தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: `சீட் கிடைக்காததற்கு வீரமணியே காரணம்!' அமைச்சர் நிலோஃபர் கபீல் புறக்கணிப்பின் பின்னணி

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

அ.தி.மு.கவின் மூன்று அமைச்சர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியுடனான மோதலின் காரணமாகவே அமைச்சர் நிலோஃபர் கபீலுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது?

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் 12 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனையொட்டி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் 171 தொகுதிகளுக்கான 2 வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். இதற்கு முன்னதாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க தலைமை வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

3 அமைச்சர்கள்!

கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகிய மூவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. `` வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் இடையே முட்டல், மோதல்கள் இருந்து வந்தன. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராக வீரமணியும் துணைச் செயலாளராக நிலோபரும் இருந்து வருகின்றனர். வாணியம்பாடி தொகுதியின் எம்.எல்.ஏவாக நிலோபரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக வீரமணியும் உள்ளனர். இவ்விரண்டுமே பக்கத்துப் பக்கத்து தொகுதிகள். மாவட்டத்தில் சீனியர் நிர்வாகியாக வீரமணி இருக்கிறார். ஒரே மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதால் வருகின்ற மோதல்கள், இங்கும் தொடர்ந்தன" என்கிறார் வேலூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

ஆதரவாளருக்கு சீட்!

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், ``மாவட்டத்தில் நிலோபர் என்ற ஒருவர் இருப்பதாகவே அமைச்சர் வீரமணி காட்டிக் கொள்ளவில்லை. அதேபோல், வாணியம்பாடியில் நடக்கும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் வீரமணியை புறக்கணிக்கும் வேலைகளை நிலோபர் தொடர்ந்து செய்து வந்தார். அதிகாரிகள் வீரமணியை அழைத்தால்கூட, `அவரை ஏன் அழைக்கிறீர்கள்?' என அதிகாரிகளிடம் கடிந்து கொள்வார். தவிர, தொகுதிக்குள் வீரமணிக்கு செல்வாக்கு அதிகம். நிலோபரின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து, தன்னுடைய ஆதரவாளரான செந்தில்குமாருக்கு வீரமணி சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அடிப்படையிலேயே அரசியல் பின்னணி கொண்டவராகவும் இளைஞராகவும் இருப்பது செந்தில்குமாருக்கு பிளஸ்ஸாகப் பார்க்கப்படுகிறது" என்கிறார்.

வாக்குகளைப் பிரிக்கும் ஓவைசியின் கட்சி?

மேலும், ``வாணியம்பாடியில் ஓவைசியின் கட்சியும் போட்டியிடுகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஓவைசியின் கட்சி இந்தத் தொகுதியில் 10,000 வாக்குகளைப் பெற்றது. உருது பேசும் இஸ்லாமியர்கள் மத்தியில் ஓவைசியின் கட்சிக்கு செல்வாக்கு அதிகம். இந்த முறை தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிறது. இந்த முறை அத்தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் தி.மு.கவினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதனால் வாக்குகள் பிரிந்து அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என கே.சி.வீரமணி நம்புகிறார். தவிர, `இந்தமுறை கட்சி தனக்கு சீட் ஒதுக்காது' என நிலோபரும் உறுதியாக நம்பினார். அதன் காரணமாக ஆம்பூர் தொகுதியையும் அவர் கேட்டிருந்தார். அந்தத் தொகுதியும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. இதனால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்" என்கிறார் விரிவாக.

வீரமணியே காரணம்!

``சீட் ஒதுக்கப்படாததன் பின்னணி என்ன?" என அமைச்சர் நிலோபர் கபிலிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.`` மாவட்ட செயலாளரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்பது மட்டும்தான் தெரியும். எங்கள் கட்சித் தலைமை சரியாக உள்ளது. அவர்களின் உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். நான் இருபது ஆண்டுகளாக அ.தி.மு.கவுக்காக உழைத்தேன். எனக்கு தலைமை நல்லது செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றதோடு முடித்துக் கொண்டார்.

நிலோபரின் குற்றச்சாட்டு தொடர்பாக, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நான் தொடர்ந்து 16 வருடங்களாக மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். யார் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. இந்தக் கட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. அம்மா இருந்தவரையில் சிறிய தவறு என்றாலும் பதவியில் இருந்து எடுத்துவிடுவார். அவர் எந்த அர்த்தத்தில் சொல்கிறார் எனத் தெரியவில்லை" என்கிறார்.

நான் குறை சொல்லவில்லை!

தொடர்ந்து பேசுகையில், ``ஒரு தொகுதியை தொடர்ந்து இஸ்லாமியருக்குக் கொடுத்து வருகிறோம். தொகுதியில் உள்ள கிராமங்களில் பிற சமூகங்களைச் சேர்ந்த மக்களும் உள்ளனர். இந்து, கிறிஸ்துவ சமூகங்களின் வாக்குகளும் உள்ளன. இதனால் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கட்சிக்காரர்கள் மத்தியில் அதிருப்தி இருந்திருக்கலாம். தற்போது ஆம்பூர் தொகுதியை இஸ்லாமியருக்குக் கொடுத்திருக்கிறோம். எங்கள் பலம் எங்களுக்குத் தெரியும். ஓவைசி கட்சி உள்பட யார் நின்றாலும் நாங்கள் நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம்" என்றவர், இறுதியாக,

`` என்னை அவருடைய தொகுதிக்குள் புறக்கணித்ததாகச் சொல்வதெல்லாம் தவறான தகவல். இப்போதுகூட அந்தம்மாவைப் பற்றி நான் குறையாக எதையும் சொல்லவில்லை. அவர்களும் தெரிந்து பேசுவதற்கு வாய்ப்பில்லை. எங்களுக்குள் எந்தவிதப் பிரச்னைகளும் இல்லை. சிறிய தொண்டனைக் கூட அனுசரித்துப் போகின்ற குணம் உள்ளவன் நான். தற்போது 13 தொகுதிகளைக் கையாண்டு வருகிறேன். கோஷ்டி என்ற ஒன்று இல்லாத மாவட்டமாக, வேலூர் மாவட்டத்தைச் சொல்லலாம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :