மேற்கு வங்க தேர்தல்: 50 பெண் வேட்பாளர்கள், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் - மம்தாவின் அதிரடி அறிவிப்புகள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழக, இந்திய மற்றும் உலகளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் காணலாம்.

மேற்கு வங்கத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் மம்தா பேனர்ஜி. மேற்கு வங்கத்தின் முதலமைச்சரும், கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிடுவதாக அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இதில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடுகிறது; மீதி மூன்று தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் திரிணாமுல் காங்கிரஸ் 50 பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும் 42 முஸ்லிம் வேட்பாளர்களின் பட்டியலையும் அறிவித்துள்ளார் மம்தா பேனர்ஜி.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, ஷிவ்பூர் என்ற தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த மம்தா பேனர்ஜி தனக்கு மக்களின் ஆதரவு வேண்டும் என கோரியுள்ளார். மேலும் மக்கள் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மட்டும்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது அரசு கொரோனா மற்றும் புயல் போன்ற பேரழிவு காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டதாக தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே வி.சி.க., ஐ.யு.எம்.எல்., மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று மாலையில் தி.மு.க. தலைமையகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், எம்பிக்கள் சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். அங்கு இடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தில் முத்தரசனும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.

திருத்துறைப்பூண்டி, பவானி சாகர், தளி, சிவகங்கை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் சி.பி.ஐயின் விருப்பப்பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்போது சி.பி.ஐக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்த்து இதுவரை 17 இடங்களை தி.மு.க. கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "இந்தத் தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தலாகும். இந்தத் தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா, லட்சியமா என்று கேட்டால், லட்சியத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கப்படும். தமிழ்நாடு மக்களின் ஒற்றுமையை காப்பாற்றிவரும் மாநிலம். வரும் தேர்தலில் வகுப்புவாத சக்திகள், சில கட்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி வலுவாகக் காலூன்றுவதற்குரிய வேலைகளைச் செய்கிறார்கள். ஒரு பக்கம் பா.ஜ.க. - அ.தி.மு.க. அணி. இன்னொரு பக்கம், இவர்களால் உருவாக்கப்பட்ட இன்னொரு அணி. இந்தச் சூழலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறுவது மிக முக்கியமானது. இதனை உணர்ந்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆகவே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய பல பணிகளைச் செய்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிபெறுவதற்காக இணக்கமான முறையில் பேசி ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறோம். உத்தேசப் பட்டியலை தி.மு.கவிடம் அளித்திருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 12 இடங்களைப் பெற்று, 6 இடங்களில் வெற்றிபெற்றது சி.பி.ஐ. 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் இக்கட்சி வென்றது. 2016ஆம் ஆண்டில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு, எல்லா இடங்களிலும் தோற்றது. மொத்தமாக 0.79 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அதிமுகவில் 6 வேட்பாளர்கள் அறிவிப்பு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஆறு வேட்பாளர்கள் பெயரை முதல் கட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் முக்கியத் தலைவர்களின் தொகுதிகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இன்று (மார்ச் 5, வெள்ளிக்கிழமை) அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் இணைந்து, அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கையெழுத்திட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர், நிதி அமைச்சர் மற்றும் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் எடப்பாடி தொகுதியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நிற்கிறார்.

வட சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் தொகுதியில், மீன்வளத் துறை அற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் நிற்க இருக்கிறார்

விழுப்புரம் தொகுதியில் தமிழக சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிற்கவிருக்கிறார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி. சண்முகநாதனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைத் தொகுதியில் தேன்மொழியும் நிற்கவிருக்கிறர்கள்.

இதுவரை அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளோடு தொகுதிப் பங்கீடுகள் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: