'ஒவ்வொருவர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் பொறுப்பு' - வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன்

வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

தமிழ்நாட்டின் நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தற்போது பேசிவருகிறார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டபின் இந்த அறிக்கை தொடர்பான 21 பக்கங்கள் கொண்ட விளக்க படத்தை காட்டி அதற்கான விளக்கத்தை அமைச்சர் மரிய வில்சன் வழங்கினார்.

பின்னர் நிதியமைச்சர் பேசுகையில், "2021 - 2022 முதல் 2025-2026 வரையிலான காலத்தை கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஒத்த தொழில்துறை அமைப்பையும் பொருளாதார அளவும் கொண்ட மாநிலங்களுடன் நியாயமான ஒப்பீடு செய்யும் காலப்பகுதியை எடுத்துக்கொண்டோம்" என்று நித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், "இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு அந்த மாநிலங்களின் மீட்சி காலத்தை பயன்படுத்தி தங்களின் மீதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தி குறைத்தது தான். ஆனால் தமிழ்நாடு அதற்கு நேர் முரணாக செயல்பட்டது.

ஒவ்வொரு அடிப்படை சுட்டிக்காட்டிலும் கட்டமைப்பு ரீதியான பின்னடைவை சந்தித்தது" என்றார்.

திருக்குறள் 478-ஐ சுட்டிக்காட்டி பேசிய அவர், "வருவாய் குறைவாக இருப்பதால் தீமை இல்லை, ஆனால் செலவுகள் அளவுக்கு மீறாமல் இருந்தால் போதும்" என்று அவர் குறிப்பிட்டார்.

வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், "தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 78 ஆயிரத்து 324 கோடியாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தொகை.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சொந்த வரி வசூல் முயற்சி 5.45 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதுவரை இல்லாத குறைந்தபட்சம்.

மூலதன செலவு 1.44 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது ஒப்பீட்டளவில் குறைவு

கட்டாய செலவுகள் 64.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. இவை ஒப்பீட்டளவில் மாநிலத்துக்கு மிகவும் அதிகம்.

கடன் 28.3 சதவிகிதம் அளவில் நிலைத்து உள்ளது. எந்தவித நிதி ஒருங்கிணைப்பும் இல்லாமல் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவுத் திட்ட மேலாண்மை (FRBM) சட்டத்தின்படி மூன்று சதவிகிதம் பற்றாக்குறை வரம்பு ஒவ்வொரு ஆண்டும் மீறப்பட்டுள்ளது" என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

மேலும் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், "மொத்த நிலுவை கடன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளது, இவை 28.3% ஆகும்.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 5.45% ஆக உள்ளது. இது மிகக் குறைந்த அளவாகும்.

மொத்த வருவாய் வரவுகளில் வட்டி செலவினம் 22.8 சதவிகிதம் ஆகும்.

மொத்த வருவாய் வரவுகளில் தவிர்க்க இயலாத செலவினம் 64.4% ஆகும்.

உண்மையான கடன் அளவு 13.18 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது (இவை அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் உள்ளடக்கியது)" என்றார்.

இதில் கட்டாய செலவுகள் என்பது வட்டி, ஊதியம், மற்றும் பென்ஷன் என இந்த மூன்று விஷயத்துக்காக மட்டும் 64.4 சதவிகிதத்தை அரசு செலவிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தனிநபர் மீது எவ்வளவு கடன் பொறுப்பு?

ஐந்து ஆண்டுகாலத்தில் மட்டும் தமிழ்நாடு 4.87 லட்சம் கோடி ரூபாய் புதிய கடனை சேர்த்துள்ளது என்று அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "60 ஆண்டுகளில் சேர்த்த மொத்த கடனை விட ஒரே ஐந்து ஆண்டில் சேர்த்த கடன் அதிகமாக உள்ளது.

கடன் ஆண்டுக்கு சராசரியாக 14.3% வளர்ந்துள்ளது. ஆனால் மூலதன முதலீடு வெறும் 8.3 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளது.

இது கட்டமைப்பை உருவாக்க அல்ல, அன்றாட செலவுகளை சமாளிக்க கடன் வாங்குகிறோம் என்பதற்கான தெளிவான சான்று

தமிழ்நாட்டில் ஒருவருக்கான கடன் பொறுப்பு இரட்டிப்பாகி ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரூபாய்க்கு கூட பொருளாதாரத்துக்கு பங்களிப்பதற்கு முன்பாக இந்த கடன் பொறுப்புடன் பிறக்கிறது" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கடன் அளவில் குஜராத் 17.6%, மகாராஷ்டிரா 19.7%, கர்நாடகா 23.4%, என்ற அளவில் உள்ளன என்றும், ஆனால் தமிழ்நாடு 28.3% என்ற மிக அதிக அளவை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இவை பாதுகாப்பான வரம்பாக கருதப்படும் 20 சதவிகிதம் வரம்பை தாண்டி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வட்டி செலவு விவரம்

தமிழ்நாட்டின் ஆண்டு வட்டி செலவு 67 ஆயிரத்து 59 கோடியாக உயர்ந்து மாநிலத்தின் மொத்த மூலதன செலவான ரூபாய் 50 ஆயிரத்து 911 கோடியாக மிஞ்சி உள்ளது என அமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "எதிர்காலத்தை உருவாக்க செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கடந்த கால கடன்களில் வட்டி செலுத்த ரூபாய் 1.32 காசுகள் செலவாகிறது. இந்த நிலை முதன்முதலில் 2017-18 ஆம் ஆண்டில் உருவானது. அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் இந்த இடைவெளி மேலும் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது வட்டி செலவு மொத்த வருவாய் என 22.8 சதவிகிதமாக உள்ளது.

இது கர்நாடகாவில் 16.4%, குஜராத்தில் 12% ஆகவும் மகாராஷ்டிராவில் 10.3 சதவிகிதமாகவும் மட்டுமே உள்ளது

தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாயில் 34.8 சதவிகிதம் வட்டி செலவுக்கே செல்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த வட்டி செலவு 61% உயர்ந்துள்ளது." என்றார்.

'கொரோனா காலத்தை விட அதிகம்'

வருவாய் பற்றாக்குறை 72 ஆயிரத்து 324 கோடியாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்ட அமைச்சர் மரிய வில்சன், இது ஜிஎஸ்டிபியில் 2.22% ஆகும் என்றும் மேலும் இது வரலாற்றில் இல்லாத உச்ச அளவு என்றும் குறிப்பிட்டார்.

"இதில் கவலைக்குரிய விஷயம் இந்த பற்றாக்குறை கொரோனா பெருந் தொற்று காலத்தை விடவும் அதிகமாக உள்ளது.

வருவாய் பற்றாக்குறையை முழுமையாக நீக்குவதற்கான காலக்கெடுவை முந்தைய ஆட்சியாளர்கள் நிதி பொறுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து 2009 முதல் 2026 வரை எட்டு முறை தள்ளிப் போட்டு உள்ளனர்.

இதற்கிடையில், குஜராத் வருவாய் உபரியுடன் செயல்படுகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வருவாய் செலவு கணக்கில் கிட்டத்தட்ட சம நிலையில் பயணிக்கின்றன. இந்த குறிப்பில் தமிழ்நாடு முற்றிலும் வேறு பாதையில் சென்று விட்டது" என்றார்.

வருவாய் இழப்புக்கான முக்கிய கசிவுகள் என்ன?

வருவாய் இழப்புக்கான முக்கிய கசிவுகள் குறித்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், "ஜிஎஸ் டி - வணிகவரித்துறையில் நிலவும் முறைகேடுகள் மற்றும் சரியான மதிப்பீடுகள் செய்யப்படாத பரிவர்த்தனங்கள்.

முத்திரைத்தாள் கட்டணம் - சந்தை மதிப்பை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகள்.

மதுபான வருவாய் - ஒப்பிடப்படும் மாநிலங்களில் மிகவும் குறுகிய உரிமையாளர் பெருமறை காரணமாக முறைசாரா சந்தை வளர்வதற்கான வாய்ப்பு.

சுரங்கத்துறை - பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் கூட கசிவுகளை காரணமாக நிலையான மற்றும் குறைந்த வருவாய் மற்றும் கிடைப்பது." ஆகியவை அதற்கான காரணங்களாக குறிப்பிட்டார்.

புதிய வரிகள் விதிக்காமல் கூட நிர்வாகத்தை நவீனப்படுத்தி இந்த கசிவுகளை அடைப்பதன் மூலம் மாநிலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு இரண்டு முக்கிய வழிகளின் மூலம் மத்திய அரசை சார்ந்துள்ளது.

மத்திய வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு பத்தாவது நிதிக்குழு காலத்தில் 6.64 சதவிகிதமாக இருந்தது, இன்று 4.097%ஆக குறைந்துள்ளது." என தெரிவித்தார்.

மதுபான வருவாய் குறித்து பேசிய அவர், ஒப்பிடப்படும் மாநிலங்களில் மிகவும் குறுகிய உரிமையளிப்பு முறை காரணமாக முறைசாரா சந்தை வளர்வதற்கான வாய்ப்பு" என்றும் அவர் குறிப்பிட்டார்.

எப்போதெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது?

முன்னதாக, 2021-ஆம் ஆண்டில் முந்தைய திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது.

2024-ஆம் ஆண்டு இந்தியாவின் நிதிநிலைமை பற்றி மத்திய அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

2014 முதல் 2024 வரையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலத்தை அதற்கு முந்தைய பத்து ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது.

தமிழ்நாடு இரண்டு முக்கிய வழிகளின் மூலம் மத்திய அரசை சார்ந்துள்ளது என்று அமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டார்.

"மத்திய வரி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு, பத்தாவது நிதிக்குழு காலத்தில் 6.64 சதவிகிதமாக இருந்தது இன்று 4.097% ஆக குறைந்துள்ளது.

மத்திய அரசு மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம் (செஸ் மற்றும் சர் சார்ஜ்) மூலமாக அதிகளவு வருவாய் திரட்டுகிறது. இந்த வருவாய் மாநிலங்களுடன் பகிர வேண்டிய அவசியம் இல்லை. இதனால் மாநிலங்களுக்கு பகிரப்படும் மொத்த வரி நிதி தொடர்ந்து சுருங்கிக் கொண்டே வருகிறது." என தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

வெள்ளை அறிக்கை என்பது பெரும்பாலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் வெளியிடப்பட்டாலும் தனியார் துறைகளிலும் வெள்ளை அறிக்கையின் பயன்பாடு வழக்கத்தில் இருந்துள்ளது.

ஆங்கிலத்தில் வைட் பேப்பர் (white paper) என்பதன் தமிழாக்கமே வெள்ளை அறிக்கை என்று அறியப்படுகிறது. வைட் பேப்பர் என்கிற வார்த்தையை 1446-ஆம் ஆண்டு தொடங்கி பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆகஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி கூறுகிறது.

ஸ்டான்ஃபர்ட் சட்டப் பள்ளி கொடுத்துள்ள விளக்கத்தின்படி, அரசாங்க ஆவணங்கள் அவை விநியோகம் செய்யப்பட வேண்டிய இடங்களைக் குறிப்பிட வெவ்வேறு நிறங்களால் குறிக்கப்பட்டன. அவ்வாறு வெள்ளை நிற ஆவணம் என்பது பொது அணுகலுக்கானதாகப் பயன்படுத்தப்பட்டது.

வெள்ளை அறிக்கை என்பது அரசியல், வணிகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வைட் பேப்பர் போன்றே க்ரீன் பேப்பர் மற்றும் பிங்க் பேப்பர் என்கிற இரு வேறு ஆவணங்கள் இருப்பதாகவும் ஸ்டான்ஃபர்ட் ஆவணம் தெரிவிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு