You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் மோதி, அமைச்சர்களுக்கு திருக்குறள் மூலம் அறிவுரை வழங்கிய திமுக எம்.பி
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோதியும் அவரது அமைச்சரவையில் உள்ள சிலரும் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறியிருக்கிறார் மாநிலங்களவை திமுக உறுப்பினரான என்.ஆர். இளங்கோ.
மாநிலங்களவைக்கு திமுக சார்பில் உறுப்பினராக தேர்வான இவர், வியாழக்கிழமை முதல் முறையாக தனது கன்னிப்பேச்சை பதிவு செய்ய வாய்ப்பு தரப்பட்டது. அப்போது குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது திமுக சார்பில் பேசிய அவர், விவசாய சட்டங்கள் தொடர்பான அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோதி மற்றும் அவரது அமைச்சர்கள் தமிழக தேர்தலை மனதில் வைத்தும் தமிழ் கவிஞர்களின் பாடல்களை அடிக்கடி மேற்கோள்காட்டியும் பேசுவது வியப்பளிப்பதாக தெரிவித்தார்.
இந்தியில் அன்ன தாதா என்று விவசாயிகளை அழைத்து மதிக்கிறீர்கள். அதே பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அறிந்து கொள்ளவும் திருக்குறளில் சில குறள்கள் உள்ளன என்று என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டு அந்த குறள்களையும் அதன் விளக்கத்தையும் வழங்கினார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்;
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு;
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
ஆகிய குறள்களையும் அவற்றுக்கான விளக்கத்தையும் அளித்த இளங்கோவன், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள், மருத்துவ கல்வியில் மத்திய இடஒதுக்கீடு மூலம் எடுத்துக் கொண்ட அனைத்து இடங்களையும் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி அளியுங்கள் என்று பேசி தனது உரையை நிறைவு செய்தார்.
ஏமாற்றம் தரும் குடியரசு தலைவர் உரை
முன்னதாக, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்ற வகையில் உரையாற்றிய குடியரசு தலைவரின் பேச்சு தனக்கு ஏமாற்றம் தருவதாக என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டார்.
"கடுமையான மக்கள் விரோத, கூட்டாட்சிக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் போராடும் விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் வலிமையைப் பார்த்த பிறகு, இந்தப் போராட்டத்தில் சுமார் 160 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சி தகவலைக் கேள்விப்பட்ட பிறகு குடியரசு தலைவர் தனது உரையில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் வந்தேன். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக அது நடக்காது என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த சபையில் அந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் பற்றிய சர்ச்சைக்குரிய விஷயத்தைப் பற்றி நான் பேசுவதை இப்போது தவிர்க்கிறேன்."
குடியரசு தலைவர் உரையில், "விவசாய உள்கட்டமைப்பு நிதிக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் கிசான் ரயில் பற்றியும் பேசப்படுகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இந்த அரசு முடிவு செய்திருப்பதையும் உற்பத்திச் செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கவும் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக குடியரசு தலைவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், இங்கு உற்பத்தி செலவை நிர்ணயிப்பதற்கான அடிப்படை என்ன என்பதே பிரச்னை. அதுமட்டமல்லாமல் புதிதாக இயற்றப்பட்ட வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலை பற்றி எதுவுமே குடியரசு தலைவர் உரையில் இடம்பெறவில்லை.
பொதுத்துறை பங்குகளை விற்பது ஏன்?
குடியரசு தலைவர் உரை, விவசாய உள்கட்டமைப்பு நிதி பற்றி பேசுகிறது. ஆனால், அதற்கு மாறாக பட்ஜெட்டில் ஏற்கெனவே உள்ள விவசாய உள்கட்டமைப்புகளான சிபிஎஸ்இ-ன் சேமிப்பு கிடங்கு சொத்துகளான மத்திய கிடங்கு கார்ப்பரேஷன் போன்றவை மற்றும் நஃபெட் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
100 கிசான் ரயில்கள் பற்றி குடியரசு தலைவர் உரை அமைந்திருக்க, பட்ஜெட் உரையில் ரயில்வே சேவைகள் மற்றும் பராமரிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தட சொத்துகளை விற்று பணமாக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருபுறம் இந்த அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை வரி செலுத்துவோரின் பணத்தை செலவு செய்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ரயில் சேவைகளையும் உருவாக்குகிறது. பிறகு அவற்றை விற்று பணமாக்குவது தனியார் நலனுக்காகத்தானா? ஒரு பக்கம் லட்சம் கோடிகளை செலவு செய்து உள்கட்டமைப்புகளை அரசு பெருக்குகிறது. மறுபக்கம் அதன் துறை பங்குகளை விற்கிறது. இந்த அரசு புறம்பான நோக்கத்துக்காக சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்துகிறது என்று நான் பணிவுடன் கூறுகிறேன்.
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு
விவசாய சீர்த்திருத்தம் என்ற போர்வையில் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நாடாளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக அரசாங்கத்தின் சொற்பமான அக்கறையை பிரதிபலிக்கும் வகையில், முறையான பரந்த அடிப்படையிலான ஆலோசனை இல்லாமல் அத்தகைய சட்டங்களை பெருந்தொற்று காலத்தில் கொண்டு வர முகாந்திரமே இல்லை.
மாநில பட்டியலில் 14, 28, 30, 45, 46, 47, 48 ஆகியவை விவசாயம் தொடர்பானவை. எனவே, ஒன்றிய பட்டியல் மற்றும் பொது பட்டியல், மத்திய நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு வெளியே உள்ள விவசாயம் தொடர்பாக மாநில சட்டமன்றங்களுக்கு தனி அதிகாரம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சட்டங்களை மத்திய அரசு எப்படி கொண்டு வந்தது என்பது புரியவில்லை.
வேளாண் சட்டங்களை பொருத்தவரை, அவை மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்றன. விவசாயி என்ற சொல் அதன் உண்மையான பொருளை இழந்து விடுகிறது. இந்த வேளாண் சட்டங்கள், தவறான கட்டமைப்புகளை உருவாக்கும். விவசாயிகள் அறியா வண்ணம், அவர்களுக்கு பல இன்னல்களை அளித்து கொள்முதல் கூட்டமைப்பாளர்களுக்கு அதிக அனுகூலத்தை தரும். இதில் எழும் சட்டப்பூர்வ சிக்கல்களை சட்ட அறிவு பெறாத அரசு அலுவலர்களால் எப்படித் தீர்க்க முடியும்? இந்த சட்டங்கள் கள்ளச்சந்தையை சட்டபூர்வமாக்கி இருப்போர், இல்லாதோருக்கான ஏற்றத்தாழ்வை அதிகமாக்கும் என்று என்.ஆர். இளங்கோ பேசினார்.
பிற செய்திகள்:
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
- தேர்தல் 2021: `கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் `பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- அ.தி.மு.கவை மீட்கும் போராட்டத்தை சசிகலா நடத்துவார்: டி.டி.வி. தினகரன்
- கோவிட்-19- கொரோனா தடுப்பூசி உங்கள் கைகளுக்கு எப்படி வந்து சேரும்
- பருத்திக்கு இறக்குமதி வரி: உண்மையில் இந்திய விவசாயிகளுக்கு பலன் கிடைக்குமா?
- 'எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன்' - நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா
- அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: