாடு வாழ் தமிழர் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது இந்தத் துறையின் முக்கியப் பொறுப்பாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியத் துறையான பள்ளிக் கல்வித் துறை அமைச்சரவைக்குப் புதிய முகமான மகேஷ் பொய்யாமொழிக்குத் தரப்பட்டுள்ளது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெரிதாக யாருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.வி. மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுற்றுச்சூழல் துறை என அழைக்கப்பட்ட துறை தற்போது காலநிலை மாற்றம் என்ற வார்த்தைகளுடன் சேர்த்து அழைக்கப்படுகிறது.
காலநிலை மாற்றம் மிக முக்கியமான அபாயமாக உருவெடுத்து வருவதால், அதில் கவனம் செலுத்த வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் உட்பட பல சூழல் அமைப்புகள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்" என இந்தப் பெயர் மாற்றம் குறித்து மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சி.வி. மெய்யநாதன், தனது புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து அமைப்புகள் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமென கூறிவரும் நிலையில் இந்து அறநிலையத் துறையின் அமைச்சராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. சென்னையைச் சேர்ந்த சேகர் பாபுவுக்கு அந்தத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு வந்த சேகர் பாபு தீவிரமான இறை நம்பிக்கையாளர் என்பதால், சூழலைச் சமாளிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தத் துறை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைச்சரவையில் பெரும்பாலான மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து மு.க. ஸ்டாலின், சேகர் பாபு, மா. சுப்பிரமணியம் என மூன்று பேர் அமைச்சர்களாகியுள்ளனர். கடலூரில் இருந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் என இருவரும் திண்டுக்கல்லில் இருந்து ஐ. பெரியசாமி, சக்ரபாணி என இருவரும் மதுரையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி என இருவரும் அமைச்சர்களாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மனோ தங்கராஜ் மட்டும் அமைச்சராகியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலிருந்து தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் என இருவரும் புதுக்கோட்டையிலிருந்து ரகுபதி, சிவ. மெய்யநாதன் என இருவரும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் என இருவரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் இந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி. கணேசன், டாக்டர் மதிவேந்தன் (ராசிபுரம்), தாராபுரத்தில் பா.ஜ.க. தலைவர் எல். முருகனைத் தோற்கடித்த கயல்விழி செல்வராஜ் ஆகியோர்தான் அந்த மூன்று பேர். இதில் கயல்விழி, டாக்டர் மதிவேந்தன் ஆகிய இருவருமே முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகியிருக்கிறார்கள். சிறுபான்மை இனத்தைப் பொறுத்தவரை, நாசர், செஞ்சி மஸ்தான் என இரண்டு பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இந்த அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. ராதாபுரம் அப்பாவு அல்லது அப்துல் வஹாப் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்மாவட்டத்திலிருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அதேபோல, சேலத்தில் எல்லா தொகுதிகளிலும் தி.மு.க. தோற்றுவிட்ட நிலையில், வெற்றிபெற்ற ஒரே நபரான ராஜேந்திரன் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கும் இடம் கிடைக்கவில்லை.
கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இருந்தும் யாரும் இடம்பெறவில்லை. கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் இடம்பெற்றுள்ளனர். 2006ல் மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
- `மக்கள் நம்பிக்கையை ம.நீ.ம இழந்தது ஏன்?’ காரணங்களை பட்டியலிடும் டாக்டர் மகேந்திரன்
- தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்
- `கமல் மாறுவார் என்ற நம்பிக்கை இல்லை' - பதவி விலகிய மகேந்திரன் குமுறல்
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
- ஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்