தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ''பெண்களுக்கு "வாழ்க" சொல்லக்கூட தயங்குகிறார்கள்'' - அரசியலில் பெயரளவுக்கா முக்கியத்துவம்?

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

அரசியல் தளங்களில் பெண்களின் பங்கேற்புக்கு புறச்சூழல்களில் ஏற்படும் தடைகளைவிட உள்கட்சியில் காட்டப்படும் பாரபட்சமும், இடர்பாடுகளும் தடைக்கற்களாக இருப்பதாக பெண் தலைவர்கள் கூறுகிறார்கள். ஒரு தொகுதியில் தலைவராக ஒரு பெண் வேட்பாளர் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கான பாதை எளிதானது அல்ல என்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமைச்சர் நிலோபர் கபீல், தன்னுடைய வாய்ப்பு பறிக்கப்பட்டுவிட்டதாக ஊடகத்தினரிடம் கண்ணீருடன் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியது.

கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் தனக்கு எதிரான கருத்துக்களை பரவவிட்டு, தன்னுடைய வாய்ப்பை பறித்துவிட்டார்கள் என அழுகையுடன் பேசினார்.

அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கோ அல்லது அவர் வைத்த கோரிக்கைக்கோ இதுவரை கட்சி மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை என்கிறார் நிலோபர் கபீல்.

''2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு அதிமுக கூட்டணியில் இருந்ததால் என்னுடைய பகுதியில் மக்கள் ஆதரவு தரவில்லை. இருந்தாலும் கட்சிக்காக உழைத்தேன். தற்போது என் மீது வீண் பழிசுமத்தி வாய்ப்பை பறித்துவிட்டார்கள். எனக்கு சீட் தரப்படவில்லை என்பதால் நான் வேறு கட்சிக்கு சென்றுவிடுவேன் என நினைக்கிறார்கள்.

ஆனால் நான் தொடர்ந்து அதிமுகவில் இருப்பேன். இந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்,''என்றார் நிலோபர் கபீல்.

அதேநேரம், அதிமுக சார்பாக குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னதாக பழனிசாமி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டாலும், முன்னாள் அமைச்சரான செல்வி ராமஜெயத்திற்கு அந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2006ல் புவனகிரி தொகுதியில் வென்றவர் செல்வி ராமஜெயம். அவரை வேட்பாளராக அறிவித்தவுடன், குறிஞ்சிப்பாடி பகுதி அதிமுகவினர் பலர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கண்ணாடிகளை சேதப்படுத்தினர்.

''பாகுபாடு, அச்சுறுத்தலை தாண்டிய பயணம்''

திமுக, காங்கிரஸ் என பயணித்து தற்போது பாஜகவில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு தனது பத்தாண்டு அரசியல் வாழக்கையில் பலமுறை பாகுபாட்டை சந்தித்துள்ளதாகக் கூறுகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை எதிர்த்து போட்டியிடும் குஷ்பு சவால்களை சந்தித்து வெற்றி காண்பது தனக்கு பிடித்தமான ஒன்று என்கிறார்.

''பெண் தலைவர்கள் தலையெடுக்கிறார்கள் என்பது ஆண்களுக்கு ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிலும் பாகுபாடு, அச்சுறுத்தல் ஆகியவற்றை நான் சந்தித்திருக்கிறேன்.

என்னை பற்றிய செய்திகள் வெளியாவதை அவர்கள் அதிகம் விரும்பியதில்லை. பத்திரிகைகளில் என் புகைப்படம் வருவது, என்னை சந்திக்க தொண்டர்கள் வருவது அல்லது பொது இடங்களில் எனக்காக மக்கள் கூடுவது ஆகியவற்றை பல நேரங்களில் ஆண் உறுப்பினர்கள் விரும்பியதில்லை,''என்கிறார். அரசியல் கட்சிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் , பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது பிரச்னையை தீர்க்குமா என கேட்டோம்.''

இடஒதுக்கீடு தீர்வாகாது

ஆண்களின் மனம் மாறவேண்டும். பெண்களை சமத்துவமாகப் பார்க்கும் தெளிவை அவர்கள் அடையவேண்டும். அதற்காக 33 சதவீதம் இடஒதுக்கீடு கேட்பதைவிட, எல்லா கட்சிகளும் பெண்களுக்கு சரிபாதி தொகுதிகளை அளிக்க முன்வரவேண்டும். சரிசமமான ஒதுக்கீடு என்பது பலன் தரும்,''என்கிறார் குஷ்பு.

''ஆண்களைவிட அரசியலுக்கு பெண்கள் ஏற்றவர்கள்''

காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் போராட்டம் நடைபெற்றது. விளவங்கோடு தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து விஜயதரணியிடம் பேசினோம்.

''எனக்கு முதல்முறை 2006ல் கட்சி வாய்ப்பு கொடுத்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதியாக இருந்த விளவங்கோட்டை காங்கிரஸ் கட்சியின் பலமான தொகுதியாக மாற்றிக் காட்டினேன். 2011ல் மீண்டும் வாய்ப்பு வந்தது. 2006ஐ காட்டிலும் 10,000 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் என் திறமையை நிரூபித்தேன். என்னுடைய தொகுதியில் உள்ள மக்கள் நான் செய்த பணிகளுக்காக எனக்கு ஆதரவு தர காத்திருக்கிறார்கள். வெறும் 10 பேர் சேர்ந்து கட்சி தலைமையகத்தில் போராட்டம் நடத்துவதால் எனக்கு வாய்ப்பு கொடுப்பதை ஏன் நிறுத்திவைக்கவேண்டும்.

மக்களிடம் செல்வாக்கு மிகுந்த தலைவராக நான் உருவாகியிருக்கிறேன்,''என்கிறார் விஜயதரணி.தனது தொகுதியில் மூடும் நிலையில் இருந்த மத்திய அரசின் ஆலை ஒன்றில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு பிரச்சனைகளுக்காக உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்கறிஞராக தானே வாதாடி நியாயம் பெற்று வாக்காளர்களை கவர்ந்ததாக கூறுகிறார்.

''என் தொகுதி மக்களின் பிரச்சனைகளை என் வீட்டு பிரச்னையாக பார்த்து, உடனே தீர்வு காண்பதால் மக்களுக்கு என் மீது நம்பிக்கை உள்ளது. கட்சியில் உள்ளவர்கள் சிலர் பூசல் ஏற்படுத்துகிறார்கள். பெண்களுக்கு போராட்ட குணம் அதிகம். அரசியலுக்கு தேவையான தகுதிகள் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம் உள்ளது. அதை பெண்கள்தான் தடைகளை தாண்டி நிரூபிக்கவேண்டும். ஆண்களிடம் மனமாற்றம் ஏற்படவேண்டும்,''என்கிறார் விஜயதரணி.

''பாலின பேதம் எங்கள் கட்சியில் இல்லை''

அடுத்ததாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் பொன்னுத்தாயிடம் பேசினோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான இவர் முதல்முறையாக அரசியல் களம் காண்கிறார். பிற அரசியல் கட்சிகளைப் போல் இல்லாமல், கட்சியில் மூத்த உறுப்பினர் மற்றும் கட்சியில் செய்த வேலைகளை வைத்ததுமட்டுமே தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் பொன்னுத்தாய்.

''பல கட்சிகளில் வேட்பாளர் நேர்முகத்தேர்வில் தொகுதியில் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள் என்றுதான் முதலில் கேட்பார்கள். எங்கள் கட்சியில், நாங்கள் மக்களுக்காக என்ன வேலை செய்தோம், எத்தனை சமூகநீதி போராட்டங்களில் வெற்றி பெற்றோம் என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும்.

அதோடு, பிற கட்சிகளில் உள்ள பெண்களுக்கு குடும்பத்தின் பணபலம் பெரிதும் தேவை. எங்கள் கட்சியில் அப்படி இல்லை. கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் தேர்தல் செலவு இருக்கும். எங்கள் கட்சியில் பாலின பேதம் கிடையாது. பிற கட்சிகளில் அவதிப்படும் பல சகோதாரிகளை சந்தித்திருக்கிறேன்,''என்கிறார் பொன்னுத்தாய்.

''பெண் தலைவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது சவாலானது''

தலைவர்களாக உயர்ந்துவிட்ட பெண்களுக்கு சிக்கல் கிடையாது என்றும் அடிமட்டத்தில் கட்சி பணியாற்றும் பெண்களுக்கு சவால்கள் அதிகம் என்றும் கூறுகிறார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்.

''பெண் பிரதிநிகளுக்கு அரசியல் கட்சிகளில் அங்கீகாரம் கிடைப்பது சவாலானதுதான். ஜெயலலிதா, இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்றவர்கள் பயணித்த பாதை வேறு. சாதாரண அடிமட்ட தொண்டராக கட்சியில் பணியாற்றும் பெண்களின் நிலை வேறு.

முந்தைய காலங்களைப் போல பெண்கள் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவர்களை மோசமாக பார்க்கும் பார்வை தற்போது இல்லை. ஆனால் கட்சி வேலைகளை செய்யும்போது, பெண் தலைவர்களுக்கு சிக்கல்கள் உள்ளன.

குடும்பத்தின் ஆதரவு கட்டாயம் தேவை. குடும்ப உறுப்பினர்கள் தேர்தலுக்கு பெண் உறுப்பினர் செலவு செய்வதை ஏற்கவேண்டும். அதேநேரம், தனது திறமையை பெண்கள் நிலைநிறுத்திவிட்டால், அவர்களுக்கு தொகுதியில் நல்ல அங்கீகாரம் இருக்கிறது என்று தெரியவந்தால், எந்த கட்சியாக இருந்தாலும், அந்த பெண்ணுக்கு வாய்ப்பளிக்கத் தவறமாட்டார்கள்,''என்கிறார் கீதா ஜீவன்.

சமூக மாற்றம் தேவை

அரசியல் தளத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் சமூக செயற்பாட்டாளர் ஷீலு. பெண் பஞ்சாயத்து தலைவர்களின் ஆளுமை பண்பை அதிகரிக்க பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். பெண் ஒருவர் தலைவராக மதிக்கப்படுவது அவ்வளவு எளிதல்ல என்கிறார் ஷீலு.

''பெண் தலைவர்களுக்கு வாழ்க என கோஷமிடுவதைக்கூட மிகவும் தயங்கிதான் சொல்வார்கள். பெண்ணை ஒரு தொகுதியில் தலைவராக ஏற்கிறார்கள் என்றால், ஒருவேளை அந்த கட்சியில் அவரது கணவரோ, தந்தையோ செல்வாக்கான நபராக இருப்பார்.

எந்த குடும்ப பின்னணியும் இல்லாமல் பெண்கள் தலைவராவது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெறுவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு,''என்கிறார் ஷீலு.

பெண்களுக்கு பொறுப்புகள் கொடுப்பதை கட்சிகள் ஊக்குவிப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் மாற்றம் தொடங்கவேண்டும் என்கிறார் ஷீலு. ஆணாதிக்க சிந்தனைகள் ஒழிந்து, சமத்துவம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அந்த மாற்றம் சாத்தியம் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :