தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: “ அதிமுக அமைச்சர் கே. சி. கருப்பணனுக்கு எங்கள் ஓட்டு இல்லை” - ஒரு தமிழக கிராமத்தின் தேர்தல் முன்னெடுப்பு

- எழுதியவர், ஞா. சக்திவேல் முருகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்களும், கட்சிகளும் தங்கள் தரப்பில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். கட்சிகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.
அப்படி தமிழகத்தில் ஒரு கிராமத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எதிராக தங்கள் வீட்டுக் கதவுகளில் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அமைச்சர் கருப்பணன் மீது, இந்த கிராம மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? என்ன பிரச்னை?
ஈரோடு மாவட்டத்தின் பவானி சட்டமன்ற தொகுதியில், அய்யன்வலசு என்கிற பெயரில் ஒரு குக்கிராமம் இருக்கிறது. அக்கிராமத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இத்திட்டம் அக்கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில், வள்ளியம்மாள், நாகேஸ்வரி அம்மாள் ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இருவருக்கும் அரசு தரப்பிலிருந்து எந்த வித முன்னறிவிப்புமின்றி, அவர்கள் நான்கு, ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வந்த வீடுகள் இடிக்கப்பட்டு, அவர்களின் நிலத்தில் அரசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி, மருத்துவ வசதிகள் என மற்ற பல கோரிக்கைகளைக் கேட்டும் செவி சாய்க்காத அதிமுகவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணண், இத்திட்டத்தைக் கொண்டு வர முனைப்போடு இருக்கிறார் என்கிறார்கள் கிராம மக்கள். மேலும் அடுக்குமாடி குடியிருப்பை, விவசாய நிலத்துக்கு நீர் பாய்ச்ச உதவும் கால்வாயை மறித்துக் கட்டவிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
இதனால் தான் அக்கிராம மக்களில் பலரும் தங்கள் வீட்டுக் கதவுகளில் "அடுக்குமாடி குடியிருப்பைக் கொண்டு வந்து விவசாயத்தை அழிக்கத் துடிக்கும் கே.சி. கருப்பணனுக்கு எங்கள் ஓட்டு இல்லை" என ஸ்டிக்கர்களை ஒட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது குறித்து பிபிசி தமிழ் சார்பாக ஊர் மக்களிடம் பேசினோம்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் நாகேஸ்வரன் கூறுகையில் "எங்கள் கிராமத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு என்பது தேவையில்லாத ஒன்று. மேலும், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு அமைய உள்ள இடம் ஊரின் ஒதுக்குப் புறமான பகுதி. இந்த பகுதியில் குடியிருப்பு பகுதி அமைப்பதற்கு எங்களிடம் கருத்துக்கேட்பு எதையும் நடத்தவில்லை. ஏற்கெனவே இப்பகுதியில் தங்கள் வீடுகளில் வசித்தவர்களுக்கும் எவ்வித முன் அறிவிப்புமின்றி வீடுகளை இடித்துத் தள்ளி, அடுக்குமாடி கட்டுவதற்கான வேலையை வேகமாகத் துவங்கி விட்டனர்," என்றார்.

"நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்று முடிவெடுத்தோம். அடுக்குமாடி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளோம். தீர்ப்பு வரும் வரை தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் எங்கள் ஊரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அமைச்சருக்கு எங்களது ஓட்டு இல்லை என முடிவெடுத்துள்ளோம்," என்றார் இளைஞர் செளந்தரம்.
எங்கள் கிராம மக்களும், அருகில் உள்ள கிராம மக்களும் இணைந்து இங்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வேண்டாம் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர் எதையும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் எங்கள் ஓட்டு அமைச்சர் கருப்பணனுக்கு இல்லை என ஊர் கூடி முடிவெடுத்து ஒவ்வொரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிக்கர் ஒட்டியுள்ளோம்" என்றார்.
அக்கிராமத்தில் வசிக்கும் பெரியவரான ராமசாமி "அடுக்குமாடிக் குடியிருப்பு அமையவுள்ள இடத்துக்கு அருகிலேயே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டுமென கடந்த பத்து ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். ஆனால், இதற்கு எல்லாம் செவி சாய்க்காத அமைச்சர் எங்கள் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதில் மட்டும் குறியாக உள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு கட்டட பணி நடக்கும் பகுதியில்தான் வயலுக்குச் செல்லும் வாய்க்கால் உள்ளது. இதை மறித்துத்தான் இந்த குடியிருப்பே கட்டவுள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்தால் வயல்பகுதிக்கு கழிவுநீர்தான் பாயும். இதை தெரிந்தே தான் சுற்றுச்சூழல் அமைச்சர் எங்கள் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுகிறார்" என்றார்.
அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் பணியால் தங்கள் வீட்டை இழந்துள்ள வள்ளியம்மாளும், நாகேஸ்வரியம்மாளும், "நாங்கள் இந்த பகுதியில் நான்கு தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் பிள்ளைகள் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்கள். எங்கள் வீட்டை ஒரு நாள் இரவில் திடீரென இடித்து தரைமட்டமாக்கி எங்களை நடுத் தெருவில் நிற்கவைத்துவிட்டார்கள்" என கண்ணீர் விடுகின்றனர்.

இதுகுறித்து பவானி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே. சி. கருப்பணனிடம் பேசிய போது "இந்த கிராமத்தில் இரண்டு சதவீதம் பேர்தான் அடுக்குமாடி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கிடையாது. சிலுக்குப்பட்டி என்ற ஊரில் எனக்கு ஆகாத இரண்டு திமுக காரர்களும், காங்கிரஸ்காரர்களும் உள்ளனர். இவர்கள் பிளாக் மெயில் செய்தும், தகராறு செய்தும் பணம் பறிக்கக்கூடியவர்கள். அதிமுக ஆட்சியில் இவர்கள் எந்தவிதமான கட்டப் பஞ்சாயத்தும் செய்ய முடியவில்லை. இதனால் இவர்கள் தூண்டுதலின் பேரிலேயே கிராம மக்கள் இதுபோல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
என்னுடைய தொகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி என்று அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளேன். ஊர் மக்களோடு இணைந்து 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். ஆகையால் எங்கள் தொகுதி மக்கள் என்னைப் புறக்கணிக்க முடியாது" என்றார் அமைச்சர்.
பிற செய்திகள்:
- பாஜக vs திமுக: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலம் யாருக்கு வெற்றி தரப்போகிறது?
- சீனாவின் சுயரூபத்தை காட்டியதால் வெளியேற்றப்பட்டேன் - பிபிசி செய்தியாளர் பகிரும் கசப்பான உண்மை
- தனி நாடு, கூட்டாட்சி என்றெல்லாம் பேசப்போவதில்லை: சீமான்
- "ரெய்டில் பிடிபட்ட மொத்த பணமே 5 சதவிகிதம்தான்" - அதிர வைக்கும் தகவல்கள்
- "கருத்துக் கணிப்புகள் பொய், மக்கள் ஏமாற மாட்டார்கள்" - அண்ணாமலை பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:





















