தமிழக தேர்தல் 2021: ஏப்ரலில் தேர்தலை கோரும் அதிமுக, ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தும் திமுக

பட மூலாதாரம், Getty Images
(தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதமே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கோரப்பட்டுள்ளது. தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தி.மு.க கூறியிருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இங்கு செய்யப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரி உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் 2 நாள் பயணமாக சென்னை வந்ததுள்ளனர். அவர்கள், இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அ.தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் ஆகிய இருவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ எம்.பி. ஆகிய இருவரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்தனர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், ஏப்ரல் மாதம் மூன்றாவது, நான்காவது வாரத்திலேயே ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடித்துவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
தி.மு.கவைப் பொறுத்தவரை ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். "தமிழ்நாட்டில் வழக்கமாக தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதுதான் வாடிக்கை. ஆனால், இந்த முறை இரண்டு அல்லது மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என செய்திகள் வருகின்றன. ஆகவே ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டுமென சொல்லியிருக்கிறோம். மேலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கோரியிருக்கிறோம்" என செய்தியாளர்களிடம் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களை தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டதாக அக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனக் கோரியுள்ளது. வாக்காளர் பட்டியலை இறுதிசெய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர், அரசு துறைகளின் செயலாளர்கள் ஆகியோரிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளனர். இதன் பிறகு அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
விவசாயிகள் போராட்டம்: "பிரதமரின் வானொலி நிகழ்ச்சியின்போது மணியோசை எழுப்புங்கள்"

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 26ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 11 விவசாயிகள் தினமும் உண்ணாவிரதம் இருப்பர் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களை டிசம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரப் போவதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர், டிசம்பர் 27ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது வீடுகளில் ஒவ்வொருவரும் மணியோசை எழுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டுப் போராடி வருகின்றனர்.
மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பாவில் போயிங் 737 மேக்ஸ் விமானம் பறக்க அனுமதி

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பாவின் வான் போக்குவரத்து பாதுகாப்பு முகமையின் தலைவர் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் தற்போது பறப்பதற்கு ஏதுவானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விமானம் குறித்து கூர்ந்து ஆராய்ந்ததாகவும், இதன் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தீவிரமாக ஆராய்ந்ததாகவும் முகமையின் நிர்வாக இயக்குநர் பேட்ரிக் கீ தெரிவித்துள்ளார்.
போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இரு மோசமான விபத்தில் சிக்கியதில் மொத்தம் 346 பேர் உயிரிழந்தனர். அதன்பின் இந்த ரக விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இதற்கான தடை ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது. ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்த விமானம் ஐரோப்பாவில் பறப்பதற்கான அனுமதியைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் 2018ஆம் ஆண்டு லயன் ஏர் விமான சேவை நிறுவனத்தின் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அதன்பின் நான்கே மாதங்களில் எத்தியோப்பியாவின் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தை கட்டுப்படுத்தும் மென்பொருளில் ஏற்பட்ட பழுதே இந்த இரு விபத்துக்கான காரணமாக சொல்லப்பட்டது.
பிற செய்திகள்
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















